Published : 12 Aug 2025 04:36 PM
Last Updated : 12 Aug 2025 04:36 PM
ஆக.5: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் காணாமல் போயினர்.
ஆக.6: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் தந்தை - மகன் இடையே ஏற்பட்ட தகராறை விசாரிக்க சென்ற குடிமங்கலம் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை தகறாரில் ஈடுபட்ட மகன் வெட்டி படுகொலை செய்தார்.
ஆக.6: தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘ நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தது.
ஆக.6: பீஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேர் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆக.6: இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50%ஆக உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டார். ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
ஆக.7: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் எஸ்.எஸ். சண்முகவேலை வெட்டிக் கொன்ற வழக்கில் தொடர்புடைய நபர் மணிகண்டனை போலீஸார் என் கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
ஆக.7: நாட்டின் 14ஆவது குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் ஜூலை 21இல் பதவியை ராஜினாமா செய்தார்.
ஆக.8: பள்ளிக் கல்விக்கான மாநிலக் கல்விக் கொள்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இக்கொள்கையில் 2025-26 கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைமுறை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக.8: புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு நாடாளுமன்றத்தில் அறிமுக்கப்படுத்தப்பட உள்ளதால், 2025 பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா வாபஸ் பெறப்பட்டது.
ஆக.9: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று இந்திய விமானப் படை தளபதி ஏ.பி. சிங் தெரிவித்தார்.
ஆக.9: தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை நிறைவேற்றாத 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பட்டியலிலிருந்து நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. இதில் 22 கட்சிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை.
ஆக.10: இந்தியாவில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை 891ஆக அதிகரித்துள்ளதாக சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்பாக 16ஆவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஆக.10: பிஹார் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை வெளியிட அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆக.11: திருத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆக.11: கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்ச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT