Published : 05 Nov 2025 07:32 AM
Last Updated : 05 Nov 2025 07:32 AM

பால்வள ஆராய்ச்சியில் மறுமலர்ச்சி எப்போது? வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 5

வேளாண் துறை இந்திய நாட்டின் வளர்ச்சியில் முதுகெலும்பு. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்கள் இன்று மாடிக் கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உயிர்ப்பாதுகாப்புக்கு அடிப்படையான நாட்டின் உணவுப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.

உலகளவில் வேளாண் ஆராய்ச்சி: இந்தியாவைப் பொறுத்தவரை முன்னொரு காலத்தில் வேளாண் துறையில் சிறந்து விளங்கியதற்கு எண்ணற்ற சான்றுகள் உண்டு. ஆனால், கால மாற்றத்துக்கேற்ப வேளாண் துறை எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளதா என்பது கேள்விக்குறியே. வேளாண் ஆராய்ச்சிகள், வேளாண் துறை முன்னேற்றத்தில் நாட்டின் பங்கு என்ன என்பது போன்ற விஷயங்களைக் கூர்ந்து கவனித்தால் வளர்ந்த நாடு களுடன் ஒப்பிடுகையில் இந்தியா பின்தங்கியுள்ளது என்பதே இன்றைய நிதர்சனம்.

வேளாண் துறையில் பால் உற்பத்தித் துறை மிக முக்கியமானது. உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவின் பங்கு தற்போது 24 சதவீதம். என்கிறபோதும், இங்கு பால் உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக் கையும் பால்வளம் தொடர்பான ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளன.வேளாண் ஆராய்ச்சிக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதியின் அளவும் முன்பு இருந்ததைவிட இப்போது குறைந் துள்ளது.

பால் உற்பத்தி: விலங்கு நலன், ஊட்டச்சத்து, பண்ணை மேலாண்மை, பால் உற்பத்தியில் சுகாதாரம் - பாதுகாப்பு, பால்வளத் துறையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, சந்தைப் படுத்துதல், விற்பனைக் கொள்கைகள், பால் பொருள்கள் தயாரிப்பு போன்ற தலைப்புகளில் பால்வள ஆராய்ச்சிகள் உலக நாடுகளில் மேற்கொள்ளப்படு கின்றன. சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் பால் வளம் தொடர்பான ஆராய்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன.

வேளாண் துறையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் முன்னோடி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இந்தியாவில் 1923இல் தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் (NDRI) பெங்களூருவில் தொடங்கப்பட்டு, 1955இல் ஹரியாணாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. 2009இல் உலகில் முதன்முறையாக குளோன் முறையில் எருமைக் கன்றை இந்நிறுவனம் வெற்றிகரமாக உருவாக் கியது. இந்தியப் பால்வள ஆராய்ச்சியில் இது ஒரு மைல்கல்லாக அமைந்தது.

அதன் பிறகு இதுபோன்ற மைல்கல் முயற்சிகள் எதுவும் இல்லை. வளர்ந்த நாடுகளுக்கு ஈடுகொடுக்கும் அளவிலான தொடர் ஆராய்ச்சிகள் தேவை. பால் உற்பத்தி தொடர்பாக ஆராய்ச்சி செய்ய விருப்பமுள்ள மாணவர்களுக்கு உள்ளூர் மட்டுமல்ல உலக அளவில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

வேலைவாய்ப்புகள்: உலக அளவில் முன்னணி பால் தயாரிப்பு நிறுவனங்களாகக் கருதப் படும் நிறுவனங்களில் 25க்கும் அதிகமானவை சுவிட்சர்லாந்தில் இருக்கின் றன. இவை தவிர அமெரிக்காவில் 1,868 பால் தயாரிப்பு நிறுவனங்களும், பிரிட்டனில் 428, ஆஸ்திரேலியாவில் 254, கனடாவில் 218, பிரான்சு நாட்டில் 109, ஜெர்மனியில் 86 என்கிற அளவில் செயல்படுகின்றன.

இந்தியாவில் அமுல், ஆவின், மில்மா, மதர் டெய்ரி, குவாலிட்டி உள்பட அரசு, தனியார் என சேர்த்து ஏறத்தாழ 765 பால் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இதில் 30க்கும் குறைவான பெரு நிறுவனங்கள் மட்டுமே சிறப்பாக செயல் படுகின்றன.

உலகில் பால் உற்பத்தியின் உச்சத்தில் இருக்கும் இந்தியாவில் பால்வளத் துறை தொடர்பான ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்தி, இத்துறை சார்ந்த வளர்ச்சியை மேம் படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. ‘வெண்மைப் புரட்சியின் தந்தை’ என்று போற்றப்படுவர் டாக்டர் வர்கீஸ் குரியன். அவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்து, சென்னை லயோலா கல்லூரியில் பட்டம் பெற்று கிண்டி பொறியியல் கல்லூரியில் மேற்படிப்பு படித்தவர்.

பின்னர், அமெரிக்காவின் மிக் ஷிகன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ். பட்டம் பெற்று நாடு திரும்பினார். அவர் ஏற்படுத்திய வெண்மைப் புரட்சியால் இந்தியாவில் பால்வளத் துறை புத்துயிர் பெற்றது. அந்த வரலாற்று நிகழ்வுக்குப் பிறகு இதே போன்றதொரு புரட்சி இன்னும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில் இது நிகழும் என நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) கீழ் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 71 ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்கள், 11 செயல்பாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள், 13 திட்ட மையங்கள், 6 தேசியப் பணியகங்கள், 14 ஆராய்ச்சி மையங்கள் செயல்படுகின்றன. இதில் மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் (சென்னை), கரும்பு இனப்பெருக்க நிறுவனம் (கோவை), வாழை ஆராய்ச்சி நிறுவனம் (திருச்சி) போன்றவை தமிழ்நாட்டில் செயல்படுகின்றன.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x