Published : 17 Mar 2020 08:37 AM
Last Updated : 17 Mar 2020 08:37 AM
எஸ்.எஸ்.லெனின்
கரோனா அச்சம், ‘விசா’ இழுத்தடிப்பு, கடல் தாண்டிய பயணம், சொத்தைக் கரைக்கும் கல்விச் செலவினங்கள் இப்படியான சங்கடங்கள் எதுவுமின்றி, தமிழகத்தின் குக்கிராமத்து மாணவர் ஒருவரால் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெறுவது சாத்தியமா? நிகழ்நிலை (ஆன்லைன்) கல்வியின் நவீன மாற்றங்கள் அதை நிகழ்த்திக் காட்ட வருகின்றன. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள், போட்டித் தேர்வுகளிலும், தொலைதூரக் கல்வியின் இன்னொரு வடிவமாகவும் இதுவரை அறியப்பட்ட ஆன்லைன் கல்வியில் அநேக மாற்றங்கள் சேர்ந்து வருகின்றன.
இந்தியாவில் 5 முதல் 24 வயதுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடியை தாண்டுகிறது. தொடக்கக் கல்வி தொடங்கி ஆராய்ச்சிப் படிப்பு வரையிலான வயது வரம்பு இது. அவர்களுக்காகப் பல்வேறு அடுக்கிலான கல்வித் தேவைகளை நிறைவுசெய்ய மரபான கல்வி நிறுவன அமைப்புகள் இனிப் போதாது. இதற்காக கல்வித் துறையின் உள்ளூர் ஏற்பாடுகளுக்கு அப்பால், நேரடி அந்நிய முதலீடுகளும் பெருமளவில் திறந்துவிடப்பட்டன.
புத்தாயிரம் ஆண்டு பிறந்தது முதல் சென்ற ஆண்டு வரை சுமார் இரண்டரை பில்லியன் அமெரிக்க டாலருக்கான அந்நிய முதலீடுகள் இந்தியாவில் சேர்ந்துள்ளன. விதைக்கப்பட்ட இந்த முதலீடுகள் வளர்ந்து பலனளிக்கும் காலம் இது. அந்தப் பலன்களில் ஆன்லைன் கல்வி முக்கியமானது. புத்தாயிரத்தில் மெதுவாகத் தொடங்கிய இந்தப் பயணம் 20 ஆண்டுகளில் தற்போது புது வேகம் எடுத்திருக்கிறது. நவீன ஆன்லைன் கல்வி முறையின் தாக்கம் காரணமாக, அசத்தும் புதிய மாற்றங்களுக்கு நாம் தயாராக வேண்டிய காலமிது.
பாதிக் கிணறு தாண்டியுள்ளோம்
தற்போது நாடெங்கும் ‘டிஜிட்டல் புரட்சி’ அதிகம் விவாதிக்கப்படுகிறது. அவை ஆக்கிரமிக்கும் துறைகளின் வரிசையில் கல்வித் துறையும் அடங்கும். தற்போது வழக்கிலிருக்கும் கல்வி முறைகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள், கற்றல் - கற்பித்தல் முறைகள் என அனைத்துமே புதிதாக உருவெடுக்க உள்ளன.
இவற்றில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பாடப் புத்தகங்களின் ‘க்யூ ஆர் கோட்’ வசதிகள், கல்விக்கென பிரத்யேக ஒளிபரப்புகள், இணைய தளங்கள், தரவுகளை விளக்கும் வீடியோ பதிவுகள், ஆய்வகச் சோதனைகளை விளக்கும் பதிவுகள் என ஆன்லைன் கல்வி முறையை நோக்கிய பயணம் ஏற்கெனவே தொடங்கிவிட்டது. புதிய மாற்றங்களுக்கே உரிய நடைமுறைச் சிக்கல்கள் - தடு மாற்றங்களுக்கு ஆன்லைன் கல்வி முறையும் விதிவிலக்கல்ல. ஆனால், கிடைக்கும் அனுகூலங்கள் அடிப்படையில் அவற்றை வரவேற்க வேண்டியுள்ளது.
ஆன்லைன் அனுகூலங்கள்
எங்கிருந்தும் எப்போதும் கல்வியைப் பெற முடிவதும், அதை அனைவருக்கும் சாத்திய மாக்குவதும் தான் ஆன்லைன் கல்வியின் முதல் பயனாக இருக்கும். முக்கியமாக வழமையான அனைவருக்கும் பொதுவான கற்பித்தல் அமையாது, மாணவரின் இயல்பு - தனித்துவத் தேவைக்கு ஏற்ற கற்றலைப் பெற முடியும்.
இது மீத்திறன் மாணவர்கள், மெல்லக் கற்போர், கற்றல் குறைபாடு உள்ளோர் - சிறப்புக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். சிறந்த கல்வி நிலையங் களுக்கான அலைச்சல், கல்வி நிலையக் கட்டமைப்பு, சிறந்த ஆசிரியருக்கான தட்டுப்பாடு ஆகியவற்றுடன் புத்தகப் பொதி, பள்ளி கல்லூரிக்கான பயணம், நேர விரயம் போன்றவற்றிலிருந்தும் மாணவர்களுக்குப் பெரும் விடுதலை கிடைக்கும்.
வகுப்பறைக் கற்றலைவிட ஆன்லைன் கல்விமுறையில் மாணவர்கள் கூடுதல் திறன்களைப் பெறுவது சாத்தியமாகும். வெவ்வேறு கல்வி நிறுவனங்களின் வாயிலாக ஒரே நேரத்தில் பல்வேறு படிப்புகளைப் பெறுவதும் உயர் கல்விக்கு உதவும். வருங்காலத்தின் பன்மயப்பட்ட தொழில் வளர்ச்சியை எதிர்கொள்ளும் பணித்திறனுக்கு அவை ஈடுகொடுக்கும். தலைசிறந்த கல்வி நிறுவனம் ஒன்றின் மரபான மாணவர் சேர்க்கையைவிட, ஆன்லைன் கல்வியில் ஏராளமானோர் சேர வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களின் தேவை, விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து பாடங்களைப் படிக்கவும் முடியும்.
தேர்வு முறையின் அழுத்தங்கள் குறையும். ஒத்த அலைவரிசையிலான மாணவர்கள் குழுவாக ஒன்றிணையவும் பாடச் செயல்களை ஆன்லைனில் ஒருங்கிணைத்துக் கொண்டுசெல்லவும் இயலும். பொருளாதாரம், பலதரப்பிலுமான நெகிழ்வுத் தன்மை, பிரத்யேகக் கவனம், செறிவும் வீரியமும் நிறைந்த கற்றல் – கற்பித்தல் செயல்பாடுகள் ஆகியவை சாத்தியமாகவும் ஆன்லைன் கல்வி முறை வழி செய்யும்.
பூகோள எல்லைக்கோடுகளை அழித்து சாமானிய மாணவர் ஒருவருக்கு உலகின் தலைசிறந்த பேராசிரியரின் பாடங்களைக் கேட்க முடிவதும், அவரிடம் ஐயங்கள் தீர்த்து தேவையான வழிகாட்டுதல்களைப் பெறுவதும் சாத்தியமாகும். நவீனத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் மாணவரின் தேவைக்கேற்ற வழிகாட்டுதலை வழங்கவும் ஆசிரியரால் இயலும். அப்படியான தொழில்நுட்பங்கள் பலவும் நம் கைகளுக்கு எட்டத் தொடங்கியுள்ளன.
களமிறங்கும் தொழில்நுட்பங்கள்
செயற்கைக்கோள் அலைவரிசை மூலமான பிரத்தியேகக் கல்வி ஒளிபரப்புகள், நேரடி ஒளிபரப்பிலான ஆசிரியரின் கற்பித்தல்கள், அவருடனான மாணவர்களின் இடையீடுகள் - சந்தேக நிவர்த்திகள் போன்ற பலதும் தற்போது நடைமுறையில் உள்ளன. இதன் அடுத்தகட்டப் பாய்ச்சலாக வேறுபல தொழில்நுட்பங்களும் கைகோத்து உதவ உள்ளன.
இவற்றுடன் ‘வெர்சுவல் ரியாலிட்டி’ உதவிகள், இளம்பருவத்தினருக்குப் பிடித்தமான ‘இணைய விளையாட்டு வழி’ கற்றல் செயல்பாடுகள் ஆகியவை மாணவர்கள் ஈடுபாட்டுடன் கற்க உதவுகின்றன. தரவு சேகரிப்பு, வழிகாட்டுதல் பெறுதல், ஆய்வகச் செயல்பாடுகள் முதலானவற்றில், மெய்நிகர் உலகின் நீட்சியை நடைமுறையில் கைக்கொள்ள முப்பரிமாண பிரிண்டிங் உத்திகளும் உதவக் காத்திருக்கின்றன.
வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள் வரை வந்துவிட்ட ‘இன்டர் நெட் ஆஃப் திங்ஸ்’ நுட்பத்தின் பலாபலன்களைத் தற்போது கல்வி நோக்கிலும் பெறலாம். கல்விச் செயல்பாடுகளுக்கு உதவும் உபகரணங்கள், IoT மூலமாகப் புது அவதாரம் எடுக்கின்றன. பிற துறைகளில் நடைமுறையில் உள்ள ‘மேகக் கணினியம்’ நுட்பங்கள் மூலமாக, கடலளவு தரவுகளைச் சேகரிக்கவும், சரிபார்க்கவும், ஆசிரியர் - சக மாணவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், மாணவர் அடைவுகளை ஆசிரியர் - பெற்றோர் இணைந்து கண்காணிக்கவும் மேகக் கணினியம் உதவும்.
கல்வித்துறைக்குப் புதிய வரவான ‘ஆக்மென்டட் ரியாலிட்டி’, பாடச்செயல்களின் மாணவர்களின் பங்கேற்பை உயர்த்தும். இந்த நுட்பங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கு அடுத்த தலைமுறை காணும் ‘செயற்கை நுண்ணறிவு’ நுட்பம் உதவும். குறிப்பாக, ஆசிரியரின் பணிச்சுமைகளைக் குறைப்பதும், மாணவர்களின் தனித்திறன், தடுமாற்றங்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப அணுகுவதில் உள்ள தடைகளைக் களைவதும் இனி எளிதாகும்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT