Published : 10 Mar 2020 11:24 AM
Last Updated : 10 Mar 2020 11:24 AM
உப்பு… நாம் அன்றாடம் உண்ணும் உணவில் அத்தியாவசிய உட்பொருள். ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்ற முதுமொழி உணவில் உப்பின் இன்றியமையாமையை உணர்த்திவிடும். உப்புக்கும் நம் நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாறுக்கும் முக்கியத் தொடர்பு உண்டு. இந்தியாவுக்கு முழுமையான விடுதலை வேண்டி மகாத்மா காந்தி சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். அதன் ஒரு பகுதியாக பிரிட்டிஷ் அரசு 1882-ல் பிறப்பித்த உப்புச் சட்டத்தை எதிர்த்துத் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தார்.
உப்புச் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?
பிரிட்டிஷார் மட்டுமே இந்தியாவில் உப்பை உற்பத்தி செய்யவும் விற்கவும் முடியும் என்று பிரிட்டிஷ் அரசு பிறப்பித்தது உப்புச் சட்டம். இது உப்பு உற்பத்தியில் பிரிட்டிஷாருக்கு ஏகபோக உரிமையை அளித்தது.
கடல்நீரை ஆவியாக்குவதன் மூலம் உப்பளங்களில் எளிதாக உப்பைத் தயாரிக்க முடியும். எனவே, கடற்கரைப் பகுதிகளில் வசித்த பல இந்தியர்கள் உப்பு உற்பத்தியிலும் விற்பனைத் தொழிலிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டுவருகின்றனர். இந்தியர்கள் உப்பு உற்பத்தி, விற்பனை செய்வதை பிரிட்டிஷ் அரசு குற்றமாக்கியது. இந்திய மக்கள் மிக அதிக விலை கொடுத்து பிரிட்டிஷாரிடமிருந்து உப்பை வாங்கும் நிர்ப்பந்தத்தை இந்தச் சட்டம் ஏற்படுத்தியது.
1930 ஜனவரி 26 அன்று கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ‘இந்தியாவுக்கு முழுமையான சுயாட்சி உரிமை வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதோடு ‘சட்ட மறுப்பு இயக்க'த்தை எவ்வாறு தொடங்குவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை காந்திக்கு வழங்கியது. ஆனால் பல உறுப்பினர்கள் உப்புச் சட்டத்தை மீறும் காந்தியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அச்சட்டம் சமூக, பொருளாதார அந்தஸ்தைக் கடந்து அனைத்துத் தரப்பு மனிதர்களையும் பாதிப்பதாகவும், அதனால் அது உடனடியாக எதிர்க்கப்பட வேண்டும் என்றும் காந்தி கருதினார்.
எனவே, 1930 மார்ச் 12 அன்று தனது ஆதரவாளர்கள் 78 பேருடன் சபர்மதி ஆசிரமத்திலிருந்து குஜராத்தின் சிறிய கடற்கரை கிராமமான தண்டிக்கு அவர் நடைபயணம் புறப்பட்டார். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்றும் ‘தண்டி யாத்திரை’ என்றழைக்கப்படும் அந்த 384 கிலோ மீட்டர் நடைபயணத்தில், பல கிராமங்களை காந்தி கடந்து சென்றார். ஒவ்வொரு கிராமத்திலும் மக்களைச் சந்தித்து காந்தி உரையாடினார். ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பலர், காந்தியின் நடைபயணத்தில் இணைந்துகொண்டனர். தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவரும் வெள்ளை நிற கதர் உடையை அணிந்திருந்ததால் அது ‘பாயும் வெள்ளை நதி’ என்று உருவகமாக அழைக்கப்பட்டது.
1930 ஏப்ரல் 6 அன்று தண்டியை அடைந்த காந்தி, சுத்திகரிக்கப்படாத உப்பை கைநிறைய அள்ளியதன் மூலம் உப்புச் சட்டத்தை மீறினார்.
“இதன் மூலம் பிரிட்டிஷ் பேரரசின் அடித்தளத்தை நான் அசைக்கிறேன்” என்று காந்தி அறிவித்தார்.
எதிர்வினைகள்
காந்தியால் ஈர்க்கப்பட்டு நாடு முழுவதும் பலர் உப்பெடுத்து உப்புச் சட்டத்தை மீறினர். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவதற்குள் பிரிட்டிஷ் அரசு இது தொடர்பாக 60,000 பேரைக் கைது செய்திருந்தது. இந்தியர்கள் உப்புச் சட்டத்தை மட்டுமல்லாமல் பிரிட்டிஷ் அரசின் வேறு சில நியாயமற்ற சட்டங்களையும் மீறத் தொடங்கியிருந்தனர். முதல்முறையாகப் பெண்கள் அணி அணியாக வந்து, உப்பு சத்தியாகிரக இயக்கத்தில் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக தண்டிக்கு தெற்கே 40 கி.மீ தொலைவில் இருந்த ‘தராசனா சால்ட் ஒர்க்ஸ்' என்ற நிறுவனத்தை முற்றுகையிட காந்தி திட்டமிட்டிருந்தார். அதற்கு முன்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். மற்ற தலைவர்களான அப்பாஸ் தைபாஜி, சரோஜினி நாயுடு ஆகியோர் தராசனா சத்யாகிரகத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது அரசு வன்முறைத் தாக்குதல் நடத்தியது. போராட்டக்காரர்கள் சிலர் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT