Last Updated : 05 Aug, 2025 04:59 PM

 

Published : 05 Aug 2025 04:59 PM
Last Updated : 05 Aug 2025 04:59 PM

திருநங்கையர் நலக் கொள்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 29 - ஆகஸ்ட் 4

ஜூலை 29: பாகிஸ்தான் எதிரான ‘ஆபரேஷன் சிந்தூர்’ போர் நடவடிக்கையை உலகின் எந்தத் தலைவரும் நிறுத்தவில்லை என்று மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார்.

ஜூலை 29: பாட்மிண்டன் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி - ஷிராக் ஷெட்டி இணை 10 இடங்களுக்குள் நுழைந்தது.

ஜூலை 30: புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ராக்கெட் மூலமாக ஏவி திட்டமிட்ட சுற்றுப் பாதையில் இஸ்ரோ நிலை நிறுத்தி சாதனை படைத்தது.

ஜூலை 30: ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அளவுகோலில் பதிவான சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் ரஷ்யா, ஜப்பான் கடற்கரையை சுனாமி தாக்கியது.

ஜூலை 31: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பை அமல்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பர் அறிவித்தார்.

ஜூலை 31: தெலங்கானாவிலிருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக மாறுதலாகி வந்துள்ள நீதிபதி டி. வினோத்குமாருக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 31: சமூக நலம், மகளிர் உரிமை துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட ‘தமிழ்நாடு மாநில திருநங்கையர் நலக் கொள்கை 2025’ஐ முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

ஜூலை 31: மகாராஷ்டிராவில் 2008இல் நாசிக் மாவட்டத்தில் நடைபெற்ற வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உள்பட 7 பேரை விடுதலை செய்து மும்பை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆக.1: மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கல்வியாளருமான டாக்டர் வசந்தி தேவி (87) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

ஆக.1: வீட்டுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆக.1: 71ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஷாருக்கான் (ஜவான் - சிறந்த நடிகர்), விக்ராந்த் மாஸ்ஸி, சிறந்த நடிகை ராணி முகர்ஜி (மிஸஸ் சாட்டர்ஜி), சிறந்த துணை நடிகர் எ.எஸ்.பாஸ்கர்ர் (பார்க்கிங்), சிறந்தத் துணை நடிகை ஊர்வசி (உள்ளெழுக்கு) உள்பட 40 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.

ஆக.2: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என்கிற சிறப்பு மருத்துவத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆக.2: நாட்டிலேயே உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளைத் திறம்பட மேற்கொண்டதற்காக தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்தது.

ஆக.2: பிரபல நடிகர் மதன்பாப் (71) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

ஆக.3: இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் நடைபெற்ற உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆக.3: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதுரா ஸ்ரீதரன் அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

ஆக.4: தமிழகத்தில் தூத்துக்குடியில் முதல் முதலாக ரூ.16,000 கோடி மதிப்பீட்டில் மின்சார கார் உற்பத்தி ஆலை தொடங்கி வைக்கப்பட்டது.

ஆக.4: எல்லையில் 2,000 ச.கி.மீ. நிலத்தை சீனா ஆக்கிரமித்திருப்பதாக 2022இல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறிய வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

ஆக.4: புதிய டிஜிபி நியமன விவகாரத்தில் விதிமீறல் இருந்தால் உயர் நீதிமன்றம் தலையிடும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஆக.4: 2009-10 முதல் 2024 வரை நாட்டில் ரயில் பாதைகளைக் கடக்க முயன்ற 186 யானைகள் அடிபட்டு உயிரிழந்துள்ளன என்று மத்திய வனத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆக.4: உடல் நலக் குறைவால் டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் (81) காலமானார்.

ஆக.4: இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்கிற கணக்கில் டிராவில் முடிந்தது.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x