Published : 19 Jun 2025 05:57 PM
Last Updated : 19 Jun 2025 05:57 PM
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏ.ஐ) திறந்தநிலைக் கற்றலில் (Open and Distance Learning) சில முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. உதாரணமாக முன் கணிப்பு பகுப்பாய்வு (Predictive Analytics) கருவி மூலம் கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தக்க ஆலோசனை வழங்கப் பயன்படுகிறது.
மாணவர்களுக்கான சாட்பாட்
திறந்தநிலைக் கற்றல் வழி பயிலும் மாணவர்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல், செயல்திறன் குறித்த நிகழ் நேரப் பின்னூட்டம், இலக்குகளை பரிந்துரைத்தல், பின்னடைவுகளை கண்டறிதல், அவற்றுக்கு பொருத்தமான வளங்களைப் பரிந்துரைத்தல் ஆகியவற்றைச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் வழங்கலாம். மாணவர்களின் கற்றல் ஈடுபாட்டுத் திறன், இடைநிற்றல் இடர் கணிப்பு, செயல்திறன் போக்குகள் ஆகியவற்றை அறிய இயந்திரக் கற்றல் முறை (Machine Learning) உதவுகிறது.
தகவல்தொடர்பு, அணுகல், தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவங்களை மேம்படுத்தும் பல்வேறு பயன்பாடுகள், கருவிகள் மூலம் திறந்தநிலையில் கற்றலை மேம்படுத்துவதில் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது. இயற்கை மொழி செயலாக்கம் மாணவர்களின் பதில்களை பகுப்பாய்வு செய்து ஒப்படைப்புத்தாள், அது தொடர்பான வினாக்கள் குறித்து உடனடி பதில்களை வழங்கி கற்றல் செயல்முறையை மேம்படுத்துகிறது. இது விரைவான தரப்படுத்தலை அனுமதித்து, மாணவர்கள் பாடங்களில் சிரமப்படும் பகுதிகளை அடையாளம் காண உதவுகிறது.
இயற்கை மொழி செயலாக்கத்தின் மூலம் இயக்கப்படும் கணினி நிழல்கள் (Chatbots) வாயிலாக மாணவர்களுக்கு 24 மணி நேரமும் உதவுவதோடு அவர்களுக்கு பாடநூல்கள், குறிப்பிட்ட காலக்கெடுக்கள், நிர்வாக செயல்முறைகள் உள்ளிட்ட தரவுகளை வழங்கி ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைத்து மாணவர்களின் கல்வி ஈடுபாட்டை மேம்படுத்துகிறது.
பயனுள்ள ஏ.ஐ
ஆழக்கற்றல் (Deep Learning) மூலம் தனிப்பட்ட கற்றல் முறைகள், விருப்பத்தேர்வுகள், செயல்திறன் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, ஒவ்வொரு மாணவரின் தேவைகளையும் பூர்த்தி செய்ய கல்வி உள்ளடக்கம் வளங்களை மாற்றியமைத்து, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. ஆழமான கற்றல் முறை மூலம் தானியங்கி பேச்சு அறிந்தேற்றல் (Automatic Speech Recognition) செயல்முறையை பயன்படுத்தி ஒலியாக உள்ள உரைகளை எழுத்துக்களாக மாற்றி, கேட்கும் திறன் குறைபாடு உள்ள மாணவர்கள் பயன்படும் வகையில் மாற்றி அமைக்க முடியும்.
ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்குத் தனிப் பயனாக்கப்பட்ட கல்வியை வழங்கத் திறந்தநிலை கல்வி நிலையங்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. ஆனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை திறந்தநிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்துவதில் சில இடர்பாடுகளும் இருக்கின்றன. தரவுகளை பாதுகாப்பதில் சிக்கல், பாரபட்சமான அணுகுமுறைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு, செலவு ஆகியவை இதைச் செயல்படுத்துவதற்கு சிக்கலாக இருக்கக்கூடும். ஆனால் இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் கல்வியை மேம்படுத்தவும், திறமையானதாகவும், ஈடுபாட்டுடன் கூடியதாகவும் திறந்தநிலை கல்வி நிலையங்கள் மாறுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக அவசியமாகிறது.
- கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்; initnou@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT