Last Updated : 20 Aug, 2025 07:08 AM

 

Published : 20 Aug 2025 07:08 AM
Last Updated : 20 Aug 2025 07:08 AM

தவிர்க்க முடியாத மருத்துவப் படிப்பு | புதியன விரும்பு 2.0 - 17

நோயாளிகளின் நோய் குறித்த விவரக்குறிப்புகளைப் பராமரிப்பது, பிரசவம் பார்ப்பதில் உதவி, குழந்தைகளை மருத்துவமனையில் இருக்கும்வரை பார்த்துக் கொள்வது என மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவதிலிருந்து அறுவைசிகிச்சை அரங்கில் மருத்துவர்களுக்கு உதவியாக இருப்பதுவரை நர்ஸ்கள் என்கிற செவிலியர்களுக்குப் பலதரப்பட்ட பணிகள் உள்ளன.

பிஎஸ்சி நர்சிங் படிப்பு: மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் இடம் கிடைக்காதவர்களுக்கான மற்றொரு வாய்ப்புதான் நர்சிங் என்று கருத வேண்டியது இல்லை. இரண்டு படிப்புகளும் மருத்துவத் துறை சார்ந்தவை என்றாலும்கூட, இரண்டுக்கும் தனித்தனித் திறமைகளும் குணநலன்களும் தேவை.

நோயாளிகளுக்கு என்ன நோய் என்பதைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மருத்துவரின் கடமை என்றால், நோயாளிகளைப் பரிவுடன் கவனித்துக்கொள்ள வேண்டியது செவிலியரின் கடமை. எம்பிபிஎஸ் படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியதைப் போல, பிஎஸ்சி நர்சிங் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை.

பிளஸ் டூ மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே இப்படிப்புக்கு தகுதியுடையவர்கள் தேர்வுசெய்யப் படுகிறார்கள்.
ஆண் செவிலியர்கள் இருந்தாலும்கூடப் பெண்களே அதிக அளவில் செவிலியர்களாகப் பணிபுரிகிறார்கள். நர்சிங் படிப்பைக் கற்றுத்தர நாடு முழுவதும் ஏராளமான நர்சிங் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் நான்கு ஆண்டுப் படிப்பைப் படிக்கலாம். பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் (அல்லது விலங்கியல் - தாவரவியல்), இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். தமிழ்நாட்டில் இந்தப் படிப்பில் சேர குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பட்டியல், பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலைப் பட்ட நர்சிங் படிப்புகள்: பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு எம்எஸ்சி நர்சிங் படிக்கலாம். பொதுச் சுகாதாரத்தில் முதுநிலைப் பட்டப் படிப்பை (எம்பிஎச்) படிக்கலாம். நர்சிங் பட்டப் படிப்பு படித்து முடித்தவர்கள் மத்திய, மாநில அரசு மருத்துவனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ராணுவ மருத்துவமனைகளிலும் மனநலக் காப்பகங்களிலும் செவிலியர் ஆகலாம். தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நர்சிங் படிப்பைப் படித்து முடித்துவிட்டுச் சில ஆண்டுகள் அனுபவத்துக்குப் பிறகு, வெளிநாடுகளில் வேலைக்குச் செல்லும் செவிலியர்கள், அதற்கான சிறப்புத் தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும்.

நர்சிங் டிப்ளமோ படிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங் டிப்ளமோ படிப்பில் சுமார் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. இப்படிப்புக் காலம் மூன்றரை ஆண்டுகள். இதில் ஆறு மாதக் காலம் உள்ளிருப்புப் பயிற்சியும் அடங்கும். பிளஸ் டூ படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இப்படிப்பில் சேரலாம்.

அதிலும் பெண்கள் மட்டுமே சேர அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன், திருநர் சமூகத்தினருக்கும் இடம் உண்டு. இப்படிப்பில் சேரும் மாணவிகள் தமிழை முதல் மொழியாகப் படித்திருக்க வேண்டும். திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியாது.

இப்படிப்பில் 65 சதவீத இடங்கள் பிளஸ் டூ வகுப்பில் உயிரியல் (அல்லது விலங்கியல் - தாவரவியல்), இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 சதவீத இடங்கள் நர்சிங் தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு அல்லது ஃபவுண்டேஷன் சயின்ஸ் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

போஸ்ட் பேசிக் பிஎஸ்சி (நர்சிங்) - நர்சிங் டிப்ளமோ படித்த மாணவிகள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்வதற்காக போஸ்ட் பேசிக் பிஎஸ்சி (நர்சிங்) படிப்பில் சேர்ந்து படிக்கலாம். இது மூன்று ஆண்டுப் படிப்பு. நர்சிங் டிப்ளமோ படித்துவிட்டு நர்சிங் கவுன்சிலில் தங்களைச் செவிலியராகப் பதிவுசெய்தவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள டிப்ளமோ படிப்பைத் தவிர்த்துப் பிற கல்லூரிகளில் டிப்ளமோ படித்த ஆண்கள், இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் 1:9 என்கிற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இப்படிப்பில் சேர விரும்புவர்களுக்கு 45 வயதுக்கு மேல் ஆகி இருக்கக் கூடாது. நர்சிங் டிப்ளமோ படித்துவிட்டு அரசுப் பணியில் இருப்பவர்கள் இப்படிப்பைப் படித்து முடித்த பிறகு, மீண்டும் பணிக்காலம் முழுவதும் அரசுப் பணியில் தொடர்வேன் என்பதற்கு உத்தரவாதம் தரவேண்டியது அவசியம்.

நர்சிங் படிப்பில் சேர மாணவியர், குறிப்பாக கிராமப்புற, சிறுநகரங்களைச் சேர்ந்த மாணவியர் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறார்கள். செவிலியர் தொழிலை வெறும் சம்பளத்துக்கான பணி என்று மட்டும் நினைத்துவிட முடியாது; இது சமூகச் சேவையும்கூட.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளி, சிகிச்சை முடித்து குணமடைந்து வீட்டுக்குச் செல்லும்போது கண்களில் நன்றி மல்க கரம்கூப்புகிறாரே, அது தரும் திருப்தியும் மகிழ்ச்சியும் வேறு எந்தத் தொழிலிலும் கிடைக்காது! இதுதான் நர்சிங் படிப்பின் சிறப்பு அம்சம்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x