Published : 04 Feb 2020 11:11 AM
Last Updated : 04 Feb 2020 11:11 AM

கல்விச் சேவை: நேற்று தலையில் செங்கல்…இன்று கழுத்தில் ஸ்டெத்!

வா. ரவிக்குமார்

செங்கல் சூளையில் குழந்தைத் தொழிலாளி யாக இருந்து மீட்கப்பட்ட தசரதனும் அவருடைய தம்பியும் முறையே நான்காம் வகுப்பிலும் ஒன்றாம் வகுப்பிலும் சிறகு மாண்டிசோரி பள்ளியில் சேர்ந்தனர்.

9 முதல் 12-ம் வகுப்பு வரை என்.ஐ.ஓ.எஸ். (நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங்) வழியாகத் தேர்ச்சி பெற்ற தசரதன், ரஷ்யாவில் `க்ரிமியா மெடிக்கல் ஸ்டேட் பல்கலைக்கழக’த்தில் ஆறு ஆண்டு மருத்துவம் படித்ததுடன், டெல்லியில் எம்.சி.ஐ. தேர்விலும் தற்போது வெற்றிபெற்றிருக்கிறார்.

சமூகத்தில் விளிம்பு நிலையில் வாழும் குழந்தைகளுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களை முதல் தலைமுறைப் படிப்பாளிகளாகவும் பட்டதாரிகளாகவும் தொழில் முனைவோர்களாகவும் உருவாக்கும் பணியில் 20 ஆண்டுகளாக ஈடுபட்டுவருகிறது சுயம் அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையின் ஓர் அங்கம்தான் சிறகு மாண்டிசோரி பள்ளி.

பள்ளி ஞாபகத்தால் தவித்தேன்

``2005-ல் நானும் தம்பியும் சிறகு மாண்டசோரி பள்ளிக்கு வந்தோம். நாங்கள் செங்கல் சூளையில் குடும்பத்தோடு வேலை செய்துகொண்டிருந்தோம். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ந்து படிக்க வைக்கிறோம் என்று உமா மேடமும் முத்துராமன் சாரும் எங்கள் பெற்றோரிடம் சொன்னார்கள். ஆனால், சென்னைக்கு எங்களை அனுப்ப என்னுடைய பெற்றோர் தயங்கினார்கள். எங்களுடைய முதலாளி அவர்களுக்குத் தைரியம் கொடுத்து, எங்களைச் சென்று படிக்கச் சொன்னார்.

சிறகு மாண்டிசோரி பள்ளியில் இயற்கை நடை, செயல்முறையின் மூலமாகவே கற்றுக்கொள்வது என வழங்கப்பட்ட பயிற்சிகள் கல்வியை எனக்கு விருப்பமான ஒன்றாக்கின. சர்வதேசப் பாடத்திட்டத்தின்கீழ் பத்தாவது பரீட்சை எழுதினோம். பன்னிரண்டாம் வகுப்பில் 1047 மதிப்பெண் எடுத்தேன்.

முதலில் ஜப்பானுக்குச் சென்று படிப்பதாகத்தான் இருந்தேன். அங்கு அடிக்கடி சுனாமி வரும் என்று என் பெற்றோருக்குத் தெரிந்துவிட்டதால், அங்கு படிக்கப் போகவில்லை. டாக்டராக வேண்டுமென்று நினைத்தேன். என்னுடைய விருப்பத்தை சுயம் நிர்வாகிகளிடம் கூறினேன். அவர்களுடைய ஏற்பாட்டின்படி உக்ரைன் நாட்டுக்கு மருத்துவம் படிக்கச் சென்றேன்.

எல்லோருக்கும் ஹோம் சிக் வரும். எனக்கோ ஸ்கூல் சிக்தான் வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டேன். `அங்கு ரொம்பவும் சிரமமாகத் தோன்றினால் வந்துவிடு.. உன் வாழ்க்கை உன் கையில்’ என்று எங்கள் ஆசிரியர் உமா சொன்னார். மைனஸ் 25 டிகிரி குளிரில் கை, கால் எல்லாம் விறைத்துப் போகும். மூக்கிலிருந்து ரத்தம் வரும். நடைமுறைச் சிரமங்களைத் தள்ளிவைத்துவிட்டுப் படிப்பில் கவனம் செலுத்தினேன்.

ரஷ்ய மொழி கட்டாயம்

முதல் ஆண்டு ரஷ்ய மொழியைப் படிக்க வேண்டும். அங்கிருக்கும் நோயாளிகளிடையே பேசுவதற்கும் மருத்துவம் சார்ந்த பணிகளைத் தொய்வில்லாமல் செய்வதற்கும் அவர்களுடைய மொழியைக் கட்டாயம் படிக்கும் வழக்கத்தை வைத்திருக்கின்றனர். மருத்துவம் சார்ந்த தகவல் பரிமாற்றத்துக்கும், அந்த மொழி எங்களுக்கு உதவியது. இதற்காக ஒலிம்பியாட் எழுதி தேர்ச்சிபெற்றேன்.

பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றால், எல்லாப் பாடப்பிரிவுகளையும் திரும்பப் படித்து எழுத வேண்டும். இப்படித்தான் ஆறு ஆண்டுகள் உக்ரைனில் படித்தேன். சோஷியல் மெடிசின் போன்ற படிப்புகள் இந்திய மருத்துவச் சூழலுக்குப் பெரிதும் அந்நியமானதாக இருந்தாலும், அதைத் தெரிந்து கொண்டது பெரிய அனுபவமாக இருந்தது.

இவனை டாக்டருக்குப் படிக்க வைக்கிறதுனால என்ன லாபம்? படிச்சிட்டு இவன் திரும்ப வருவானா என்றெல்லாம் என் காதுபடவே நிறையப் பேர் பேசினார்கள். இதோ நான் படித்த பள்ளிக்கும் மக்களுக்கும் சேவை செய்ய ஒரு மருத்துவரா திரும்ப வந்துட்டேன்னு அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்!” என்று உற்சாகத் துடன் கூறுகிறார் டாக்டர் தசரதன்.

சுயத்தை வெளிப்படுத்தும் சுயம்

“சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் குடும்பங்களின் குழந்தைகளுக்கே சிறகு பள்ளியில் முதலிடம் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு வரை 300 குழந்தைகள் படிக்கிறார்கள்.

எப்போது வேண்டுமானாலும் இங்கு சேரலாம். முதல் வகுப்பிலிருந்தே குழந்தையின் தனிப்பட்ட திறன்களை வளர்க்கும் முறையிலேயே அணுகுமுறை இருக்கும். மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல், தனித்திறன் உடையவர்களாகக் குழந்தைகளை மாற்றுவதுதான் எங்களுடைய நோக்கம்.

பிளஸ் டூ வரை இலவசக் கல்வியை அளிக்கிறோம். மேற்படிப்புக்கு ஆகும் செலவை இவர்கள் கடனாகப் பெற்று வேலைக்குச் சென்று சம்பாதித்து திருப்பித் தரவேண்டும். பணி வாய்ப்புக்கும் எங்களால் இயன்ற உதவியைச் செய்கிறோம்.

அதைக் கொண்டு மற்ற மாணவர்களுக்கும் உதவஎண்ணியிருக்கிறோம். இந்தத் திட்டத்துக்கு `ஜீரோ டூ ஜாப்’ என்று பெயர்வைத்துள்ளோம்” என்கிறார் சுயம் அறக்கட்டளையின் நிறுவனரும் அறங்காவலருமான டாக்டர் உமா.

தொடர்புக்கு: suyam.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x