Published : 29 Oct 2025 07:33 AM
Last Updated : 29 Oct 2025 07:33 AM
கல்வி என்பது வேலைவாய்ப்புக்கான கருவி மட்டுமல்ல. சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறை. உண்மையான கல்வி வாழ்வாதாரத்தை மட்டுமன்றி, வாழ்க்கைக்கான நோக்கத் தையும் கற்பிக்கிறது. தரமான கல்வி மூலம் சமூகத்தின் திசையை ஆரோக்கியமான பாதையில் மாற்றி அமைக்கும் திறனை ஒருவர் பெறுகிறார்.
ஆராய்ச்சிக் கல்வி: அண்மைக் காலமாக இந்தியாவில் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துவருகின்றன. சமூகவியல், பொருளியல், பொறியியல், மருத்துவம், இதழியல் துறை போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து ஆராய்ந்து, இதுபோன்ற விபத்து களைத் தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கல்வி நிறுவனங்கள் திட்டங்களை வகுக்கலாம்.
இது போன்று பல சமூகப் பிரச்சினைகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை ஆராய்ச்சி நோக்கில் அணுகி நடை முறைக்குச் சாத்தியமான தீர்வுகளை மாணவர்கள் பரிந்துரைக்கலாம். பள்ளி, கல்லூரிப் படிப்புகளின் போதே மாணவர்களிடம் சூழல் அடிப் படையிலான கற்றல் (Context based learning) விதைக்கப்பட வேண்டும்.
புத்தகங்களில் உள்ளதை மட்டும் படிக்காமல் கல்வியின் வழி அறிந்த விஷயங்களை, அன்றாட வாழ்க்கையில் எப்படிப் பயன்படுத்துவது என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள். உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படு கிறது அமெரிக்காவின் எம்.ஐ.டி பல்கலைக் கழகம்.
இந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் டாடா புராஜெக்ட்ஸ் அமைப்போடு இணைந்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் எலக்ட்ரோடயலிசிஸ் மூலம் உப்பு நீரைச் சுத்திகரிக்கும் முறையைக் கண்டறிந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஜல்காவோன் எனும் கிராமத்தில் மாசடைந்த நீரைப் பருகியதால் அப் பகுதியைச் சேர்ந்தவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மாசுபட்ட நீரை, சுத்தமான குடிநீர் ஆக்கும் முயற்சியில் இறங்கிய இந்த ஆராய்ச்சிக் குழு வெற்றியும் கண்டது. இதுவே சூழல் அடிப்படையிலான கற்றலால் கிடைக்கும் பயன். இந்தியக் கல்வி முறையில் இது மிகக் குறைவு.
மாற வேண்டியது என்ன? - இந்தியாவில் உயர்கல்வித் துறை சார்ந்த நிறுவனங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கற்றல் நிறுவனங்கள், மற்றொன்று கற்றல் - ஆராய்ச்சி நிறுவனங்கள். இந்தியாவில் 5-10% மட்டுமே கற்றல் - ஆராய்ச்சி நிறுவனங்களாகச் செயல்படுகின்றன.
மீதமுள்ளவை அனைத்தும் பட்டம் வழங்கும் கற்றல் நிறுவனங் களாகவே இயங்குகின்றன. இந்நிலை மாற வேண்டும். பொறியியல் துறையில் மட்டுமல்லாமல், கலை, அறிவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப் பட வேண்டும்.
இந்தியாவின் தற்போதைய சராசரி வயது 28.7. மாறாக சீனாவின் சராசரி வயது 39.8, அமெரிக்காவின் சராசரி வயது 38.5. பெரும்பாலான வளர்ந்த நாடுகள் முதியோர் நாடுகளாக மாறி வருகின்றன. இந்தச் சூழலில் இளம் வயது மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருப்பதால், தற்போதைய காலக்கட்டத்தில் தரமான கல்வியிலும் ஆராய்ச்சித் துறையிலும் சரியான முதலீடுகளைச் செய்தால், அடுத்த பத்து ஆண்டுகளில் உலகின் அறிவுக் களஞ்சியமாக நம் நாடு மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
செய்ய வேண்டியது… மனித மூளை என்பது ஓர் அழகிய பூந்தோட்டம். அதில் விதைக்கப்படும் எண்ணங்களும் அனுபவங்களுமே அதன் இறுதி விளைவை நிர்ணயிக்கும். நல்ல சிந்தனைகளும் அனுபவங்களும் விதைக்கப்பட்டால், அறிவும் படைப் பாற்றலும் மலரும் வளமான தளமாக அது மாறும்.
நம் நாட்டில் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக 90% செலவிடும் சூழலில், கல்விக்கு வெறும் 10% மட்டுமே செலவிடுகிறோம். இங்கு கல்வி ஆராய்ச்சிக்கான அடித்தளம் வலுவாக மாற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மனித வளம், நேரம், சூழல், நிதி ஆகியவை ஒருசேர இருந்தால் மட்டுமே ஒரு நாட்டின் ஆராய்ச்சிக் கல்வி பயன் தரும்.
எந்த நாடு இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கல்விக்காக அதிகம் செலவிடுகிறதோ அந்த நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் மேம்படுகிறது. சீனா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இதற்குச் சான்று. வளர்ந்த நாடுகளின் கல்வி முறை, மாணவர்களின் சிந்தனைத் திறனையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் ஆராய்ச்சிக் கல்விக்கான ஊக்குவிப்பால் மற்ற நாடுகளைச்சேர்ந்த திறமையான மாணவர்களும் கூட அங்கு சென்று திறம்படப் பணியாற்றுகிறார்கள்.
வளர்ந்த நாடுகளின் ஆராய்ச்சிகள் ஏற்கெனவே வெகுதொலைவுக்கு முன்னேறிவிட்டன. இந்தியாவில் கல்வி ஆராய்ச்சிக்கான முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது. இதுபோல இந்தியா வில் உள்ள திறமையான மாணவர்களுக்கும் கற்றலுடன் ஆராய்ச்சிப் படிப்புக்கான சூழலை உருவாக்கி ஊக்கம் அளித்தால், தனிநபர் மட்டுமன்றி ஒட்டுமொத்த நாடும் வளர்ச்சி யடையும். உலக அளவில் பல்வேறு துறை களில் ஆராய்ச்சிப் படிப்பின் நிலை என்ன, வாய்ப்புகள் என்ன என்பது போன்ற விஷயங்களை இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; chez@indiacollegefinder.org
முந்தைய அத்தியாயம்: கல்வியின் பொற்காலமும் புதிய சவால்களும் - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT