Published : 06 Aug 2025 07:36 AM
Last Updated : 06 Aug 2025 07:36 AM
ஃபுட் டெக்னாலஜி: தற்போது கடைகளில் கிடைக்கும் ‘இன்ஸ்டன்ட்’ பழ ரசங்களும் சூப்களும் சமையல் பொருள்களும் உணவைப் பதப்படுத்துதல் குறித்த தொழில் நுட்பங்களைக் கற்றுத்தரும் ஃபுட் டெக்னாலஜி படிப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்கி யுள்ளன. ஃபுட் டெக்னாலஜி படிப்பவர்களுக்கு உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப் பதனீட்டு நிறுவனங்கள், குளிர்பான தயாரிப்பு - குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள், மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள், உணவுத் தரக்கட்டுப்பாட்டு மையங்கள் போன்றவற்றில் வேலை கிடைக்கும்.
உணவுப் பதனீட்டுத் தொழில்நுட்பப் படிப்புகளைக் கற்றுத்தருவதில் நாட்டிலேயே முக்கியத் துவம் வாய்ந்த கல்வி நிறுவனம், தஞ்சாவூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபுட் டெக்னாலஜி, ஆந்த்ரபிரனர்ஷிப் அண்டு மேனேஜ்மென்ட் (NIFTEM). மத்திய உணவுப் பதனீட்டு அமைச்சகத்தால் உருவாக்கப் பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் இது.
இங்கு பி.டெக். ஃபுட் டெக்னாலஜி நான்கு ஆண்டுப் படிப்பைப் படிப்பதற்கு ஜேஇஇ மெயின் (முதல் தாள்) தேர்வை எழுதி, அதில் அகில இந்திய அளவில் தகுதிபெற்றிருக்க வேண்டியது அவசியம். ஃபுட் புராசஸ் இன்ஜினியரிங், ஃபுட் புராசஸ் டெக்னாலஜி, ஃபுட் சேஃப்டி அண்டு குவாலிட்டி அஷ்யூரனஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் இங்கு எம்.டெக். படிக்கலாம். கோவையில் உள்ள வேளாண் பொறியியல் கல்லூரி - ஆராய்ச்சி நிறுவனத்தில் பி.டெக் ஃபுட் டெக்னாலஜி படிப்பு உள்ளது. இது தவிர, இப்படிப்பைக் கற்றுத்தர வேறு கல்வி நிறுவனங்களும் உள்ளன.
பிரின்டிங் டெக்னாலஜி: அச்சுத் தொழில்நுட்பப் படிப்பைக் கற்றுத்தரும் முன்னோடிக் கல்வி நிறுவனம் கிண்டி பொறியியல் கல்லூரி. தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக பிரின்டிங் டெக்னாலஜி இளநிலைப் பட்டப்படிப்பு தொடங்கப் பட்டது இங்குதான். தற்போது இங்கு பிரின்டிங் அண்ட் பேக்கேஜிங் டெக்னாலஜி பாடப்பிரிவில் பிஇ படிக்கலாம்.
இந்தப் பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்குப் பல்வேறு வகையான அச்சிடும் முறைகள், காலத் துக்கு ஏற்ற வகையில் நவீன அச்சுப்பணிகளில் கணினிப் பயன்பாடு, பேக்கேஜிங் நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கற்றுத்தரப்படும். புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பேக்கேஜிங், பிரின்டிங் நிறுவனங்கள், அச்சு இயந்திரத் தயாரிப்பு நிறு வனங்கள், அரசு அச்சகங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங் களில் பிரின்டிங் டெக்னாலஜி படித்தவர்க ளுக்கு வேலை கிடைக்கும்.
பார்மசூட்டிகல் டெக்னாலஜி: இயற்கை, வேதியியல் பொருள்களிலிருந்து மருத்துவ மூலக்கூறு களைப் பிரித்து மனிதர்கள் பயன் படுத்தும் வகையிலான மருந்துப் பொருள்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தரும் படிப்பு பார்மசூட்டிகல் டெக்னா லஜி. மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, உணவு, அழகு சாதனப்பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களிலும் இப்படிப்பைப் படித்தவர் களுக்கு வேலை கிடைக்கும்.
என்விரான்மென்டல் இன்ஜினியரிங்: உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சுற்றுச்சூழல் பொறியியல் எனப்படும் என்விரான்மென்டல் இன்ஜினியரிங் முக்கியத்துவம் வாய்ந்த துறையாக வளர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுத்து இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற் கான கட்டுமானத் திட்டமிடல், கழிவுப் பொருள் மேலாண்மை, நச்சுப் பொருள்களை அகற்றுதல் போன்றவற்றுக்காகப் பல்வேறு தொழில் நுட்பங்கள் குறித்து இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது.
இப்படிப்பை முடித்தவர்களுக்கு அரசின் சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனங்களிலும், அரசு சாரா நிறுவனங்களிலும், வேதியியல் - கனிம நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். சுற்றுச் சூழல் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஏற்ற படிப்பு இது.
ஜியோ இன்பஃர்மேட்டிக்ஸ்: நில அளவை முதல் விண்ணில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துதல் வரை ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் பயன்பாடு இருக்கிறது. ஜியோ இன்ஃபர் மேட்டிக்ஸ் என்பது தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய புவி தகவல் அமைப்புப் பிரிவு என்று சொல்லலாம். இந்தப் படிப்பில் புவி வரைபடவியலும் ரிமோட் சென்சிங் என்று அழைக்கப்படும் தொலைஉணர் பாடங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன.
பாதுகாப்புத் துறை, நகர நிர்வாக அமைப்புகள், தொலைஉணர் ஆராய்ச்சி அமைப்புகளிலும் வேலை கிடைக்கும். பல மென்பொருள் நிறுவனங்களுக்கு நில வரைபடவியல் சார்ந்த திட்டப்பணிகள் கிடைப்பதால், ஜியோ இன்ஃபர் மேட்டிக்ஸ் படித்தவர்களுக்கு மென்பொருள் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும் சாத்தியம் உண்டு.
இப்படிப்பைப் படித்து முடிப்பவர்களுக்கு பொதுத் துறை அமைப்புகளான இஸ்ரோ, தேசிய தொலைஉணர் மையம், தேசிய நில அளவை தகவல் அமைப்பு, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங், இந்தியக் கடல் தகவல் மையம், வன நில அளவைத் துறை, புவியியல் துறை, அறிவியல் தொழில்நுட்பத் துறை, பாதுகாப்புத் துறை, சுற்றுச்சூழல் துறை, தேசியத் தகவலியல் மையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மையங்கள், கனிமத் துறை, நிலத்தடி நீர் மேலாண்மைப் பிரிவு, பேரிடர் மேலாண்மை, நகர மேம்பாடு, கட்டுமான வடிவமைப்பு, இந்தியப் புவி ஆய்வியல் துறை, பெட்ரோலியம், கனிமத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- pondhanasekaran@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT