Published : 17 Jun 2025 03:37 PM
Last Updated : 17 Jun 2025 03:37 PM
சேதி தெரியுமா?
ஜூன் 10: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்பிலான 92 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
ஜூன் 10: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூன் 10: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டார்.
ஜூன் 10: ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் நகரில் மகளிருக்கான நடைப் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரியங்கா கோஸ்வாமி 47.54 நிமிடங்களில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஜூன் 10: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் நிக்கோலஸ் பூரன் (29) அறிவித்தார்.
ஜூன் 12: தமிழகத்தில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் பி.வில்சன், சிவலிங்கம், ராசாத்தி என்கிற சல்மா; அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால்; மநீம சார்பில் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வாயினர்.
ஜூன் 12: குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து 242 பேருடன் லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.
ஜூன் 12: அகமதாபாத் விமான விபத்தில் குஜாராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி (68) உயிரிழந்தார்.
ஜூன் 12: காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார்.
ஜூன் 13: இஸ்ரேல் விமானப் படை ஈரான் மீது சரமாரியாக நடத்திய எவுகணை தாக்குதலில் ஈரானின் 4 அணுசக்தி தளங்கள், 2 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன.
ஜூன் 13: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்தார்.
ஜூன் 14: இஸ்ரேலுக்குப் பதிலடியாக அந்நாட்டின் ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேல் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன.
ஜூன் 14: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை 22.76 லட்சம் பேர் எழுதிய நிலையில் 12,36,531 (55.96%) பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் 0.45% குறைவு.
ஜூன் 14: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,35,715 பேர் தேர்வு எழுதிய நிலையில் 76,181 (56.13%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 2.34% குறைவு. நெல்லையைச் சேர்ந்த எஸ். சூரியநாராயணன் என்கிற மாணவர் 665 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் 27ஆவது இடத்தையும் மாநிலத்தில் முதலிடத்தையும் பிடித்தார்.
ஜூன் 14: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274ஆக அதிகரித்தது. விமானத்தில் பயணித்தவர்கள் 241 பேரும், பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்ததில் சிக்கி 33 பேரும் உயிரிழந்தனர்.
ஜூன் 14: லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசி தொடர்களில் 1998க்குப் பிறகு தென் ஆப்பிரிக்க வெல்லும் கோப்பை இது.
ஜூன் 14: நாட்டுப்புற பாடகியும் நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி (99) வயது முதிர்வு காரணமாகக் காலமானார்.
ஜூன் 15: இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி தலைமையகம் தீக்கிரையானது. எண்ணெய் வயல்கள் நாசமாயின.
ஜூன் 15: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கல்லணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார். 1998இல் அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி கல்லணையில் தண்ணீர் திறந்து வைத்தார். அதன்பிறகு இப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துள்ளார்.
ஜூன் 15: உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 15: ஆன்மிக மாநாட்டை அரசியலுக்குப் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT