Published : 15 Jul 2025 04:00 PM
Last Updated : 15 Jul 2025 04:00 PM
ஜூலை 7: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம் என்று பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜூலை 8: முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கில், கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.
ஜூலை 8: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. காவலர்களால் அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு ஏற்கெனவே சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜூலை 8: கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள லெவல் கிராசிங்கில் பள்ளி வேன் மீது விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவி, 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.
ஜூலை 9: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து கார், லாரி கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
ஜூலை 10: கடலூர் தேவநாதசுவாமி கோயில் நிலத்தில் உள்ள தனியார் பள்ளியை அகற்றக் கோரி பாஜக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுத் துறை செயலாளர்கள் உள்பட 5 ஐஏஎஸ் அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.
ஜூலை 12: உலகை உலுக்கிய அகமதாபாத் விமான விபத்துக்கு எரிபொருள் சப்ளை நின்றதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை 12: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலகப் பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.
ஜூலை 12: மகாராஷ்டிராவில் உள்ள 11 மராட்டிய கோட்டைகளை உலகப் பாரம்பரிய சின்னம் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.
ஜூலை 12: விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் போலந்தின் இகா ஸ்வியா டெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜூலை 13: மூத்த அரசு வழக்கறிஞர் உஜ்வல் தியோரா நிகம், முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, சமூக சேவகர் சி.சதானந்தன், வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகியோரை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மா நிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமித்தார்.
ஜூலை 13: பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்
ஜூலை 14: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி (87) உடல்நலக் குறைவால் பெங்களூருவில் காலமானார்.
ஜூலை 14: சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டார். தற்போதைய தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் ஓய்வு பெற இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில் ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டார்.
ஜூலை 14: கணவன் - மனைவி இடையே நடைபெற்ற உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்திருந்தால் அவற்றை ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூலை 14: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலிலிருந்து கர்ப்பிணியை கீழே தளிவிட்ட இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT