Published : 15 Oct 2025 06:59 AM
Last Updated : 15 Oct 2025 06:59 AM
‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை’ - (திருக்குறள் எண் - 400)
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர், கல்வியின் உண்மைப் பொருளை இந்தக் குறளின் மூலம் ஆழமாக விளக்கியுள்ளார். ஒருவருக்கு அழிவில் லாத, நிகரில்லாத உயர்ந்த செல்வம் கல்வி என்பது இன்றுவரை மாறாத உண்மை.
இன்றைய கல்விச் சூழல்: சிலருக்குச் செல்வம் எளிதாகக் கிடைக்கலாம். இன்னும் சிலருக்கு அதிகமாக முயன்றால் மட்டுமே கிடைக்கும். ஆனால், உழைப்பால் பெற்ற செல்வத்துக்கே உண்மையான மதிப்பு உண்டு. இதேபோல் பணத்தால் வாங்க முடியாத, உழைப்பாலும் பேரார்வத்தாலும் மட்டுமே பெறக்கூடிய பெருஞ்செல்வம் கல்வி.
இன்றைய கல்விச் சூழலில் இது பிடிக்கவில்லை, அது கடினம் என்று சில பாடங்களை மாணவர்கள் ஒதுக்கவும் வெறுக்கவும் கூடாது. இன்று நீங்கள் தவிர்க்கும் சில பாடங்கள்தான், நாளை உங்கள் வளர்ச்சிக்கான அடித்தளமாக மாறலாம். எல்லா பாடத்திலும் ஒரு புதிய பார்வை, ஒரு புதிய திறன் மறைந்திருக் கிறது.
வணிகமா? வாய்ப்பா? - மனிதர்கள் இயற்கையிலேயே சூழலுக்கு ஏற்பக் கற்றுக்கொள்ளும் (Environment based learning) திறன் பெற்றவர்கள். ஆனால், இன்றைய வணிகமயமான கல்வி முறையில், கற்றலின் இயல்பே தொலைந்து விட்டதோ என்கிற கேள்வி எழுகிறது. உதாரணத்துக்கு, சிறார்களிடம் ஆண்ட்ராய்டு அல்லது ஐபோன் போன்ற திறன்பேசியைத் தருகிறோம் என்றால், சில நாள்களிலேயே அவர்கள் தானாகவே திறன்பேசியைப் பயன்படுத்தக் கற்றுகொள்வார்கள்.
இதற்கு மாறாகத் திறன்பேசியைத் திறக்க ஒரு வாரம் வகுப்பு, வாட்ஸ் அப்புக்கு ஒரு மாதம் வகுப்பு எனப் பாடத்திட்டங்களை வகுத்தால், கற்றல் மீதுள்ள ஆர்வத்தையே அவர்கள் இழந்துவிடக்கூடும். கல்வித் துறையிலும் இன்று இதே நிலைதான் நிலவுகிறது.
மாணவர்கள் விரும்பிக் கற்கும் சுதந்திரம் அவர்களிடமிருந்து மிக அதிகமாகவே குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய கல்வி முறையில் நீங்கள் பள்ளியில் அல்லது கல்லூரியில் என்ன வகுப்பில் படித்தாலும் 50 சதவீதம் பிடித்த பாடம், 50 சதவீதம் பிடிக்காத பாடமாக இருக்கிறது. கற்றலை எளிமையாக்க வேண்டிய இடத்தில், சிக்கலாக்குவது கல்வியின் நோக்கமாக இருக்கக் கூடாது. மாணவர்கள் விருப்பப்பட்டுப் படிப்பது என்பது மிகக் குறைவாகவே உள்ளது.மாறாக, காலத்தின் கட்டாயத்தால்தான் படிக்கிறார்கள்.
ஒரு பாடத்தை மாணவர் ஒருவர் சரியாக உள்வாங்கிக்கொள்ள எளிமையான முறையில் கற்றுத்தரும் ஆசிரியரே முதன்மைக் காரணம். இன்றைய கல்விச் சூழலில் ஒரு பாடத்தை எளிமையான முறையில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அதனைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் தங்களையும் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனித் திறன் உண்டு. மாணவர்களின் தனித்திறமையைக் கண்டறிந்து, அதை வளர்க்கும் வாய்ப்பை கல்வி அளிக்க வேண்டும். ஒரு பாடம் சிறப்பானது, மற்றொன்று சிறப்பானது அல்ல என்கிற பார்வையைத் தவிர்த்து எல்லாப் பாடங்களும் ஒரு குழந்தையின் வாழ்க்கைப் பயணத்தில் மதிப்புடை யவை என்பதை உணர்த்துவதே கல்வியின் மிக முக்கியமான வேலை.
பொருளியலாளர் அமர்த்திய சென் கூறுவதுபோல் ஒரு குடும்பம் அதன் வருமானத்துக்கு ஏற்ப கல்விக்குச் செலவிட வேண்டும். இது குடும்பத்தின் சூழலை மேம்படுத்தும், பெற்றோர் - குழந்தை உறவை வலுப்படுத்தும். அளவுக்கு மீறிய கல்விச் செலவு அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தமிழர் மரபு: சமகாலக் கல்விச் சூழலில் பிரச்சினைகள் பல இருந்தாலும், அதைக் கடந்து எப்படி வெற்றிபெற வேண்டும் எனச் சிந்திக்க வேண்டும். தனிமனித வளர்ச்சியைச் சார்ந்ததே ஒரு நாட்டின் வளர்ச்சி. எண்ணற்ற அழிவுகளைத் தாண்டி இன்றும் பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம்.
அதை யாராலும் அழிக்க முடியாமல் இருப்பதற்குத் தமிழ் மொழியும் அதன் கல்வி முறையும் முக்கியக் காரணங்கள். இன்றும் அந்த ஆற்றல் நமக்குள் உறங்கிக்கிடக்கிறது. வரலாற்றில் கல்வியின் பொற்காலத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்!
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; chez@indiacollegefinder.org
முந்தைய அத்தியாயம்: தேடினால் ஜெயிக்கலாம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT