Published : 03 Dec 2019 11:53 AM
Last Updated : 03 Dec 2019 11:53 AM

அடுத்த தலைமுறை வேலைவாய்ப்பும் அவசியத் திறன்களும்

எஸ்.எஸ். லெனின்

முந்தைய தலைமுறையினரைவிட, பணியிழப்பு பீதி தற்போது அதிகமானோரை அலைக்கழித்து வருகிறது. தொழிற்புரட்சி காலம்தொட்டு எக்காலத்திலும், புதிதாக உருவெடுக்கும் கண்டுபிடிப்புகள், மேம்பாடு கோரும் திறன்களால் பணியாளர்கள் சவால்களைச் சந்தித்தே வருகின்றனர்.

ஆனால், தற்போதைய அளவுக்கு அச்சுறுத்தலாக அவை இருந்ததில்லை. இந்தச் சூழலில் அடுத்த தலைமுறையின் முகம் மாறும் பணிவாய்ப்புகள் குறித்தும் அதற்கு அவசியமான திறன் வளர்ப்புகள் பற்றியும் அறிந்துகொள்வது, இன்றைய உயர்கல்வி மாணவர்கள், வேலைநாடுபவர்களுக்கு அவசியம்.

தேவை திறன்மேம்பாடு

சில ஆண்டுகளுக்கு முன்புவரை வேலைவாய்ப்புகளில் முதன்மை இடம்பிடித்த திறன்கள் தற்போது காணாமல் போயிருப்பதற்கு நாமே சாட்சி. அதேபோன்று தற்போது கல்வி பயில்வோர் வேலைவாய்ப்பு சந்தையில் கால்வைக்கும்போது இன்றுள்ள பணிவாய்ப்புகளில் பெரும்பாலானவை வழக்கொழிந்து போயிருக்கும். அல்லது அப்போதைய மாற்றங்களைச் செரித்துக்கொண்டு புதிய பரிமாணம் எடுத்திருக்கும்.

அதிகரிக்கும் தானியங்கி மயமாதல், செயற்கை நுண்ணறிவு போன்றவை மட்டுமன்றி அதன் நீட்சியாக முளைக்கும் புதிய நுட்பங்களாலும் இந்தத் திறன்களின் தேவை புதுப்புது வடிவெடுக்கும். படைப்பாற்றல், இடர்பாடுகளைத் தீர்த்தல், தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான திறன்களுடன் புலன்சார் உயர் நுண்ணுணர்வும் முதன்மையாகத் தேவைப்படுகிறது.

இந்த திறன்களில் செயற்கை நுண்ணறிவு, எந்திரன்களால் முடியாதவற்றைச் செய்துமுடிப்பதற்கே மனிதத் தேவை அதிகமிருக்கும். எடுத்துக்காட்டுக்கு வங்கி ஒன்றின் குமாஸ்தா வேலையை கணினி மயமான எந்திரத்தால் செய்ய வைக்கலாம். ஆனால், அதே வங்கியின் மேலாளர் இருக்கையை எந்திரன்களால் இடம்பெயர்க்கவே முடியாது. ஒரு மேலாளரின் அன்றாடப் பணிகளை எளிதில் அனுமானிக்க முடியாததே அதற்குக் காரணம். இதேபோல அலுவலகங்களின் பல்வேறு உதவியாளர்கள் பணியிடங்கள் காணாமல் போகும். ஆனால், நிர்வாகத்தை வழிநடத்தும் பணியிடங்கள் நிலையாக நீடிக்கும்.

மாற்றத்துக்கு ஈடுகொடுத்தால் நிலைக்கலாம்

உலக வங்கியின் அறிக்கை ஒன்றின்படி ஆட்டோமேஷன் வருகையால் பறிபோகும் இந்திய வேலைவாய்ப்புகள் 69 சதவீதமாக அதிகரிக்க உள்ளன. வாகன உற்பத்தி, மருந்துத் தயாரிப்பு, மென்பொருள் துறை ஆகியவை இந்த வரிசையில் முன்னிற்கின்றன. எனவே, தொழில்துறை நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட ஆளெடுப்புக்கு, ஆட்டோமேஷனால் நிரப்ப இயலாத தனித்திறன்களுக்கு முக்கியத்துவம் தர உள்ளன.

இந்தத் திறன்கள் புதியவர்களுக்கு மட்டுமல்ல. தற்போது பணியில் ஒட்டியிருப்பவர்களின் எதிர்காலத்தையும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கு உடன்படுவதை ஒட்டி நிறுவனங்கள் தீர்மானிக்க உள்ளன. மாறும் தொழில்நுட்பம் - சந்தை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன் மேம்பாடு என்பது பணியாளர்களுக்குத் தவிர்க்க முடியாதது.

அதேபோன்று படிப்பை முடித்தவர்களும், பணிக்குக் காத்திருப்பவர்களும் நாளைய மாற்றத்துக்கான திறன்களை முன்கூட்டியே கணித்து கைக்கொள்வதன் மூலம் தங்களைத் தகுதிபடுத்திக்கொள்ளலாம். மனிதத் தலையீடு -நுண்ணறிவால் மட்டுமே சாதிக்க இயன்றவை அப்படியான திறன்களில் முதலிடத்தில் இருக்கின்றன.

திறன் மேம்பாட்டுக்கான தேடல்

புதிதாகப் படிப்பை முடித்து வருபவர்களைவிட முந்தைய ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் - பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்தப் புதிய மாற்றங்கள் பெரும் சவாலாக உள்ளன. தங்களைத் தற்காத்துக்கொள்ள இவர்கள் திறன் மேம்பாடு மேற்கொள்வது அவசியமாகிறது. இதற்கு முதல்படியாக, இருக்கும் திறன்களைப் பட்டை தீட்ட வேண்டும்.

ஒரு பணியாளர் - வேலைதேடுபவர் புதிய மாற்றங்களுக்குத் தன்னை தயார்படுத்திக்கொள்வதை, முந்தைய திறன்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ள முடியும். அதற்கு பழைய திறன்களையும், அதையொட்டிய அனுபவத்தையும் சேர்த்துத் தங்களை புதிப்பித்துக்கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் கூடுதல் திறன்களை மேம்படுத்திக்கொள்வது நல்லது.

புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது என்றவுடன் நேற்று அறிமுகமான ஒரு தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள முயல்வதைவிட, அடிப்படைத் திறன்களின் நீட்சியாக புதியதை விரிவுபடுத்திக்கொள்ள முயலலாம். அதைத் தொடர்ந்து புதிய நுட்பங்களைப் பரிசீலிக்கலாம்.

புதிய திறன்களைப் பயில முடிவானதும் எங்கே கற்பது, எப்படிக் கற்பது என்ற ஐயம் எழும். இவற்றுக்கு இணைய வசதிகள் அனுகூலமானவை. தனியார் மனிதவள மேம்பாட்டு மையங்கள், ஆலோசகர்கள் இதற்கு உதவக் காத்திருக்கின்றனர். கணிசமான கட்டணத்தில் உரிய பயிற்சிகளை அடையாளம் கண்டு, இணையம் வாயிலாகவே பயிற்சியை பெறலாம். அதற்கு முன்பாக இணையத்தில் துழாவி சுயமாகக் கற்றுக்கொள்வதும் உதவும்.

திறன் வளர்க்கும் ஆன்லைன் பயிற்சிகள்

எவ்வாறு திறன்களை வளர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டைப் பார்ப்போம். மென்பொருள் துறையில் பணியிழப்புகள் உச்சத்தில் இருக்கின்றன. மூழ்கும் கப்பல் என்றபடி பணிதேடுபவர்கள் அத்துறையைத் தவிர்த்துவிட்டு இதர துறைகளில் தூண்டில் போட்டுக் காத்திருக்கின்றனர்.

ஆனால், டேட்டா சயின்டிஸ்ட் என்ற புதிய வாசல் வழியே ஏராளமானோர் சத்தமின்றி மென்பொருள் துறையில் நுழைந்து வருகிறார்கள். இதற்கு வழக்கமான கல்லூரி உயர்படிப்புகள் மூலமாகவே செல்வார்கள். மாற்று உபாயமாக கூகுள், ஐ.பி.எம். போன்ற பிரசித்திபெற்ற நிறுவனங்கள் வழங்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் சிலவற்றில் சான்றிதழ் தகுதிபெற்றும் நம்மைத் தகுதிபடுத்திக் கொள்ளலாம்.

‘கூகுள் ஐ.டி. சப்போர்ட் கேட்வே‘ என்ற 5 பயிற்சிகளை அடக்கிய சான்றிதழ் தகுதிக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. பயிற்சியின் நிறைவாக இங்கிருந்தவாறே உலகளாவிய ஐ.டி. நிறுவனங்களில் பணி புரியலாம். இந்தத் திறன் மேம்பாட்டுச் சான்றிதழ் பயிற்சிக்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி, பிளஸ் 2 முடித்திருந்தால் போதும். இதே கட்டணச் செலவில் ஐ.பி.எம். நிறுவனமும் டேட்டா சயின்ஸ் தொடர்பான சான்றிதழ் பயிற்சியை வழங்குகிறது. பணியில் இருப்பவர்கள், பணிதேடுபவர்கள், புதியவர்கள் என அனைவரும் இவை குறித்து பரிசீலனைக்குப் பின்னர் சேர்ந்து பலனடையலாம்.

இளைஞர்கள் உதவுவார்கள்

எக்காலத்திலும் புதிய திறன் மாற்றங்கள், தொழில் நுட்பங்களுக்கு இயைந்து போவதும், மேம்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதும் நல்லது. அவற்றை இளையோரிடம் கற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதும் வரவேற்கத்தக்கது. தொழில் நுட்பமோ, திறன் மேம்பாடோ இளம் தலைமுறையினர் அவற்றைத் தம் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

பணியிடமோ பயிலும் நிறுவனமோ நமது உள்வட்டத்தில் அந்த இளையவர்களைச் சேர்த்துக்கொள்வதும், அவர்களுடன் நேரம் செலவழிப்பதும் சிரமமின்றி நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x