Published : 18 Jun 2025 06:43 AM
Last Updated : 18 Jun 2025 06:43 AM

போட்டித் தேர்வும் அரசமைப்பும்: சில குறிப்புகள்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷ யங்கள் இவை:

வரலாறு என்ன? - 09-12-1946 அன்று கேபினெட் தூதுக்குழு திட்டத்தின்படி பிரிட்டிஷ் பிரதமர் கிளமென்ட் அட்லி ஒப்புதலுடன் இந்திய அரசமைப்பு நிர்ணய அவை, தற்காலிகத் தலைவர் சச்சினாந்த சின்ஹா தலைமையில் டெல்லியில் முதல் கூட்டத்தை 211 உறுப்பினர்களுடன் கூட்டியது.

இந்திய அரசமைப்பு நிர்ணய அவைத் (Constituent Assembly) தலைவராக ராஜேந்திர பிரசாத்தும் வரைவுக் குழுவின் தலைவராக இந்திய அரசமைப்பின் தந்தை பி.ஆர்.அம்பேத்கரும் பொறுப்பேற்றனர். இந்திய அரசமைப்பின் திறவுகோல் எனக் கருதப்படும் முகப்புரையை நிர்ணய சபையில் அறிமுகம் செய்தவர் ஜவாஹர்லால் நேரு.

இந்திய அரசமைப்பைத் தீர்மானிக்க 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாள்கள் பிடித்தன. 29-08-1947 அன்று அரசமைப்பு சட்ட வரைவுக் குழு ஏழு உறுப்பினர்களைக் கொண்டு நியமிக்கப்பட்டது. அரசமைப்பு சட்டத் திருத்தம் (42),1976இன்படி முகப் புரையில் ‘சோஷலிச’, ‘சமயச்சார்பற்ற’, ‘ஒருமைப்பாடு’ ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டடன. இந்திய அரசமைப்பு நாள் என்று அழைக்கப்படும் 26-11-1949 அன்று இந்திய அரசமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 26-01-1950 குடியரசு நாளன்று நடை முறைக்கு வந்தது. உலக அளவில் எழுதப் பட்ட மிக நீளமான அரசமைப்பு இதுவே.

கவனிக்க வேண்டியவை: அரசமைப்பின் முகப்புரை, அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், சட்டத்தின்படி ஆட்சி, கூட்டாட்சி, சட்டத் திருத்தங்கள், ஒற்றைக் குடியுரிமை, அமைச்சரவை கூட்டுப்பொறுப்பு, அவசர நிலைப் பிரகடனம், நாடாளுமன்றக் கூட்டுத்தொடர், பொதுப் பட்டியல், அரசு வழிகாட்டு நெறிமுறைகள், குடியரசுத் தேர்தல் முறை, மாநிலங்களவை நியமன உறுப்பினர், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை எந்த நாட்டிலிருந்து தழுவப்பட்டன என்பது பற்றியும் அவற்றின் முக்கிய அம்சங்கள், பிரிவுகள் பற்றியும் அறிந்திருப்பது அவசியம்.

இந்திய அரசமைப்பை ஏற்றுக்கொண்ட போது 22 பகுதிகள், 8 அட்டவணைகள் 395 விதிகளைக் கொண்டிருந் தது. தற்போது 25 பகுதிகள் 12 அட்டவணைகள் 450 விதிகளுக்கும் மேல் உள்ளன. முக்கிய விதிகளைப் பற்றிப் படித்துக் குறித்துக்கொள்வது போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாகும். அடிப்படை உரிமைகளான சமத்துவம், சுதந்திரம், சுரண்டல் தடுப்பு, மதச் சுதந்திரம், கல்வி, பண்பாடு, அரசமைப்புத் தீர்வு ஆகியவை பற்றிய பரந்துபட்ட புரிந்துணர்வு தேவை.

அடிப்படை உரிமைகள் மீறப் படும்போது உச்ச நீதிமன்றம் ஐந்து வகையான நீதிப் பேராணைகளை வெளியிட அதிகாரம் கொண்டுள்ளது. நீதிப் பேராணைகளைப் பற்றி விரிவாக அறிந்து வைத்திருப்பது நல்லது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், நிதி ஆயோக், திட்டக்குழு போன்றவற்றின் தோற்றம், வளர்ச்சி, அவற்றின் நடப்பு நிகழ்வுகளை அறிந்து வைத்திருப்பது முக்கியம்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மாநில முதல்வர், ஆளுநர், அட்டர்னி ஜெனரல், ஆடிட்டர் ஜெனரல் ஆகிய பதவிகளை வகித்தவர்களின் பெயர்கள், பதவி வகித்த காலம், அவர்கள் பதவியில் இருந்தபோது நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் பட்டியலிட்டுப் படிப்பது நல்லது. அவ்வப்போது மாறிவரும் மேற்குறிப்பிட்ட பதவியில் உள்ளவர்களின் பெயர்களையும் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அப்போதைய தேர்வுகளைச் சந்திக்க எளிதாக இருக்கும்.

- கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x