Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM
மெக்கானிக்கல் பொறியியல் துறைக்கு வேலைவாய்ப்பு எப்போதும் பிரகாசமாக இருக்கும். மெக்கானிக்கல் பொறியியல் துறையைப் பொறுத்தவரை கைநிறைய சம்பளத்துடன் வேலைக்கு உத்தரவாதம் அளிக்கும் பிரிவுகளாக பைப்பிங், பைப்லைன் ஆகிய பிரிவுகள் இருக்கின்றன. இன்று அதே அளவு சம்பளத்தையும் வேலைக்கு உத்தரவாதத்தையும் அளிக்கும் பிரிவாகக் கலன் வடிவமைப்புப் பொறியியல் (Equipment Design Engineering) உள்ளது. உலகெங்கும் இன்று அதற்கு நல்ல தேவையும் உள்ளது.
நிலையான கலன்
நிலையான கலன் (Static Equipment) என்பது அதன் பெயரே கூறுவதுபோல் இயக்கமற்று, நிலையாகவே இருக்கும். பம்புகள், கம்பிரசர்போல் இயங்கும் பாகங்களை அது கொண்டிருக்காது. சேமிப்புத் தொட்டிகள் (Tanks), அழுத்தக் கலன்கள் (pressure vessels), வெப்பப் பரிமாற்றிகள் (heat exchangers), நெடுந்தூண் கலன் (Column), புகைபோக்கி (chimney), பிக் லாஞ்சர், பிக் ரிசீவர் போன்ற கலன்கள் இவற்றில் அடங்கும்.
உரத் தொழிற்சாலை, எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, பெட்ரோலிய ரசாயன ஆலை, எரிவாயு உற்பத்தி ஆலை, மருந்துப்பொருள் உற்பத்தி ஆலை, உணவு பதப்படுத்தும் ஆலை போன்ற எல்லா வகை பெரிய தொழிற்சாலைகளிலும் இந்தக் கலன்களை நாம் காணலாம். சொல்லப்போனால் கலன்கள் இல்லாத ஆலைகளே இல்லை.
கலன்களின் வடிவும் அளவும்
இந்தக் கலன்கள் பல்வேறு வடிவங்களில், பல்வேறு அளவுகளில் பயன்பாட்டில் உள்ளன. இந்த வகைத் தொழிற்சாலைகளில் 30 மீட்டர் உயரமும், 100 மீட்டர் விட்டமும் கொண்ட கலன்கள் முதல் நம் வீடு தேடி வரும் எரிவாயு சிலிண்டர்வரை வெகு சாதாரணமாகக் காணலாம்.
பயன்பாட்டுக்கு ஏற்ப இவை செவ்வக வடிவமாகவோ கிடைமட்ட உருளை வடிவத்திலோ (Horizontal cylinders), செங்குத்து உருளை வடிவத்திலோ (vertical cylinders), கோள வடிவ வடிவத்திலோ (spherical in shape) வடிவமைக்கப்படுகின்றன. திரவ / வாயு வடிவிலுள்ள பொருள்களைக் கலன்களில்தான் சேமித்து வைக்க முடியும். தொழிற்சாலைகள் தங்களது மூலப்பொருள்களையும் உற்பத்தி பொருள்களையும் சேமித்துவைப்பதற்கு ராட்சச அளவிலான கலன்களைப் பயன்படுத்துகின்றன.
என்னென்ன வேலைகள் உள்ளன?
கலன் வடிவமைப்புப் பொறியாளர் (Static Equipment Engineer), கலன் பகுப்பாய்வுப் பொறியாளர் Static Equipment Analyzer), கலன் வரைவாளர் (draughtsman) உள்ளிட்ட பல வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.
கலன் வடிவமைப்புப் பொறியாளரின் பணி, கலன் அளவையும் தடிமனையும் கலனில் சேமிக்கப்படும் திரவம் அல்லது வாயு, அதன் வெப்பம், அழுத்தம், சூழலின் தட்பவெப்பம் ஆகியவற்றைப் பொறுத்து வடிவமைப்பதாகும். கலன் பகுப்பாய்வுப் பொறியாளரின் பணி, கலனின் திறனை மென்பொருள் மூலம் பகுத்தாராய்வதாகும்.
கலன் வரைவாளரின் பணி, மேலே சொல்லப்பட்ட மற்ற பொறியாளர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் கலன் வரைபடம் (Equipment Drawing) வரைந்து, அதைக் கட்டுமானப் பணிக்குக் கொடுப்பதாகும்.
என்ன படிக்க வேண்டும்?
இயந்திரவியல் பொறியியல் பட்டதாரிகள், வடிவமைப்புப் பொறியாளராக விரும்பினால் ASME, TEMA, API 650, API 653 & API 620 போன்ற தொகுப்புகளை (codes and standards) பற்றிப் படிப்பது அவசியம். பகுப்பாய்வுப் பொறியாளர் ஆவதற்கு PV- ELITE, API 650 TANK, Coade Tank போன்ற மென்பொருள்களைக் கற்பது அவசியம். வரைவாளர் ஆவதற்கு அடிப்படைப் பொறியியல் அறிவும் Autocad போன்ற மென்பொருளில் தேர்ச்சியும் தேவை.
எங்கே படிக்கலாம்?
உத்தராகண்டின் தலைநகரமான டேராடூனில் பெட்ரோலியம் - எரிசக்தி படிப்புக்கான பல்கலைக்கழகத்தில் (University of Petroleum and Energy Studies (UPES)) எம்.டெக். ( M.Tech) படிக்கலாம். இது இரண்டு ஆண்டுப் படிப்பு. படித்து முடித்தால் வேலைக்கு முழு உத்தரவாதம் உண்டு. இது தவிர மும்பை ஐ.ஐ.டி., புனேயில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Maharashtra Institute of Technolgy -MIT), சுவித்யா தொழில்நுட்பப் பயிலகம், ஷ்ரத்தா தொழில்நுட்பப் பயிலகம் (Shradda Institute of Technology) ஆகியவற்றில் பயிற்சிபெற்று சான்றிதழ் பெறலாம்.
ASTS Global -ல் இணையம் மூலமாக ஆறு மதங்களில் PG Diploma படிக்கலாம், ஆனால் இதற்கு ரூ. 3.5 லட்சம்வரை செலவாகும். ASTS Global-ன் பிரிவு சென்னையிலும் உள்ளது. நொய்டாவிலும் ஜெய்ப்பூரிலும் உள்ள கெய்ல் பயிற்சியகமும் (GAIL Training Institute) இத்துறையில் பயிற்சி அளிக்கிறது. சென்னையில் ImageGrafix Engineering Services பயிலகமும் இத்துறையில் பயிற்சியளிக்கிறது.
வேலைவாய்ப்பு
IOCL, Indian Oil Pipeline Division, GAIL, BPCL, HPCL, ONGC, Oil India, GSPL, Technip, Petrofac, Saipem, Jacobs, Toyo, Worley Parson, MOT Mcdermott, JP Kenny, Flour Daniel, Fitchner, NTPC, Reliance Industries Ltd ஆகிய பெரு நிறுவனங்கள் இந்தியாவில் இத்துறையினருக்கு வேலைவாய்ப்பளிக்கின்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல்; அரேபிய வளைகுடா நாடுகள் (சவுதி, குவைத், ஷார்ஜா, ஓமன், கத்தார், புருனே), ஈரான், ஈராக், ஐரோப்பிய நாடுகள் (குறிப்பாக நெதர்லாந்து), ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, அமெரிக்கா, கனடா, மலேசியா, நைஜீரியா போன்ற நாடுகளிலும் இத்துறையினருக்கு நல்ல தேவையுள்ளது.
அனுபவமே சிறந்த தகுதி
இத்துறையைப் பொறுத்தவரை படிப்புத் தகுதியைவிட, அனுபவ அறிவுக்குத்தான் மதிப்பு அதிகம். பட்டதாரிகள் சிறிய நிறுவனங்களில் வேலைக்குச் சென்று ஓரிரு ஆண்டுகள் இத்துறையில் அனுபவம் பெற்றால் வாழ்நாள் முழுவதும் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலையில் இருக்கலாம். ஏனென்றால், இத்துறையைப் பொறுத்தவரை அனுபவமே முக்கியம்.
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT