Published : 31 Dec 2019 11:16 AM
Last Updated : 31 Dec 2019 11:16 AM

சேதி தெரியுமா? - ‘எகோ’ பண முறை அறிமுகம்

தொகுப்பு: கனி

‘எகோ’ பண முறை அறிமுகம்

டிச. 21: எட்டு மேற்கு ஆப்ரிக்க நாடுகள் ‘எகோ’ என்ற ஒரே பண முறையைப் பின்பற்றப் போவதாக அறிவித்துள்ளன. பெனின், புர்கினா ஃபஸோ, கினியா-பிசாவ், ஐவரி கோஸ்ட், மாலி, நைஜர், செனிகல், டோகோ ஆகிய எட்டு ஆப்ரிக்க நாடுகள் அந்தப் பகுதியிலிருக்கும் பிரெஞ்சு ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளன.

அவசர நடவடிக்கை தேவை

டிச. 23: இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையைச் சீர்செய்ய அவசரக் கொள்கை முடிவுகளை இந்திய அரசு எடுக்க வேண்டுமென்று சர்வதேச நாணய நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் கொள்கை முடிவுகள் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்

டிச. 23: ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளக் கூட்டணி மொத்தம் உள்ள 81 இடங்களில் 47 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. ஜார்கண்ட் முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவர் ஹேமந்த் சோரேன் டிச. 29 அன்று பதவியேற்றார்.

சிறந்த நிர்வாகம்: தமிழ்நாடு முதலிடம்!

டிச. 25: இந்திய அரசு சிறந்த நிர்வாகம் நடக்கும் மாநிலங்களின் பட்டியலை முதல்முறையாக வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மகாராஷ்ட்டிரம், கர்நாடகம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் இந்தப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

கிராமங்களுக்கு இலவச இணையவசதி

டிச. 25: இந்திய கிராமங்களுக்கு ‘பாரத்நெட்’ மூலம் வரும் 2020, மார்ச் வரை இலவச ‘வைஃபை’ சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இதுவரை, 48,000 கிராமங்களுக்கு‘வைஃபை’ சேவைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரிய சூரிய கிரகணம்

டிச. 26: வளைய வடிவிலான அரிய சூரிய கிரகணம் நடைபெற்றது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031, மே 16 அன்றுதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் நிகழ்வதற்குக் காரணம். கேரளாவில் இந்த முழு வளைய வடிவிலான சூரிய கிரகணத்தைத் தெளிவாகப் பார்க்க முடிந்தது.

தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்

டிச.27: இந்த தசாப்தத்தின் ஐந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை பிரிட்டனின் பிரபல கிரிக்கெட் வீரர்களுக்கான ‘விஸ்டன் நாட்குறிப்பு’ (Wisden Cricketers’ Almanack) வெளியிட்டுள்ளது. ஏ.பி.டி.வில்லியர்ஸ், விராட் கோலி, எலிஸ் பெர்ரி, டேல் ஸ்டெய்ன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

செஸ் சாம்பியன் பட்டம்

டிச.29: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக மகளிர் ‘ரேபிட்’ செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார் இந்திய கிராண்ட்மாஸ்டர் கொனேரு ஹம்பி. சீனாவின் லீ டிங்ஜீயைத் தோற்கடித்து இந்தப் பட்டத்தை வென்றுள்ளார் ஆந்திரத்தின் விஜயவாடா நகரத்தைச் சேர்ந்த கொனேரு ஹம்பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x