Published : 12 Nov 2025 06:51 AM
Last Updated : 12 Nov 2025 06:51 AM
உலக அளவில் வேளாண் துறையில் வேகமான மாற்றங்கள் நிகழ்வதைக் காணமுடிகிறது. புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப முதலீடும் அதிகம் தேவைப்படும் துறை இது. காலநிலை மாற்றம், நீர்த் தட்டுப் பாடு, உணவுப் பாதுகாப்பு ஆகியவை புதிய தீர்வுகளைக் கோருவதால் வேளாண் ஆராய்ச்சி புதிய திசையில் நகர்கிறது. ஆப்ரிக்காவின் ‘ஹாஃப் மூன் மாடல்’ (Half-Moon Model) ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகளில் வறட்சி என்பது பல நூற்றாண்டுகள் கண்ட பழமையான சவால்.
ஆனால் இன்றைக்கு விமானத்தில் இருந்து பார்க்கும்போது பாலைவனத்தின் மத்தியில் பச்சைப் பசேலென பயிர்கள் வளர்வதைக் காணலாம். ‘ஹாஃப் மூன் விவசாய மாடல்’தான் அந்த மாற்றத்துக்குக் காரணம். நிலத்தில் அரை வட்ட வடிவில் குழிகள் தோண்டி மழை நீரைச் சேகரிப்பதன் மூலம் மண்ணின் ஈரப்பதம் நீண்ட நாள்கள் தக்க வைக்கப்படுகிறது.
இதைப் பின்பற்றுவதால் பன்மடங்கு கூடுதல் விளைச்சல் கிடைக்கிறது. இதனால் உணவுப் பற்றாக்குறை தீர்ந்து, விவசாயிகளின் வருமானமும் உயர்ந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் வரும் சவால்களையும் தாங்கும் இம்முறை, உலகின் முன்னோடித் திட்டங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரின் செங்குத்து விவசாயம் (Vertical Farming) - நிலப்பரப்பில் சிறிய நாடான சிங்கப்பூர், உணவு உற்பத்தியில் பெரிய கனவு காண்கிறது. 2012ஆம் ஆண்டிலிருந்து மண் இன்றி, சூரிய ஒளி இன்றி இயற்கை விவசாயத்தைச் செயற்கை முறையில் சிங்கப்பூர் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ‘செங்குத்து விவசாயம்’ என்பதை அந்நாடு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ஏழு முதல் பன்னிரண்டு தளங்கள் வரை பயிர்கள் அடுக்கடுக்காக வளர்க்கப்படுகின்றன. எல்.இ.டி விளக்குகள், நீரியல் நுட்பம் (ஹைட்ரோபோனிக்ஸ்), செயற்கை நுண்ணறிவு, சென்சார் போன்று நவீனத் தொழில்நுட் பங்களைப் பயன்படுத்தி, பயிர்கள் வளர்வதற்குத் தேவையான சூழலை உருவாக்குகிறார்கள். இதன் மூலம் நகரங்களிலும் நிலமின்றி, உரமின்றி இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்பதைச் சிங்கப்பூர் நிரூபித்துள்ளது.

மதுரை மல்லிகை: உலகில் அதிகமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்து குறிப் பாக மதுரையில் இருந்து மல்லிகை பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் மல்லிகையில் இருந்து தயாரிக்கப்படும் மல்லிகை எண்ணெய்க்கு (ஜாஸ்மின் ஆயில்) உலகச் சந்தையில் முக்கிய இடமும் அதிக விலையும் உள்ளது. வாசனைத் திரவியங்கள், அழகுசாதனத் துறையில் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
மல்லிகை எண்ணெய் பிரித்தெடுக்கும் புதிய முறைகளும் தரத்தை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களும் உலக வேளாண் ஆராய்ச்சித் தளங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏன் இந்த புதிய சிந்தனைகள் ஆக்கப்பூர்வ மாக்கப்படுவதில்லை என்கிற கேள்வி எழுகிறது. இம்முறைகளைப் பின்பற்றி மல்லிகைச் சந்தையை நாமும் மேம்படுத்த வேண்டும்.
ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து ‘Phool’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கி னார்கள். அதில், கோயில்களில் பயன் படுத்தப்பட்ட மலர்களைச் சேகரித்து ஊதுபத்தி போன்று பயனுள்ள பொருள் களாக மாற்றி வருகின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன் வேலை வாய்ப்புகளும் உருவாகின்றன.
வளர்ந்த நாடுகள் வேளாண் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML) தொழில்நுட்பம் மூலம் ஒரு பெரிய தோட்டத்தில் உள்ள பழத்தின் நிறம், வடிவம், அளவு, பழுத்தநிலையைத் துல்லியமாக மதிப்பீடு செய்து பழம் பறிக்கும் நேரத்தைச் சரியாகத் தீர்மானிக்கின்றன. இப்படி உலகம் முழுவதும் வேளாண்மையில் புது ஆராய்ச்சிகள் உருவாகும்போது இந்தியா இன்னும் பல படிகளைக் கடக்க வேண்டியுள்ளது.
இனி வரும் காலத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டு வேளாண் துறைக்கு எனத் தனி தொழில்நுட்ப மையங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்து அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும். சிறு விவசாயிகளும் எளிதில் பயன்படுத்தக்கூடிய, பொருளாதாரரீதியாக சாத்தியமான தொழில்நுட்பங்களைப் பரவலாக்க வேண்டும்.
இதுவே இன்றைய வேளாண் ஆராய்ச்சியின் முக்கியத் தேவை. கிராமப்புறங்கள் வரை இந்த ஆராய்ச்சிகளும் அதனால் ஏற்படக்கூடிய பயன்களும் சென்றடைய வேண்டும். இந்தியா தனது பாரம்பரிய வேளாண் அறிவையும், நவீனத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்தால், உலக வேளாண் மையில் முன்னணி நாடாக உயர முடியும். வேளாண்மையின் எதிர்காலம் புதுமையில் உள்ளது. அந்த எதிர்காலத்தை இன்றே உருவாக்க வேண்டும்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org
முந்தைய அத்தியாயம்: பால்வள ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி எப்போது? வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 5
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT