Published : 20 Aug 2025 07:03 AM
Last Updated : 20 Aug 2025 07:03 AM
பணியிடங்களில் ஆட்களைத் தேர்வுசெய்ய தற்போது மெய்நிகர் (virtual reality) நேர்முகத் தேர்வும் நடத்தப்படுகிறது. இன்னும் பரவலாகவில்லை என்றாலும் விமானப் போக்குவரத்து, விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிடி), மருத்துவம், தொழில்நுட்பத் துறைகளில் இந்த முறை அறிமுகமாகிவிட்டது.
எப்படி இருக்கும்? - மெய்நிகர் நேர்முகத் தேர்வுகளில் உண்மை என நம்பும்படி நிர்வாகச் சூழல் உருவாக்கப்பட்டு, அதில் உள்ள சவால்களை தீர்க்கும் திறமையின் அடிப்படையில் நீங்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவீர்கள். உதாரணமாக, விமான ஓட்டிக்கான உரிமம் வழங்கும் தேர்வின்போது பொய் விமானம் உருவாக்கப்பட்டு ‘simulation’ முறையில் தேர்வு நடத்தப்படும். அதன் மற்றொரு மேம்பட்ட வடிவத்தை மெய்நிகர் நேர்முகத் தேர்வு எனலாம்.
வாடிக்கையாளர் சேவை அதிகாரிக்கான நேர்முகத் தேர்வை எடுத்துக் கொள்வோம். தேர்வு தொடங்கும்போது உங்களுக்கு ஒரு ‘ஹெட்செட்’ அளிக்கப்படும். அதன் வழியே உங்களுக்கான கட்டளைகள் அளிக்கப்படும். அப்போது நீங்கள் ஓர் அலுவலகத்தில் இருப்பது போன்ற சூழலை உணர்வீர்கள். ‘ஹெட்செட்’ என்பது உண்மையில் மெய்நிகர் சாதனம்.
‘Oculus’, ‘HTC Vive’ போன்றவை பிரபலமான மெய்நிகர் சாதனங்கள். இவற்றைப் பயன்படுத்தும்போது முப்பரிமாணத்தில் அலுவலகச் சூழலை உணர முடியும். கண்ணுக்கு மெய்நிகர் காட்சிகள், சென்சார்கள் மூலம் அறை முழுவதும் நகரும் திறன், கைகளால் செய்யக்கூடிய இயக்கங்கள் ஆகியவற்றின் மூலம் ஒரு செயற்கை உலகத்துக்கு ஒருவரைக் கூட்டிச்செல்லும்.
இது போன்ற தேர்வுகளில் நீங்கள் தொழில்நுட்பம் தொடர்பாகவும் உளவியல்ரீதியாகவும் சரியான பதிலைத் தரவேண்டும். அலுவலகத்தின் உயரதிகாரியாக உங்களிடம் உரையாடுவது ஒரு ரோபாட்டாகக்கூட இருக்கலாம்.
என்ன செய்யலாம்? - தேர்வின்போது உங்களுக்கு ஒரு சூழல் அளிக்கப்படுகிறது. அதில் ஒரு வாடிக்கையாளர் உங்களைத் தொடர்புகொண்டு தனது குறைகளை விளக்குகிறார் என வைத்துக்கொள்வோம். நீங்கள் நிதானமாகத் தீர்வுகளை அளிக்க வேண்டும். சில நேரம் வாடிக்கையாளருக்கு என்ன பதில் கூறலாம் என்பதற்கான சாத்தியங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ‘உங்கள் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
குறைபாடு உள்ள பொருளைத் திருப்பித் தருவது அல்லது மாற்றிக்கொள்வது என்பது குறித்து, எங்கள் விதிகளை ஒருமுறை சரிபார்த்துவிட்டு உங்களைத் தொடர்புகொள்கிறேன்.
அதுவரை தயவுசெய்து காத்திருங்கள்’ என்பது பொருத்தமான பதிலாக இருக்கும். மெய்நிகர் தேர்வின்போது ‘ஹெட்செட்’ பொருத்தத்தையும் (compatability) நிலையான இணையத்தொடர்பு இருக்கிறதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம்.
தேர்வுக்குச் செல்லும் முன், ‘AltspaceVR’ அல்லது ‘VRChat’ போன்ற இலவசச் செயலிகளைப் பயன்படுத்தி மெய்நிகர்ச் சூழலுக்கு உங்களைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். தெளிவாகப் பேசுங்கள். வாடிக்கையாளருக்கும் நிறுவனத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் வகையில் உங்களது பதில்களும் செயல்பாடும் இருக்க வேண்டும். உடல்மொழி சீராக இருக்க வேண்டும். குரல் தெளிவாக இருக்க வேண்டும். என்னதான் இருக்கும் இடத்தில் இருந்து இந்தத் தேர்வில் கலந்துகொண்டாலும், அந்த நேரத்தில் வேறு எந்த விஷயத்திலும் கவனத்தைத் திசைதிருப்பாமல் இருப்பது நல்லது.
- aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT