Last Updated : 18 Jun, 2025 06:47 AM

 

Published : 18 Jun 2025 06:47 AM
Last Updated : 18 Jun 2025 06:47 AM

வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கும் பொறியியல் படிப்புகள் | புதியன விரும்பு 2.0 - 9

கம்ப்யூட்டர் சயின்ஸ்: எந்த ஒரு வேலைக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு தேவை என்கிற நிலை உருவாகி பல காலமாகிவிட்டது. இந்த நிலையில், தகவல் தொழில்நுட்பத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி, கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பைத் தவிர்க்க இயலாத முக்கியத்துவம் வாய்ந்த படிப்பாக மாற்றியுள்ளது.

கம்ப்யூட்டர் ஹார்டுவேர், கம்ப்யூட்டர் புரோகி ராமிங் மொழிகள், வடிவமைப்பு, உருவாக்கம், செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், டிஜிட்டல் சிஸ்டம்ஸ் போன்ற பல்வேறு முக்கியப் பாடங்கள் இந்த மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன. காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களிலும் புதிய மாறுதல்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

பொதுவாக, கம்ப்யூட்டர் மொழிகளிலும் கம்ப்யூட்டர் டூல்களிலும் நல்ல பயிற்சி உள்ள மாணவர்களுக்கு எளிதாக வேலை கிடைக்கும். அதனால்தான் பல மாணவர்கள் கல்லூரிப் பாடங்களையும் தாண்டி, கம்ப்யூட்டர் தொடர்பான குறுகிய காலப் பயிற்சிகளில் சேர்ந்து படித்து, வேலைவாய்ப்புக்கான தகுதிகளை உயர்த்திக் கொள்கிறார்கள்.

இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி: கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்புக்கும் ஐ.டி. என்று அழைக்கப்படும் இன்ஃபர் மேஷன் டெக்னாலஜி படிப்புக்கும் இடையே அதிக வித்தியாசம் இல்லை. கம்ப்யூட்டர் தகவல் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்தும் அந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டுக்கு ஏற்பக் கையாளுவது குறித்தும் உள்ள படிப்பு தான் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி. வளர்ந்துவரும் முக்கியத் துறை இது. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களைப்போல இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்: தொலைத்தொடர்புத் துறையின் பிரம்மாண்ட வளர்ச்சி காரணமாக எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் போன்ற துறைகளில் வேலை வாய்ப்பைப் பெற முடியும் என்கிற எதிர்பார்ப்பு, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்பின் பக்கம் பல மாணவர் களைத் திருப்பியுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் சர்கியூட்ஸ், டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் சிக்னல் புராசசிங், பவர் எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரோமேக்னடிக் ஃபீல்ட் தியரி, நெட்வொர்க் அனாலிசிஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக் டிவைஸ் & சர்க்கியூட், சிக்னல் & சிஸ்டம்ஸ், கன்ட்ரோல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பல்வேறு பாடங்கள் இப்பாடப்பிரிவு மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். அத்துடன் கம்ப்யூட்டர் தொடர்பான பாடங்களும் உண்டு.

பொதுத்துறை நிறுவனங்கள், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி அமைப்பு, அணுமின் நிலையங்கள், தொலைபேசி, தொலைக்காட்சி, மொபைல் தயாரிப்பு - சேவை வழங்கும் நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் மின்சாரத்தின் நவீனப் பிரிவான மின்னணு இயந்திரங்களின் பயன்பாடும் நமது அன்றாட வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மின் உற்பத்தி அமைப்புகள், மின்னாற்றல் பகிர்வு உள்பட எலக்ட்ரிக்கல் - எலக்ட்ரானிக்ஸ் துறைகள் சார்ந்த பாடங்கள் இருக்கும். இப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு அணுமின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், அனல்மின் நிலையங்கள் போன்ற மின் உற்பத்தி நிலையங்கள், மின்சார வாரியங்கள் போன்ற அமைப்புகளில் வேலை கிடைக்கும். அத்துடன், எலக்ட்ரானிக்ஸ் தொழில் நிறுவனங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.

எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன்: எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான படிப்புகளுடன் மின்னணுத் தொழில் நிறுவனங்களில் பயன் படுத்தப்படும் சாதனங்களைப் பற்றிய படிப்பு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன். எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான சாதனங்களைத் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைப்ப தையும் அவற்றின் செயலாக்கத்தைக் கட்டுப் படுத்துவது குறித்தும் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.

ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் செயல்நிலைக் கட்டுப்பாடு, சரியான வகையில் மூலப்பொருள்களைப் பயன்படுத்துதல், தானியங்கி முறையில் செயல்படுத்துதல் போன்றவற்றைக் கண் காணிக்கும் பொறுப்பு இன்ஸ்ட்ருமென்டேஷன் படித்தவர்களுக்கு இருக்கும்.

கருவிகளின் வடிவமைப்பு, கட்டமைப்பு, தரநிர்ணய சோதனை, பராமரிப்பு, சீர் செய்தல், தானியங்கிக் கருவிகளை இயக்குதல், உற்பத்தியைக் கவனித்தல் போன்ற பணிகளும் இருக்கும். இதற்கேற்ப எலக்ட் ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மோட்டார்ஸ் அண்ட் கன்ட்ரோல்ஸ், ரோபாட்டிக், இன்டர்ஃபேஸ் டெக்னாலஜி போன்ற பல்வேறு பாடங்களைப் படிக்கிறார்கள். உற்பத்தி நிறுவனங்கள், உயிரி மருந்தியல் நிறுவனங்கள், ரயில்வே துறை, விமானப் போக்குவரத்துத் துறை, தொலைத் தொடர்புத் துறை, பாதுகாப்புத் துறை, தனியார் நிறுவனங்களில் எலக்ட் ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் படித்த வர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கலை, அறிவியல் கல்லூரிகளிலும் கம்ப்யூட்டர் படிப்புகள்: கலை அறிவியல் கல்லூரிகளில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இன்ஃபர்மேஷன் டெக்னா லஜி, பிசிஏ போன்ற படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். எம்.எஸ்சி. சாஃப்ட்வேர் என்ஜினீயரிங், எம்.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் டெக்னலாஜி, எம்.எஸ்சி. இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி போன்ற ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளிலும் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

போட்டித் தேர்வுக்கு உதவும் ‘சேதி தெரியுமா?’ பகுதியை ‘இந்து தமிழ் திசை’யின் இணையதளத்தில் வாசிக்க…

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x