Published : 28 Jan 2020 11:02 AM
Last Updated : 28 Jan 2020 11:02 AM

வேலைவாய்ப்புக்கு அவசியம் திறனா, மதிப்பெண்ணா?

நந்து

இன்றைய சந்தை நிலவரப்படி தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி.) துறைதான் அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் துறையாக உள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் கணினி அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களில் தேர்ச்சிபெற்றவர்களுக்கான வேலைவாய்ப்புகளே அதிகம்.

பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பதற்கான விளம்பரங்களில் பள்ளி இறுதித் தேர்வுகளிலும் பட்டப்படிப்பிலும் 60% அல்லது 70% மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துவிடுகின்றன. வேலைக்கான நேர்காணல்களில் திறனறித் தேர்வு (aptitude test), தொழில்நுட்ப அறிவை மதிப்பிடும் நேர்காணல் (technical interview), மனிதவளப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்படும் நேர்காணல் (HR interview) ஆகியவற்றில் தேற வேண்டும்.

இருந்தாலும், ஒருவர் பள்ளி, பட்டப்பிடிப்பில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றிருப்பது அவர் அந்த நேர்காணல்கள் வழிமுறையில் பங்கேற்பதற்கான அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்படாமல் முழுக்க முழுக்கத் திறன்களின் அடிப்படையிலேயே ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் சில நிறுவனங்கள் இருக்கின்றன.

பட்டப்படிப்புச் சான்றிதழ் வெறும் அடையாளம்தான், திறன்களும் படைப்பாற்றலும்தான் முக்கியம் என்று சில முன்னணிப் பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்தக் கொள்கையின் அடிப்படையிலேயே ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், இவை விதிவிலக்குகள்தாம்.

எனவே, ஒரு வேலைக்குத் தேவைப்படும் திறன்களில் எவ்வளவு சிறப்பாக விளங்கினாலும் கல்வியில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றவர் மட்டுமே பணிகளைப் பெற முடியும் என்ற நிலைதான் கள யதார்த்தம். மறுபுறம் பட்டங்களையும் நல்ல மதிப்பெண்களையும் பெற்றவர்களுக்கெல்லாம் வேலைக்குத் தேவைப்படும் திறன்கள் இருந்துவிடுவதில்லை.

அப்படி இருந்திருந்தால் தகவல் தொழில்நுட்பத் துறையிலாவது வேலை இல்லாப் பட்டதாரிகளே இல்லை எனும் நிலை வந்திருக்கும். அப்படி என்றால் தகவல் தொழில்நுட்பத் துறைப் பணிகளில் நுழைய ஒருவருக்குத் தேவை திறன்களா மதிப்பெண்களா அல்லது இரண்டுமா? பல்கலைக்கழகங்களுக்குச் செல்லாமல் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியாதா? பல்கலைக்கழகங்கள் திறனற்ற பட்டதாரிகளை உருவாக்குவது ஏன் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

பல்கலைக்கழகங்களில் திறன்கள்

ஐ.டி. துறையில் சாதிக்கப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகள் தேவையில்லை என்று வாதிடுபவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் இருவரையும் உதாரணம் காட்டுகிறார்கள். இருவருமே எந்தப் பல்கலைக்கழகத்திலும் பட்டம் வாங்கியதில்லை. ஆனால், பட்டப்படிப்பு தேவைப்படும் தொழில் துறைகளில் பட்டப்படிப்பு இல்லாமல் சாதித்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

இந்தத் துறைகளில் சாதித்த பலர் தாங்கள் பெற்ற மேம்பட்ட உயர்கல்வியே தங்கள் தொழில்வாழ்க்கை வெற்றிக்குக் காரணம் என்று கூறியுள்ளனர். ஆகவே ஒருவரது தொழில் வாழ்க்கையில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவத்தை மறுத்துவிட முடியாது.

இந்தியச் சூழலில் கிட்டத்தட்ட அனைத்துப் பணிகளுக்குமே கல்லூரிக் கல்வி தேவைப்படுகிறது. இன்றைய போட்டி நிறைந்த சூழலில் முறைசார் கல்வியும் அதில் பெறும் மதிப்பெண்களும் ஒருவர் போட்டியில் முந்துவதற்குப் பயன்படுகின்றன. அது மட்டுமல்லாமல் பட்டப்படிப்பானது ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையில் திட்டமிடப்பட்ட கற்பித்தல் முறைகளின் வழியாக மேம்பட்ட அறிவையும் சிறப்புத் திறன்களையும் பெற வழிவகுக்கிறது. மேலும், பல்கலைக்கழகங்களில் ஒருவர் கல்வியையும் குறிப்பிட்ட துறை சார்ந்த திறன்களையும் மட்டும் பெறுவதில்லை.

பல்கலைக்கழகங்களுக்குள் குறிப்பிட்ட காலத்தைச் செலவிடுபவர்கள் தொடர்புகொள்ளுதல் (communication), மொழி (linguistic) உள்ளிட்ட மென்திறன்கள் (soft skills) என்று வகைப்படுத்தப்படும் திறன்களையும் பெறுகிறார்கள். தன்னம்பிக்கை. தலைமை வகித்தல் உள்ளிட்ட திறன்களையும் பெறுகிறார்கள்.

ஆசிரியர்கள், வெவ்வேறு சூழல்களிலிருந்து வரக்கூடிய சக மாணவர்களுடன் பழகுவதன் மூலம் மற்றவர்களுடன் இணைந்து ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பதிலும் தேர்ச்சி பெறுகிறார்கள். இவையெல்லாம் பணிச்சூழலுக்கு ஒருவரைத் தயார்படுத்துகின்றன. இதனால்தான் ஒருவருடைய வெற்றிகரமான பணிவாழ்க்கைக்குக் கல்லூரிக் கல்வி அவசியம் என்று கூற வேண்டியுள்ளது.

திறனில்லாப் பட்டதாரிகள்

ஆனால், இந்திய யதார்த்தம் என்ன? நமது பல்கலைக்கழகங்கள் மாணவர்களைப் பணிச்சூழலுக்குத் தயார்படுத்துவதில் பெரிதும் பின்தங்கியிருக்கின்றன என்பதையே புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பெரும்பாலான இந்தியப் பட்டதாரிகள் பணிகளுக்குத் தேவைப்படும் திறன்களைப் போதிய அளவு பெற்றிருப்பதில்லை என்றே பல ஆண்டுகளாகக் கூறப்பட்டுவருகிறது. பணிகளுக்குத் தேவையான திறன்கள் இல்லாத பட்டதாரிகளை உருவாக்குகிறது என்பது நம் உயர்கல்வித் துறை மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனங்களில் ஒன்று.

இந்தியாவின் பொறியியல் பட்டதாரிகளில் 80 சதவீதத்தினர் வேலை கிடைப்பதற்குத் தேவையான திறன்களுடன் இருப்பதில்லை என்று கடந்த ஆண்டு வெளியான வேலைபெறு திறன் (employability) குறித்த அறிக்கை கூறுகிறது. இந்தியப் பொறியாளர்களில் 3.84 சதவீதத்தினர் மட்டுமே மென்பொருள் தொடர்பான பணிகளுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன், அறிவாற்றல் மொழித் திறன்களைக் கொண்டிருப்பதாக அதே அறிக்கை கூறுகிறது. நேர்காணல்களில் வேலை கிடைக்காத பட்டதாரிகள் “வேலை பெறத் தகுதியற்றவர்கள்”, “வேலைக்குத் தயாராகாதவர்கள்” என்றெல்லாம் முத்திரை குத்தப்படுகின்றனர்.

இந்தச் சூழல் மாற நம் உயர் கல்வி நிறுவனங்கள் மூன்று மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும். பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்றவர்கள் எல்லோரும் மேம்பட்ட அறிவும் திறனும் பெற்றவர்கள், எனவே அவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பைப் பெற்றுவிடுவார்கள்; உயர் மதிப்பெண்கள் பெறுபவர்கள் அனைவரும் புத்திசாலிகள்; உயர் மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் திறன்களிலும் சிறந்து விளங்குவார்கள். இவை மூன்றும் மூடநம்பிக்கைகள் என்று கல்வி நிறுவனங்கள் உணர்ந்தால்தான், மதிப்பெண்களிலிருந்து விடுபட்டுத் திறன் வளர்ப்புக்கு அவை முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கும்.

மாறவேண்டிய அணுகுமுறை

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையிலும்கூட உயர் பட்டங்கள், திறன்கள் இரண்டையும் பெற்றவர்களுக்கே அதிகத் தேவை உள்ளது. எனவே, இரண்டையும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். மாணவர்கள் எதிர்காலத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள என்னென்ன புதிய திறன்களைப் பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் யோசிக்கத் தொடங்க வேண்டும். தொழில்நுட்பத் திறன்கள் மட்டுமல்லாமல் பேச்சு, எழுத்து, தொடர்புகொள்ளுதல், கவனக்குவிப்பு, நினைவாற்றல். தர்க்கபூர்வ சிந்தனை.

முடிவெடுத்தல். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பது, சுய விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, நேர்மறைச் சிந்தனை உள்ளிட திறன்களையும் வளர்க்கும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டும். அதுவே வருங்கால உலகம் அளிக்கப் போகும் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு உதவும். கல்வி நிறுவனங்கள், தேர்வுகள், மதிப்பெண்களுக்கு அளிக்கும் அளவு கடந்த முக்கியத்துவத்தை இது போன்ற திறன் வளர்ப்பிலும் செலுத்தினால் வருங்காலச் சந்ததியினருக்கு வளமான எதிர்காலத்தை உறுதிசெய்ய முடியும்.

(தி இந்து எஜுகேஷன் பிளஸ் இணைப்பிதழில் ஆல்பர்ட் பி.ராயன் எழுதிய ‘வாட் மேட்டர்ஸ் மோர்’ என்ற கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x