Last Updated : 17 Sep, 2025 07:36 AM

 

Published : 17 Sep 2025 07:36 AM
Last Updated : 17 Sep 2025 07:36 AM

வேலைவாய்ப்பு வழங்கும் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 21

உலகிலேயே கால்நடைச் செல்வமும் பால் உற்பத்தியும் அதிகமாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. விவசாய நாடுகளில் சாகுபடி பொய்த்துப் போகும்போது விவ சாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். எனவேதான், கால்நடைகள், விவசாயத்தின் பிரிக்க முடியாத அங்கமாகத் திகழ்கின்றன.

கிராமப்புறப் பொருளாதாரத்தில் கால்நடை வளர்ப்பு முக்கியமான அம்சம். எனவேதான், மருத்துவத் தொழில் படிப்புகளில் கால்நடை மருத்துவ அறிவியலும் முக்கியப் படிப்புகளில் ஒன்றாகத் திகழ் கிறது. கிராமப்புறங்களில் மாடுகளுக்கு நோய் வந்தால் மருந்து கொடுத்துக் காப்பாற்றுவது, மாடுகளுக்குச் செயற்கைக் கருத்தரிப்பு ஊசி செலுத்துவது, வளர்ப்பு விலங்குகளுக்கான மருத்துவ சிகிச்சை… இப்படிக் கால்நடை மருத்துவர்களின் சேவை தவிர்க்க முடியாததாகத் திகழ்கிறது.

ஆசியாவிலேயே முதல் முறையாக 1989இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, தலைவாசல், தேனி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் பி.வி.எஸ்ஸி & ஏ.ஹெச். நான்கரை ஆண்டுப் படிப்பைப் படித்து கால்நடை மருத்துவராகலாம். அத்துடன், இப்படிப்பு மாணவர்களுக்கு ஓராண்டு கட்டாய உள்ளிருப்புப் பயிற்சியும் உண்டு.

பிளஸ் டூ தேர்வில் உயிரியல் (அல்லது விலங்கியல் மற்றும் தாவரவியல்), இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். உயிரியல் பாடத்துடன் அக்ரிகல்சுரல் பிராக்டிசஸ், பவுல்ட்ரி, டெய்ரியிங் ஆகிய தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களும் இப்படிப்பில் சேர அனுமதிக்கப்படுவார்கள். இந்தப் படிப்பில் உள்ள மொத்த இடங்களில் 5 சதவீத இடங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடும் உண்டு. அகில இந்திய அளவில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரிகளில் உள்ள 15 சதவீத இடங்கள் இந்தியக் கால்நடை மருத்துவ கவுன்சில் மூலம் நிரப்பப்படும். இதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

வேலைவாய்ப்புகள்: கால்நடை மருத்துவப் படிப்பை முடித்தவுடன், அரசு கால்நடை மருத்துவமனை களில் கால்நடை உதவி மருத்துவர் பணியில் சேரலாம். உள்ளாட்சி அமைப்புகளில் கால்நடை விரிவாக்க அதிகாரி பணியிலும் சேரலாம். மாநில, மத்திய அரசுகளின் கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களில் ஆராய்ச்சி உதவியாளர்களாகவும், இளநிலை ஆராய்ச்சியாளர் களாகவும் பணிபுரியலாம். ராணுவத்திலும் ‘Remount Veterinary Corps’ பணியில் அதிகாரிகளாகச் சேரலாம்.

உயிரியல் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள் ஆகியவற்றிலும் கால்நடை மருத்துவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கோழிப்பண்ணை களிலும், பந்தயக் குதிரைகளை இனப்பெருக்கம் செய்வித்து வளர்க்கும் நிலையங்களிலும் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி ஐ.ஏ.எஸ். போன்ற நிர்வாகப் பணிகளில் சேருவதில் ஆர்வம் காட்டும் கால்நடை மருத்துவப் பட்டதாரிகளும் உண்டு.

இறைச்சிக் கூடங்கள், பால் பதனீட்டு நிலையங்கள், ஃபார்ம சூட்டிகல் நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிலையங்கள், கால்நடை மருத்துவ - தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடைத் தீவன தொழிற்சாலைகள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், கால்நடைப் பண்ணைகள், இறைச்சி பதனீட்டுத் தொழில் நிறு வனங்கள், உலர்ந்த முட்டைப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவற்றிலும் கால்நடை மருத்துவம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. விலங்குகளின் நலனுக்காகச் செயல்படும் தொண்டு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தனியே கிளினிக் வைத்து நடத்துபவர் களும் இருக்கிறார்கள்.

பி.டெக். படிப்புகள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சென்னையை அடுத்த கொடுவெளியில் உள்ள காலேஜ் ஆஃப் ஃபுட் அண்ட் டெய்ரி டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஃபுட் டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு பி.டெக். படிக்கலாம். ஓசூரில் உள்ள காலேஜ் ஆஃப் பவுல்ட்ரி அண்ட் மேனேஜ்மெண்ட் கல்வி நிறுவனத்தில் பி.டெக். பவுல்ட்ரி டெக்னாலஜி படிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளைப் படித்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேரலாம்.

பால்வளத் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான ஹரியாணாவின் கர்னலில் உள்ள நேஷனல் டெய்ரி ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டில் (NDRI) பி.டெக். டெய்ரி டெக்னாலஜி படிக்கலாம். பெங்களூரு, கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகிய இடங்களில் இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நடத்தப்படும் பி.டெக். டெய்ரி டெக்னாலஜி படிப்பதற்கு ‘CUET’ நுழைவுத் தேர்வை எழுத வேண்டும்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x