Published : 04 Feb 2020 11:35 AM
Last Updated : 04 Feb 2020 11:35 AM

தேர்வுக்குத் தயாராவது எப்படி?

முகமது ஹுசைன்

அறிவை வளர்ப்பதே கல்வி. நமது கல்வி முறையில் அறிவின் வளம், கற்றதன் அடிப்படையிலோ புரிதலின் அடிப்படையிலோ முடிவுசெய்யப்படுவது இல்லை.

அது தேர்வின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது, புரிதலின் அளவு, அந்தத் தேர்வில் நாம் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் முடிவு செய்யப்படுவதால்தானோ என்னவோ, தேர்வு என்றவுடன் மாணவர்களுக்குப் பயமும் ஏற்பட்டுவிடுகிறது.

குளிர்காலம் முடிந்து கோடைக் காலம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. கோடை வந்தவுடன் வாட்டி வதைக்கும் வெயில் மட்டுமல்ல; உள்ளூர நடுக்கத்தை ஏற்படுத்தும் தேர்வு பயமும் மாணவர்களிடம் தொற்றிக்கொள்ளும். கோடையின் வெப்பத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், தேர்வு பயத்தை நம்மால் தவிர்க்க முடியும். தேர்வு பயத்தைத் தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகள் இங்கே.

ரிவிஷன் முக்கியம்

படிக்கும்போது புரிந்து படிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம், கிடைக்கும் இந்தக் குறைந்த நாட்களில் ரிவிஷன் செய்வது. அதாவது, படித்ததைத் திரும்பிப் படிப்பது. ரிவிஷனின் தரமே நீங்கள் எடுக்கும் மதிப்பெண்ணைத் தீர்மானிக்கும். ரிவிஷன் தொடங்குவதற்குத் தாமதம் என்று எதுவுமில்லை. ஒழுங்காகத் திட்டமிட்டால், இருக்கும் நாட்களுக்குள் உங்களால் முழுவதையும் நன்கு ரிவிஷன் செய்துவிட முடியும்.

ரிவிஷன் அட்டவணை முக்கியம்

எந்தச் செயலையும் 20-30 நிமிடங்கள்வரை செய்தால்தான் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது கவனமும் ஒருமுகத் தன்மையும் அப்போதுதான் அதிகமாக இருக்கும். ரிவிஷன் அட்டவணை தயாரிக்கும்போது இதைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பாடத்துக்கும் இடையே இடைவெளி இருக்குமாறு திட்டமிடுவது நல்ல பலனளிக்கும். அது மட்டுமல்லாமல்; ஒரே பாடத்தைத் தொடர்ந்து படிக்காமல், வெவ்வேறு பாடங்களை மாற்றி மாற்றிப் படிக்கும்படி அட்ட வணையை வடிவமைப்பது சலிப்பை ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

உடற்பயிற்சி முக்கியம்

மாணவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம், குறிப்பாக மும்முரமாகப் படிக்கும் நாட்களில். ஒரு நாள் ரிவிஷனுக்குப் பின், 30 நிமிடங்கள் ஜாக்கிங் செல்வது மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். உடற்பயிற்சி, இதயத் துடிப்பை அதிகரிக்கும். உடம்பினுள் ரத்த ஓட்டத்தை வேகப்படுத்தும். இதனால், மூளைக்கு அதிக ஆக்ஸிஜன் கிடைக்கும். இது மூளையைச் சுறுசுறுப்பாக்கி, அதன் செயல்பாட்டை அதிகரித்து, சோர்வையும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

அமைதியான இடம்

ஆழ்ந்து படிப்பதற்கும் கவனத்தை அதிகரிக்கவும் அமைதி மிகவும் முக்கியம். நீங்கள் ரிவிஷன் செய்யும் இடம், அமைதி தவழும் இடமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது, ரிவிஷன் திறனை வெகுவாக மேம்படுத்தும். வீட்டிலிருக்கும் உங்கள் அறையோ உள்ளூர் நூலகமோ படிப்பதற்கு வேண்டிய அமைதியை அளிக்கும். பூங்கா போன்ற பொதுவெளியில் ரிவிஷன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மட்டுமே பூங்காவில் படிப்பது பலனளிக்கும், உங்கள் கவனம் சிதறுவதற்கு அங்கே சாத்தியம் அதிகம்.

காலையிலேயே தொடங்குங்கள்

காலையில் உடல் மட்டுமல்ல; மனமும் மூளையும் புத்துணர்வுடன் இருக்கும். படிப்பதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகக் காலையில் தொடங்குவது நல்லது, ரிவிஷன் அட்டவணையை அதிகாலையிலேயே தொடங்குமாறு வடிவமைத்து, அந்த அட்டவணையின்படி படிக்க முயல வேண்டும். காலையிலேயே நீங்கள் ரிவிஷன் செய்யத் தொடங்கினால், அன்று திட்டமிட்ட அனைத்தையும் நீங்கள் படித்து முடிக்க அதிக வாய்ப்புள்ளது.

ரிவிஷனை சுவாரசியமானதாக மாற்றுங்கள்

இதற்குக் கொஞ்சம் வண்ணத்தைப் பயன்படுத்துங்கள்! வண்ணமயமான கற்றல் வரைபடங்களை வரைவது, தரவுகளை மனப்பாடம் செய்ய உதவும். கறுப்பு - வெள்ளை நிறங்களைக் காட்டிலும் வண்ணமயமான குறிப்புகளை மனப்பாடம் செய்வது எளிது. இதை முயன்று பாருங்கள், வித்தியாசம் உங்களுக்கே புரியும்.

கடந்த காலத் தேர்வுத் தாள்களைப் படியுங்கள்

கடந்த காலத் தேர்வுத் தாள்கள் புத்தகமாகவே கிடைக்கின்றன. அது கிடைக்கவில்லை என்றால், அதை உங்கள் ஆசிரியரிடமோ கூகுளிடமோ கேளுங்கள். பழைய கேள்வித் தாள்களுக்கு விடையளித்துப் பழகுவது, தேர்வில் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, அதிக மதிப்பெண்களைப் பெறவும் உதவும். பயங்கர புதுமையான கேள்விகளைக் கண்டுபிடிப்பதில், தேர்வுத் தாளை வடிவமைப்பவர்கள் அக்கறையோ சிரத்தையோ எடுத்துக் கொள்வதில்லை. எனவே, மூன்றோ நான்கோ பழைய தேர்வுத் தாள்களை எழுதிப் பழகினால், அவற்றிலிருந்து சில கேள்விகள் இந்த ஆண்டில் வருவதற்கு வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுருக்கமாகக் குறிப்பு எடுங்கள்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே பாடத்தைப் படிப்பது, மனப்பாடம் செய்வதற்கு ஒருபோதும் போதாது. குறிப்புகளை மீண்டும் மீண்டும் எடுப்பதன் மூலமே நாம் தகவல்களை மனப்பாடம் செய்ய முடியும். மிகவும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் ஒரே குறிப்புகளின் மூன்று தொகுப்புகளைத் தேர்வுவரை படித்துள்ளார்கள் என்பதே நிதர்சனம்.

நீங்களே வெகுமதி அளியுங்கள்

படிப்பதற்குப் போதிய இடைவெளி தேவை. படிப்புக்கும் ஓய்வுக்கும் இடையில் சரியான சமநிலையைப் பேணும் மாணவர்களே அதிக மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். உதாரணமாக, நன்கு ரிவிஷன் செய்த நாளுக்குப் பிறகு நண்பர்களுடன் ஒரு சினிமாவுக்குச் செல்லுங்கள் அல்லது உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு கொடுத்துக் கொள்ளுங்கள்.

குடும்பத்தினரைப் பயன்படுத்துங்கள்

நீங்கள் படித்ததைச் சோதித்துப் பார்க்கவும், ஒப்பிக்கவும் உங்கள் குடும்பத்தினரின் உதவியைப் பெறுங்கள். ஆனால், அதற்கு முன்னர் சோதிப்பதற்கு எளிமையான ரிவிஷன் குறிப்புகளை நீங்கள் உருவாக்கியிருக்க வேண்டும். வெவ்வேறு கேள்விகளை மாற்றி மாற்றி அவர்களைக் கேட்கச் சொல்லலாம். முற்றிலும் புதிதான கேள்விகளையும் கேட்கச் சொல்லலாம். இது ரிவிஷனுக்கு மட்டுமல்ல; சலிப்பூட்டும் கடின உழைப்பிலிருந்து விடுபடவும் உதவும்.

நேர்மறையாகச் சிந்தியுங்கள்!

சமூகத்தின் உயர்நிலையில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே இருப்பதில்லை. குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களும், ஏன் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் சமூகத்தின் உயர்நிலையிலிருந்துள்ளார்கள் என வரலாறு தெரிவிக்கிறது, நமது முன்னாள் முதல்வர் காமராஜர், சச்சின் டெண்டுல்கர் என நீளும் இந்தப் பட்டியல் மிகவும் பெரியது. ஒரு தேர்வின் முடிவால், வாழ்வே முடிந்துவிடும் என்று எண்ணுவது வேடிக்கையாக இல்லையா? தேர்வும் அதில் பெறும் மதிப்பெண்ணும் முக்கியம்தான்.

ஆனால். உங்களின் லட்சியத்தையும் வாழ்க்கையின் போக்கையும் மாற்றும் வல்லமை அதற்கு ஒருபோதும் இல்லை என்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள். தேர்வைப் பற்றியோ அதன் முடிவு என்னவாகும் என்பதைப் பற்றியோ கவலைப்படாதீர்கள். படிப்பது மட்டுமே உங்கள் கையில் உள்ளது, எனவே சிரத்தையுடன் படியுங்கள், ஆழ்ந்து படியுங்கள். உண்மையான கடின உழைப்புக்கு எப்போதும் பலன் உண்டு.

மாதிரி அட்டவணை

கட்டுரையாளர் தொடர்புக்கு: mohamedhushain@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x