Published : 26 Nov 2019 09:54 AM
Last Updated : 26 Nov 2019 09:54 AM
டாக்டர். ஆர். கார்த்திகேயன்
‘ஹோஒப்பானோபானோ’ என்பது ஒரு ஹவாய் பழங்குடியின் ஹீலிங் முறை. இது ஒரு மன்னிப்பு கோருதல் போன்றதுதான். ஆனால், சற்றே ஆழமானது. ஆழ் மன வெறுப்பு, கோபம் அல்லது துக்கத்தை வெளிக் கொணர்ந்து அதன் மூலம் உடலைச் சுத்தப்படுத்தும் வழிமுறை இது.
உடலில் நோய் வந்தால் அதற்கு ஆழ்மனத்தில் உள்ள கோபமோ வருத்தமோதான் காரணம் என்று இந்தப் பழங்குடிகள் நம்புகிறார்கள். அதனால் ஒருவர் சுகவீனமாக இருந்தால், அதை அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்ப்பதில்லை. சரிசெய்ய வேண்டிய ஒன்றின் தேவை வந்துவிட்டதாக உடனே உணர்கிறார்கள்.
அது ஒருவர் சம்பந்தப்பட்டதாக மட்டும் இருக்காது; கண்டிப்பாக மற்றவர்களின் பங்களிப்பும் உண்டு என்பதால், பெரும்பாலும் இது குடும்பமாகத்தான் கையாளப்படும். வீட்டில் பெரியவர்தான் இதைச் செய்துவைப்பார். அவரும் அதில் சம்பந்தப்பட்டிருந்தாலோ வேறு காரணங்கள் இருந்தாலோ, அந்தப் பழங்குடி இனத்தில் உள்ள வேறு ஒரு பெரியவர் அழைக்கப்படுவார்.
கலந்து பேசுதல், பிரார்த்தனை, சுய சுத்திகரிப்பு, மன்னிப்பு கோருதல் எல்லாம் நடக்கும். இறுதியில் ஒரு குறிப்பிட்ட மூலிகையை உண்டு இந்தச் சடங்கை முடித்துக்கொள்வார்கள். எந்த கிலேசமும் மன அளவில் தங்காமல் இருக்க இவர்கள் குடும்பமாக, கூட்டமாக இதைச் செய்கிறார்கள். இதைச் செய்து முடித்தால் உடல்நலம் குன்றியவர் தேறுவதை உறுதிசெய்கின்றனர்.
நோயின் அர்த்தம்
உடல் நலமற்றவருக்கு இது பிரச்சினை எனக் கொள்ளக் கூடாது. அவர் ஓர் உறவு அல்லது குடும்பச் சீர்கேட்டைத் தன் உடல் மூலம் தெரிவிக்கிறார் என்று பொருள். அவருக்கு மட்டும் தனியே வைத்தியம் செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் வைத்திய நடைமுறைக்கு உட்படுத்துகின்றனர்.
சம்பந்தப்பட்டவர் தன் உள் மன போராட்டத்தைக் கொட்டித் தீர்க்க உதவுகிறார்கள். இதன்மூலம் தனிநபர்களாகவும் உணர்வுகளுக்கும் உடலுக்கும் உள்ள உறவைப் புரிந்து மேம்படுத்திக்கொள்கிறார்கள்.
இதே போன்ற வழிமுறைகள் உலகமெங்கும் பல பழங்குடிகளிடம் உள்ளன. இவை மெல்ல மெல்ல வளர்ந்த நாடுகளை அடைந்து நல்ல வடிவம் பெற்றுவிட்டது. இன்று பலர் ஹோ ஒப்பானோபானோவை சிகிச்சை முறையாகக் கற்றுத் தருகின்றனர். யாரும் சுலபமாகப் பயன்படுத்தும் வகையில் அடிப்படையில் நான்கு விஷயங்களைக் கூறுகிறார்கள். அதை முறையாகப் பயிற்சி செய்து பார்த்தேன். ஆச்சரியம் அளிக்கும் வகையில் அற்புதப் பலன்கள் கிடைத்தன.
நலம் தரும் நான்கு
அந்த நான்கு விஷயங்கள்: வருத்தம் தெரிவித்தல், மன்னிப்பு கோருதல், நன்றி சொல்லுதல், அன்பு செலுத்துதல். இதை நான்கு அபர்மேஷன்கள் என்றும் சொல்லலாம்.
‘நான் வருத்தம் அடைகிறேன்.’ (I am sorry)
‘நான் மன்னிப்பு கேட்கிறேன்.’ (Please forgive me)
‘நான் நன்றி செலுத்துகிறேன்’. (Thank you)
‘நான் அன்பு செலுத்துகிறேன்.’ (I love you)
எந்தப் பிரச்சினை என்றாலும் அடுத்தவர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பார். அவரிடம் இந்த 4 வாக்கியங்களைச் சொல்லுங்கள். நேரில் சொல்லக்கூட அவசியமில்லை. அவரை நினைத்து எழுதுங்கள். அல்லது தனிமையில்கூடச் சொல்லுங்கள்.
முதலில், யாரிடம் பிரச்சினையோ அவரிடம் ஸாரி சொல்லுதல் தர்க்கரீதியாகக் கடினமாக இருக்கும். ஆனால் அதுதான் தொடக்கப் புள்ளி. இந்த முதல் வாக்கியம் நடப்பதில் உங்களுக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணரச் செய்கிறது. சுய பொறுப்பு தெரிவது மாறுதலின் முதல் படி, தன் நிலையை மாற்றுவதுதான் எனப் புரியும். தான் இடம் கொடுக்காமல் இந்த நிலை வராது என்பதால்தான், செய்ததற்கு முதலில் வருத்தம் அடைவது முதல் படி.
தனக்கு வருத்தம் வந்ததைப் போல் எதிராளிக்கும் வருத்தமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எது சரி, எது நியாயம் என்பதைவிட வருத்தமும் வலியும் எதிராளிக்கும் உண்டு என்று கண்டுகொண்டு மன்னிப்பு கோருதல் இரண்டாம் படி. பாவ மன்னிப்பு பற்றி விரிவாகச் சென்ற அத்தியாயத்தில் பேசியதால், இது உங்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும்.
அடுத்து நன்றி சொல்லுதல். எதற்கு? இந்தப் பிரச்சினையைத் தவிர்த்து அந்த உறவைப் பாருங்கள். எவ்வளவு பெற்றிருக்கிறோம்? எத்தனை பலன்கள் கிடைத்திருக்கின்றன? காலம் முழுதும் செய்ததற்கு நன்றி செலுத்துங்கள். மனதாரச் செய்யுங்கள்.
அன்பு வெல்லும்
கடைசியாக, உங்களையும் அந்த உறவையும் இணைக்கும் வல்லமை பெற்றது எது? அன்பு தானே? அதை முழுமையாக, மனதாரச் சொல்லுங்கள். இது அத்தனை அடைப்புகளையும் நீக்கி உள்ளிருக்கும் அன்பை வெளிக் கொணரும். இந்த அன்பின்முன் எந்த வருத்தமும் கோபமும் ஜெயிக்க முடியாது. ஹோ ஒப்பானோபானோ இதுதான். அப்பா உங்களைப் புரிந்து கொள்ளவில்லையா? ஹோ ஒப்பானோபானோ முறையைப் பயன்படுத்தி இந்த 4 வாக்கியங்களை அவரை நினைத்து உளமாரச் சொல்லுங்கள்.
இத்தனை நெருங்கிய உறவுகூட வேண்டாம். சாலையில் உங்களைச் சடாரென்று இடது புறமாகக் கடக்கும் ஆட்டோக்காரர் மீது நொடிப் பொழுதில் தீராத ஆத்திரமா? ஹோ ஒப்பானோபானோதான் அதற்கும் தீர்வு. கோபம் யார் மீது இருந்தாலும், வைத்தியம் செய்துகொள்ள வேண்டியது உங்களுக்கு மட்டும்தான்!
கட்டுரையாளர்,
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT