Published : 07 Jan 2020 12:18 PM
Last Updated : 07 Jan 2020 12:18 PM
ஹமிதா நஸ்ரின்
கடந்த இருபதாண்டுகளாக, பெரும்பாலான பொறியாளர்கள் கணினித் துறைக்குச் சென்றதால், அடிப்படைப் பொறியியல் துறைகளான மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிகல் துறைகளில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்களுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால், கணினித் துறையினர்கூட நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம் அங்கே வழங்கப்படுகிறது.
எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை, அதைச் சார்ந்த ரசாயன ஆலைகள் ஆகியவற்றின் உயிர்நாடியாக பைப்பிங் இன்ஜினீயரிங் (Piping Engineering) உள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில், திரவ வடிவில் உள்ள ரசாயனத்தைப் பல்வேறு உபகரணங்களுக்கு இடையே குழாய்களின் வழியாகக் கடத்துவதற்குச் செயல்திறன் மிக்க குழாய்களை வடிவமைக்க வேண்டும். இதன் காரணமாக, பொறியியல் அறிவியலில் ‘பைப்பிங்’ அமைப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
பிரிவுகள்
பைப்பிங் பொறியாளர்களை லே - அவுட் (layout) பொறியாளர், ஸ்ட்ரெஸ் (stress) பொறியாளர் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். லே - அவுட் (layout) பொறியாளரின் முக்கியப் பணி - இடத்தின் அளவு, சுற்றுச்சூழல், காற்றின் திசை ஆகியவற்றுக்கு ஏற்றபடி, பெரிய உபகரணங்களைத் தகுந்த இடத்தில் நிறுவுவது. பின்னர் அவற்றை இணைக்கும் பைப்பிங் அமைப்பை எலெக்ட்ரிகல், சிவில் உள்ளிட்ட துறைகளுக்கு இடையூறின்றி வடிவமைக்க வேண்டும்.
ஸ்ட்ரெஸ் (stress) பொறியாளர்களின் முக்கியப் பணி குழாயின் விட்டம், தடிமன், வளைவின் ஆரம், குழாய் தாங்கிகளின் (pipe support) வகைகளைத் தீர்மானிப்பது. இந்த ஆலைகளில் உள்ள குழாய்களில் உயர் அழுத்தத் திரவம் மிக அதிக வெப்பத்தில் செலுத்தப்படும். அப்போது குழாய்களின் இயல்பான விரிவுத்தன்மையால் விபத்துகள் நேரிட அதிக வாய்ப்பு உண்டு. இதனால், ஸ்ட்ரெஸ் (stress) பொறியாளர்களுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவமும், கூடுதல் சம்பளமும் உண்டு.
என்ன படிக்க வேண்டும்?
மெக்கானிக்கல் பொறியியல் படித்த பின்னர் PDS, PDMS, Catia, Autoplant முதலிய மென்பொருள்களைப் படிப்பது லே-அவுட் (Layout) பொறியாளர் ஆக அவசியம். CAESAR II, Autopipe, CAEPIPE முதலிய மென்பொருள்களைப் படிப்பது ஸ்ட்ரெஸ் (Stress) பொறியாளர்
ஆகத் தேவை.
எங்கே படிக்கலாம்?
மும்பை ஐ.ஐ.டி.யின் பைப்பிங் பொறியியல் பிரிவு, 15 நாட்களில் பைப்பிங் பொறியியலில் தரமான பயிற்சி அளித்து அதற்குச் சான்றிதழும் வழங்குகிறது. பயிற்சி முடியும் நாளில் IOCL, BPCL, HPCL, ONGC, Oil India, Gail, GSPL, EIL, Jacobs, Toyo, Worley-parson, Technip, Saipem, Petrofac, Dove Chemicals British Petroleum முதலிய பெருநிறுவனங்கள் ஐ.ஐ.டி.யில் வளாக நேர்காணல் நடத்துகின்றன.
இந்தப் பெரு நிறுவனங்களில் பெரும்பாலானவை சென்னையில் உள்ளன. இது தவிர இந்தச் சான்றிதழுக்கு உலக அளவில் மதிப்பும் உண்டு. இது தவிர மும்பையில் உள்ள சுவித்யா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (Suvidya Institute of Technology (SIT)) பிரத்தியேகப் பயிற்சி அளிக்கிறது.
புரிந்து படித்தால் வெற்றி நிச்சயம்
பைப்பிங் இன்ஜினீயரிங் ஒன்றும் கடினமான துறை அல்ல. கொஞ்சம் பொறுமையாக, நல்ல பயிலகத்தில், நன்கு புரிந்து படித்து, அடிப்படை அறிவை வளர்த்துக்கொண்டால் சிறப்பான வேலைவாய்ப்பை நிச்சயம் பெறலாம். இந்தத் துறையினருக்கு இந்தியாவில் மட்டுமல்ல, அரேபியா, அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், ரஷ்யா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தேவை உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT