Published : 19 Nov 2019 11:48 AM
Last Updated : 19 Nov 2019 11:48 AM
தங்களை ஆளும் பிரதிநிதிகளை மக்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தேர்தல்கள் இந்தியாவில் முற்றிலும் ஜனநாயக வழியில் நடக்கின்றனவா என்பது விவாதத்துக்குரியது. தேர்தல்களில் பணம், அதிகாரம், சாதி, மத உணர்வுகள் இன்றும் பேரளவுத் தாக்கம் செலுத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தாண்டி இன்று வேட்பாளர்களும் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறக் கூடாது என்ற அச்சத்துடன் செயல்படுகின்றனர்.
தேர்தல் நேரத்தில் மட்டுமாவது சாதி, மத அரசியலை வெளிப் படையாகச் செய்யத் தயங்குகின்றனர். ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சிகள், வாக்காளர்களை தங்கள் வசம் இழுக்கும்படியான புதிய திட்டங்களை அறிவிப்பதில்லை. இவற்றால் ஓரளவுக்காவது ஜனநாயக முறைப்படி தேர்தல் உறுதிசெய்யப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் காரணம், அரசியல் சாசனப்படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் சுதந்திரமும் தற்சார்பும் கொண்ட அமைப்பாக மாறியதுதான். அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் 2019 நவம்பர் 10 அன்று காலமான முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன்.
ஆணையத்தை உலகறியச் செய்தார்
1932-ல் கேரளத்தின் பாலக்காட்டில் பிறந்தவரான சேஷன் 1955-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். 1965-ல் தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து தமிழகத்திலும் மத்திய அரசுத் துறைகளிலும் பல பதவிகளை வகித்தார். 1990-ல் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். 1996வரை அந்தப் பதவியில் நீடித்த அவர், தேர்தல் நடத்தப்படும் விதத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தார்.
“தேர்தல் ஆணையம் இந்திய அரசின் ஒரு பகுதியே தவிர, அரசுக்குக் கீழ்ப்படிந்ததல்ல. தலைமைத் தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் சட்ட அமைச்சருக்கும் பதில்கூறக் கடமைப்பட்டவர். ஆனால், அவர்களுக்குக் கீழ்ப்படிந்தவர் என்ற பொருளில் அல்ல” என்று கூறியவர் சேஷன். சொன்னபடியே தேர்தல் ஆணையத்தை தற்சார்புகொண்ட அமைப்பாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார்.
தேர்தல் சட்டங்களின்படியும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படியும் அனைத்துத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவற்றை மீறுபவர்கள் எவ்வளவு செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக இருந்தாலும், எப்பேற்பட்ட பதவியில் இருந்தாலும் அவர்களை எதிர்க்க சேஷன் தயங்கவில்லை. அவருடைய பதவிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, கள்ள வாக்குகள் தடுக்கப்படுவதில் பெரும் பங்கு வகித்துவருகிறது.
தேர்தல்களின் ஜனநாயகத் தன்மை, தேர்தல் ஆணையத்தின் சுதந்திர செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக சேஷன் எடுத்த நடவடிக்கைகளால் பல அரசியல் தலைவர்களின் விரோதத்தை எதிர்கொண்டார். ஆனால் தேர்தல்களில் ஊக்கத்துடனும் நம்பிக்கையுடனும் பங்கேற்கும் கோடிக்கணக்கான வாக்காளர்களால் அவர் என்றென்றைக்கும் நினைவுகூரப்படுவார்.
- கிருஷ்ணா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT