Last Updated : 22 Jul, 2025 04:41 PM

 

Published : 22 Jul 2025 04:41 PM
Last Updated : 22 Jul 2025 04:41 PM

குடியரசுத் துணைத் தலைவர் ராஜினாமா முதல் கம்யூனிஸ்ட் தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவு வரை: சேதி தெரியுமா? @ ஜூலை 15-21

ஜூலை 14: விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

ஜூலை 15: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு அவற்றைக் கோயில்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

ஜூலை 15: ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரணத் தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டது.

ஜூலை 16: ஊரக உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களைப் பூட்டி சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜூலை 16: பொது இடங்கள், நீர் நிலைகளில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

ஜூலை 17: 2024-25இல் நாட்டின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8ஆவது முறையாக மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது.

ஜூலை 17: லாஸ் வேகாஸ் செஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் நார்வே வீரர் மேக்னஸ் கார்சல்னை இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

ஜூலை 17: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

ஜூலை 18: கோவையில் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துக் கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆளுநர் ஆர்.என்.ரவி - தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா

ஜூலை 18: திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் (68) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

ஜூலை 19: நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் கைது மோசடி மூலம் ரூ.100 கோடிக்கு மேல் பணம் பறித்த கும்பலைச் சேர்ந்த 9 பேருக்கு மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

ஜூலை 19: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் மகனும், முதல்வர் மு.க. ஸ்டாலினின் மூத்தச் சகோதரருமான மு.க.முத்து (77) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.

ஜூலை 19: இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க பிரேசில், தென் ஆப்பிரிக்கா, அர்ஜெண்டினா, வியட் நாம், மலேசியா, இந்தோனேசியா உள்பட 17 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.

ஜூலை 21: சென்னை உயர் நீதிமன்றத்தின் 54ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம். ஸ்ரீவஸ்தவாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 21: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தன்னுடைய உடல் நிலையைக் காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

ஜூலை 21: வங்கதேசத்தில் விமானப் படை விமானம் டாக்கா நகரில் உள்ள பள்ளிக்கூட வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.

ஜூலை 21: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தலைசுற்றல் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜூலை 21: 2006இல் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பில் 189 பேர் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய 12 பேரை விடுவித்து மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்குச் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள், மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

ஜூலை 21: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101) உடல் நலக் குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். 2006-2011இல் கேரள முதல்வராக இவர் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x