Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், யூ.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதும் மாணவர்கள், காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள் பணிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர் களுக்கும்கூட ‘இந்து தமிழ் இயர்புக்' மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் படித்துத் தெரிந்துகொள்ளவும் நிறைய புதிய தகவல்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.
'தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் - கட்சிகளும் கூட்டணிகளும் கடந்துவந்த பாதை’ என்னும் சிறப்பு கட்டுரை, தமிழகத்தில் முதல் தேர்தல் எப்படி நடைபெற்றது, அதில் எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி அமைத்திருந்தன என்பது தொடங்கி அனைத்து விவரங்களையும் தொகுத்துத் தந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பற்றி முழுமையாக அலசியுள்ள கட்டுரை இது.
கரோனா வைரஸ் - மருத்துவம் தொடர்பான சிறப்பு பகுதி இந்த நூலின் இன்னொரு நல்ல அம்சம். கரோனா வைரஸ் எப்படி எல்லாம் பரவுகிறது, அதிலிருந்து எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும், முகக்கவசத்தை எப்படி அணிய வேண்டும் என்பது உட்பட பல விஷயங்கள் தெள்ளத்தெளிவாகத் தரப்பட்டுள்ளன. அந்த வகையில் இது பொது அறிவுப் புத்தகமாக மட்டுமல்லாமல், விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய புத்தகமாகவும் அமைந்துள்ளது.
வரலாற்றில் முக்கிய ஆளுமைகள், 2020இல் மறைந்த முக்கிய ஆளுமைகள் தொடர்பான 60 பேரை அறிமுகப்படுத்தும் பகுதி, அந்த மாமனிதர்கள் நம் நாட்டுக்கும் உலகத்துக்கும் எப்படிப்பட்ட பங்களிப்பையும் சேவைகளையும் அளித்திருக்கிறார்கள் என்பதை விவரிக்கிறது.
இந்திய நிகழ்வுகள், உலக நிகழ்வுகள், நோபல் பரிசுகள் பற்றிய தகவல்கள் என நிகழ்வுகளின் தொகுப்பும் சிறப்பு. 2020ஆம் ஆண்டில் வெளியான முக்கியமான ஆங்கில நூல்களின் பட்டியலும் இடம்பெற்றிருக்கிறது. இதன்மூலம் மற்ற நூல்களையும் படிக்கத் தூண்டியிருப்பது பாராட்டப்பட வேண்டிய அம்சம்.
மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சிபெறுபவர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த நூலைப் படிப்பதன் மூலம் அடிப்படையான பொது அறிவைப் பெறலாம்.
- எம்.ரவி ஐ.பி.எஸ்., கூடுதல் டி.ஜி.பி., சிறப்பு காவல்படை, தமிழ்நாடு காவல்துறை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT