Published : 25 Jun 2025 06:45 AM
Last Updated : 25 Jun 2025 06:45 AM
பயோ டெக்னாலஜி: இந்த நூற்றாண்டில் வளர்ந்துவரும் முக்கியத்துவம் வாய்ந்த, தவிர்க்க முடியாத தொழில் நுட்பப் படிப்பு பயோ டெக்னாலஜி என்று அழைக்கப்படும் உயிரித் தொழில் நுட்பப் படிப்பு. ஒருவர் கறுப்பா, சிவப்பா, உயரமா, குட்டையா என்பதில் தொடங்கி அவரைப் பற்றிய ஒட்டுமொத்த படைப்பு ரகசியமும் அவர் உடம்பில் உள்ள மரபணுக் களில் (Genes) செய்திகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்தது அறிவியலின் மகத்தான சாதனை.
ஜீன்களில் உள்ள ‘டி ஆக்ஸி ரிபோ நியூக்கிளிக் ஆசிட்’ (சுருக்கமாக டி.என்.ஏ.) தான் மேற்படிச் செய்திகளைத் தாங்கி, வளைந்து வளைந்து செல்லும் ஒரு நூல் ஏணியைப் போல் சரம்சரமாகச் செல்கிறது. டி.என்.ஏ. மாலிக்கியூல் என்கிற இந்த நூல் ஏணியை அலசி ஆராய்ந்தால் ஒருவரின் மொத்த உடலைப் பற்றியும் சொல்லிவிடலாம் என்கிறது அறிவியல்.
ஒரு செல் உயிரினமான அமீபாவிலிருந்து புழுக்கள், மீன்கள், பறவைகள், விலங்குகள், குரங்கு, மனித இனம் என்கிற படிப்படியான உயிர்களின் பரிணாம வளர்ச்சிக்குக் காரண மாக அமைந்தது, ஜீன்களில் ஏற்படும் மியூட்டேஷன் என்கிற திடீர் மாற்றம்தான். ஜீன்களில் திடீர் மாற்றங்களைச் செயற்கையாக ஏற்படுத்தி ஒரே மாதிரி பலரை உருவாக்க முடியும் என்கிறது பயோ டெக்னாலஜி.
ஆண், பெண் சேர்க்கை இல்லாமல் ஜீன்களை நகலெடுக்கும் ‘குளோனிங்’ முறையில் 1997இல் உருவாக்கப்பட்ட ‘டாலி’ ஆட்டுக்குட்டி இதற்கான முதல் உதாரணம். பயோ டெக்னாலஜியின் இன்னொரு பரிமாணம், ‘ஹியூமன் ஜீனோம் புராஜெக்ட்.’ மனிதர்களின் உடலில் அடங்கியுள்ள மரபணுக்களையும் அவை ஒவ்வொன்றின் தனித்தனிப் பண்புகளையும் அடையாளம் காட்டும் தொழில்நுட்ப ஆராய்ச்சி. இதன் மூலம் தீராத நோய்களையும் முளையிலேயே கண்டறிந்து அழித்துவிட முடியும்.
பயிர்கள் செழிப்பாக வளர்வதற்கான வீரிய வித்துகளை உருவாக்குதல், பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்கு நவீன வழிமுறைகளைக் கண்டறிதல் என விவசாயத்திலும் தனது சிறகை விரித்துவருகிறது பயோ டெக்னாலஜி. ஜீன்ஸ் (Jeans) பேன்ட்டுகளில் ஸ்டோன் வாஷ் செய்வதற்கு உதவும் என்சைம்கள்கூட பயோ டெக்னலாஜியின் உபயம்தான்.
மருந்துப் பொருள்கள் தயாரிப்பு, பதனீட்டு உணவு உற்பத்தி, ஜவுளித்துறை, ஊட்டச் சத்துத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கால்நடை மருத்துவ அறிவியல், கழிவுப் பொருள்கள் மேலாண்மை எனப் பல்வேறு துறைகளிலும் பயோ டெக்னாலஜியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பயோ டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு மருந்தியல் நிறுவனங்கள், வேளாண் நிறுவனங்கள், கால்நடை மருத்துவ அறிவியல் நிறுவனங்கள், உணவு பதனீட்டு நிறுவனங்கள், ஜவுளித்துறை அமைப்புகள், உயிரி எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றிலும், சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும்கூட வேலை கிடைக்கும். அறிவுக்கூர்மையும் புதிய கண்டுபிடிப்புக்கான முனைப்பும், கடும் உழைப் பும் இருந்தால் பயோ டெக்னாலஜி துறையில் உங்களால் பிரகாசிக்க முடியும்.
பயோ மெடிக்கல் என்ஜினியரிங்: பொறியியலும் மருத்துவமும் கலந்த படிப்பு பயோ மெடிக்கல் என்ஜினியரிங். காது கேட்கும் கருவிகள், கார்டியாக் பேஸ் மேக்கர், செயற்கை உறுப்புகள், அறுவை சிகிச்சை - தீவிர சிகிச்சைப் பிரிவுக்குத் தேவையான நவீன சாதனங்கள், உயிரி வேதியியல் கருவிகள், கண் அறுவை சிகிச்சைக்குத் தேவையான லேசர் சாதனங்கள், எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் போன்ற நவீன மருத்துவக் கருவிகளை உருவாக்குவதல், பராமரித்தல், கணினி மூலம் நோய்க்கூறுகளைக் கண்டறிதல், மருத்துவக் கருவி களின் இயக்கத்துக்கு ஏற்ற மென் பொருள்கள் உருவாக்கம் போன்ற பணிகளில் பயோ மெடிக்கல் என்ஜினி யர்களின் பணி முக்கியமானது.
பயோ மெடிக்கல் என்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கிளினிக்கல் என்ஜினியரிங், மெடிக்கல் இமேஜிங், ரீஹாபிலிட்டேஷன் என்ஜினியரிங், பயோ மெக்கானிக்ஸ், பயோமெட்டீரியல்ஸ் போன்ற பல்வேறு பாடங்கள் கற்றுத்தரப்படும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கருவிகளை உருவாக்கும் நிறுவனங்களிலும், மருத்துவக் கருவி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப வளர்ச்சி மெடிக்கல் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தியுள்ளது.
l பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ்: உயிரியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள படிப்புதான் பயோ இன்ஃபர் மேட்டிக்ஸ். உயிரியல், மரபணு மூலக்கூறுகள் தொடர்பான தகவல்களைச் சேகரித்தல், சேமித்த விவரங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், ஆய்வின் மூலம் கிடைக்கும் முடிவுகளை மனிதப் பயன் பாட்டுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றை உள்ளடக்கியது பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ். மருந்துகள் தயாரிப்பிலும், விவசாயத் துறையிலும் பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தாக மாறிவருகிறது.
l நேனோ டெக்னாலஜி: நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துறையாக உருவெடுத்துவரும் புதிய துறை நேனோ டெக்னாலஜி. நேனோ என்றால் கிரேக்க மொழியில் மிகச் சிறிய என்று அர்த்தம். நேனோ என்கிற சொல் 0.000,000,001 என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பது தொடங்கி உடலில் பாதிக்கப் பட்ட செல்களைச் சரிசெய்வது வரை நேனோ தொழில்நுட்பத்தின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. அறிவியல் மட்டுமல்லாமல், மருத்துவத் துறையிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ள நேனோ டெக்னாலஜி, தனித்தன்மை வாய்ந்த முக்கியப் படிப்பாக உருவாகிவருகிறது.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT