Published : 22 Oct 2025 07:03 AM
Last Updated : 22 Oct 2025 07:03 AM
பல்வேறு அரசியல் மாற்றங்களும் சூழ்நிலை சவால்களும் எவ்வளவு தீவிரமாக மாறினாலும், தமிழ்ச் சமூகம் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடிக்கொண்டே இருந்தது. இந்த விடாமுயற்சியின் பின்னணியில் கல்வியின் மீதான ஆழமான நம்பிக்கையும், அறிவார்ந்த முன்னேற்றத்தின் மீதான பற்றும் முக்கியக் காரணங்களாக அமைந்தன.
கல்விமுறை: 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்லணை இன்றும் செயல்படுவது நீர்மேலாண்மையில் தமிழர்களின் பொறியியல் திறனுக்குச் சான்று. கல்வி, விவசாயம், வானியல், கட்டிடக்கலை, இலக்கியம் என எந்தத் துறையிலும் தமிழர்களின் பங்களிப்பு துல்லியமாகவும் வியக்கத்தக்கதாகவும் காலம் கடந்து நிற்ப தாகவும் விளங்குகிறது. சங்க இலக் கியங்களிலிருந்து நவீன காலம் வரை, கல்வி மூலம் சமூக முன்னேற் றத்தை அடைவதில் தமிழர்கள் காட்டிய ஈடுபாடு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.
கல்வி ஒரு சமூகத்தின் அறிவுக்களஞ்சியம் என்றால், அந்தக் களஞ்சி யத்தின் பல அரிய செல்வங்களை முற்றிலும் இழந்துவிட்டோம். மீதமுள்ள சிலவற்றையும் படிப்படியாக இழந்து கொண்டிருக்கிறோம். இந்த இழப்பு இன்றைய சமூக வளர்ச்சியையும் பாதிக்கிறது. இந்தக் கல்வி மரபு தலை முறை தலைமுறையாகப் பேணப்பட்டதால், தமிழ்ச் சமூகம் எந்தச் சூழலிலும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு முன்னேறும் ஆற்றலைப் பெற்றது.
சிந்தனைத் திறனை வளர்த்தல்: இன்றைய வணிகமயமான கல்விச்சூழலில் ஆக்கபூர்வ சிந்தனையையும் கருத்துகளை ஆழமாகப் புரிந்து கொள்ளும் திறனையும் கற்றுத் தரு வதில் சிக்கல் நிலவுகிறது. பள்ளியில் இருந்தே மாணவர்களுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையைக் கற்றுத் தந்து ஊக்குவிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மறைந்த மு.ஆனந்த கிருஷ்ணன் வலியுறுத்துவார்.
மனப் பாடம், மதிப்பெண், சான்றிதழ் மட்டுமே இலக்கு எனும் போக்கு கல்வியின் உண்மையான நோக்கத்தை மங்க வைத்துள்ளது. உண்மையான கல்வியை நிலை நிறுத்த 3 முக்கிய அடித்தளங்கள் அவசியம் என யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்துகிறது.
அனைவருக்கும் கல்வி (Access), சம வாய்ப்பு (Equity), தரமான கல்வி (Quality) ஆகியவை உயர்கல்வியின் முக்கிய அங்கங் களாக அமைந்துள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்று குறைந்தால் கல்வி முழுமையடையாது. மூன்றும் இணைந்து செயல்படும்போது மட்டுமே சமத்து வத்தையும் நல்ல சமூகத்தையும் கல்வி அறிவைக் கொண்டு உருவாக்க முடியும். மாணவர்களின் இயல்பான சிந்தனைத் திறனை, பெற்றோரும் ஆசிரியரும் மெருகேற்ற வேண்டும்.
சுயமாக இயங்கக்கூடிய ஆற்றலை உருவாக்க வேண்டும். ஏன், எதற்கு, எவ்வாறு, எப்படி எனக் கேள்வி எழுப்பும் திறனையும் கற்பனைத் திறனையும் வளர்க்க வேண்டும். முன்னொரு காலத்தில் இப்படிப்பட்ட கல்வி முறை இருந்தது. ஆசிரியர் களிடம் மாணவர்கள் நேரடியாகக் கற்றது, இதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. இக்கல்வி முறை இன்னும் வளர்ந்த நாடுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பின்பற்றப் படுகிறது.
பொற்காலம்: பின்னர் கிறித்துவத் தொண்டு நிறுவனங்களும் எண்ணற்ற சமூகச் சேவகர்களும் கல்வியை, கிராமங் களுக்கும் கொண்டுசென்றனர். புரவலர்கள் பச்சையப்பன், தியாகராயர், சாராள் டக்கர் போன்றோரும் பெயர் அளவில் அறியப்படாத பலரும் கல்வி வளர்ச்சிக்காகப் பங்காற்றியுள்ளனர். அவர்களின் தொண்டால் தமிழ்ச் சமூகம் கல்வித் துறையில் ஒரு பொற்காலம் கண்டது.
நாடு விடுதலை பெற்ற அடுத்த ஆண்டான 1948இல் சர்வபள்ளி ஆர்.ராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்தியாவில் முதல் கல்விக் குழு அமைக்கப்பட்டது. கல்வி தொடர்பாகப் பல கருத்துகளைத் தெரிவித்திருக்கும் அவர், ‘பல்கலைக்கழகத்தின் முக்கியப்பணி மாணவர்களுக்குப் பட்டம் கொடுப்பது மட்டும் அல்ல. கல்வி உணர்வை வளர்ப்பதும், கற்றலை மேம் படுத்துவதும் அதைவிட முக்கியமானது. இதற்கு மாணவர்கள் ஒன்றிணைந்து வாழும் சூழலும், உயர்கல்வி ஆய்வு வாய்ப்புகளும் அவசியம்’ என்பதைச் சுட்டிகாட்டியுள்ளார்.
நவீன கல்வித் தொழில்நுட்பம், டிஜிட்டல் மாற்றம், உலகளாவிய போட்டி ஆகிய அனைத்தும் புதிய வாய்ப்பு களையும் புதிய கேள்விகளையும் எழுப்புகின்றன. பழங்காலக் கல்வி முறையில் உள்ள சிறந்த கருத்து களை எடுத்துக்கொண்டு நிகழ்காலக் கல்விச் சூழலின் நிலையை உணர்ந்து எதிர்காலத்துக்கான மேம்பட்ட கல்வி முறையை உருவாக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம். வருங்காலச் சந்ததி யினர் பாதிக்கப்படாமல் இருக்க, தமிழ் மரபையும் ஆற்றலையும் மீட்டெ டுக்கும் முயற்சியில் அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; chez@indiacollegefinder.org
முந்தைய அத்தியாயம்: நிகரில்லா உயர்ந்த செல்வம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 2
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT