Published : 02 Jul 2025 07:20 AM
Last Updated : 02 Jul 2025 07:20 AM
வாசிப்புப் பழக்கம்: சமூகத்தில் நடக்கும் நடப்பு விஷயங்களை, மாற்றங்களைத் தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள், தகவல்களைப் பார்க்கவும் நாளிதழ் வாசிக்க வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய அளவிலான செய்திகளை அறிந்திருந்தால் மட்டுமே போட்டித் தேர்வுகளில் நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) என்கிற தலைப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சுலபமாகப் பதில் அளிக்க முடியும். வாரந்தோறும் வெளிவரும் ‘Employment News’ ஆங்கில இதழைப் படிக்கத் தவறாதீர்கள். மாதம் ஒரு முறையாவது நூலகத்திற்குச் செல்லும் பழக்கத்தையும் பிடித்த ஒரு புத்தகத்தை வாசிக்கவும் தவறாதீர்கள்.
நாட்குறிப்பு (Journaling) - நாள்தோறும் இரவில் அன்றைய செயல்பாடுகள் குறித்து நாட்குறிப்பில் எழுதுங்கள். உங்களுடைய இலக்கிலிருந்து விலகிச் செயல்பட வைத்த நிகழ்வுகள், நேரத்தை வீணாக்கிய செயல்கள், அதை எதிர்காலத்தில் எப்படித் தவிர்ப்பது என்பது குறித்து எழுதுங்கள். அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். வாரம் ஒரு முறை குறிப்பிட்ட நேரம் ஒதுக்கிக் கடந்த வாரம் நடந்த செயல்பாடுகளை ஆய்வு செய்யுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் வாழ்நாள் முழுவதற்கும் கைகொடுக்கும்.
சான்றிதழ்கள்: போட்டித் தேர்வுக்கான விண்ணப்பங்களில் உங்களுடைய கைபேசி எண், மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்ததற்குப் பிறகு மாற்றம் செய்தால் ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே, ஒரு நிரந்தர மின்னஞ்சல் முகவரியை வைத்துக்கொள்ளுங்கள், கைபேசி எண்ணையும் மாற்றாதீர்கள்.
பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ்கள் போன்றவற்றை முறையாகப் பெற்றுக் கைவசம் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். கல்லூரியில் படிக்கும்போதே இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுவிடுங்கள். பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
கூடுதல் தகுதிகள்: கல்லூரிப் படிப்புக்குப் பிறகு நல்ல வேலையில் சேர பட்டப்படிப்பு மட்டும் போதாது. கூடுதலாக உங்களது தகுதியையும், திறமையையும் வளரத்துக் கொண்டால் மட்டுமே வேலை எளிதில் கிடைக்கும். கட்டணம் செலுத்தாமல் அல்லது கட்டணம் செலுத்திப் படிக்கும் இணையவழி படிப்புகள் ஏராளம் உள்ளன.
உங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்வுசெய்து படித்து சான்றிதழ் பெற்றதும், அதை ‘லிங்க்டுஇன்’ பக்கத்தில் பதிவுசெய்யுங்கள். கூடுதல் கல்வித்தகுதி எனும் பகுதியில் ஒளிப்படம் எடுத்தல், ஓவியம் வரைதல், தோட்டங்களைப் பராமரித்தல், தையல், இசைக்கருவி வாசித்தல் போன்று ஆர்வத்தின் காரணமாக வளர்த்துக்கொள்ளப்பட்ட திறமைகளையும் குறிப்பிடலாம்.
இணையப் பெட்டகம் (DigiLocker) - முக்கியமான ஆவணங்களை, கல்விச் சான்றிதழ்களை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. டிஜிலாக்கர் செயலியில் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, பள்ளி, கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள், காப்பீட்டு ஆவணம் போன்ற அனைத்தையும் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாகச் சேமித்துவைக்க முடியும். முக்கிய ஆவணங்களை மின்னஞ்சலில், திறன் பேசியில் தனித்தனி யாகச் சேமித்து வைக் காமல் டிஜிலாக்கரில் ஒரே இடத்தில் பாது காப்பாகச் சேமித்து வைப்பது உதவியாக இருக்கும்.
- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை; karunas2k09@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT