Last Updated : 11 Jun, 2025 07:06 AM

 

Published : 11 Jun 2025 07:06 AM
Last Updated : 11 Jun 2025 07:06 AM

பொறியியல் பாடப்பிரிவின் இன்னொரு பரிமாணம் | புதியன விரும்பு 2.0 - 8

ஒரு காலத்தில் இன்ஜினியரிங் என்றால் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் என்று இருந்த நிலைமை மாறி, காலத்தின் தேவைக்கு ஏற்ப ஏராளமான பொறியியல் படிப்புகள் உருவாகிவிட்டன. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் சூழ்நிலையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட் ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் போன்ற பல்வேறு முக்கியத் துறைகளின் இணைவுதான் மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். அத்துடன் ரோபாட் டிக்ஸ், டெலி கம்யூனிகேஷன்ஸ்,சிஸ்டம்ஸ் கண்ட்ரோல், ஆட்டோமேஷன், புராடக்ட் இன்ஜினியரிங் போன்றவையும் இதனுடன் தொடர்புடைய துறைகளாக உள்ளன.

‘மெக்கட்ரானிக்ஸ்’ என்கிற வார்த்தை 1969ஆம் ஆண்டு வாக்கில்தான் பயன்பாட் டுக்கு வந்தது. யாஸ்கவா எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இன்ஜினியராக இருந்த டெட்சரோ மோரி என்பவர்தான் இந்த வார்த்தையை உருவாக்கினார். ஐப்பானில் டிரேட் மார்க்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த வார்த்தை, பின்னர் பொது வெளியில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

1999இல் இந்தியா விலேயே முதல் முறையாக சென்னை குரோம் பேட்டை எம்.ஐ.டி.யில் எம்இ மெக்கட்ரானிக்ஸ் படிப்புத் தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்ட நிலையில் பி.இ. மெக்கட்ரானிக்ஸ் நான்கு ஆண்டுப் படிப்பைப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி களில் மெக்கட்ரானிக்ஸ் டிப்ளமோ படிப்பில் பத்தாம் வகுப்புப் படித்த மாணவர்கள் சேரலாம். பிளஸ் டூ படித்த மாணவர்கள் லேட்டரல் என்ட்ரி முறை மூலம் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். மெக்கானிக்கல் இன்ஜினியர்களைப் பணியில் அமர்த்தக்கூடிய பல நிறுவனங்களுக்கு மெக்கட்ரானிக்ஸ் படித்த மாணவர்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள். உற்பத்தித் தொழில் நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களிலும் மட்டுமல்லாமல், ரோபாட்டிக்ஸ், ஏரோஸ்பேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

மெக்கானிக்கல் இன்ஜினியரிங்: இன்றைய இயந்திர உலகில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முக்கியத்துவம் வாய்ந்த துறை. கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட ஒரு சில கல்லூரிகளில் நேரடி தொழிற் பயிற்சியுடன் கூடிய ஐந்து ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சாண்ட்விச் பட்டப்படிப்பு உள்ளது. பெரும் பாலான பொறியியல் கல்லூரிகளில் பிஇ மெக்கானிக்கல் நான்கு ஆண்டு பட்டப் படிப்பு உள்ளது.

தொழில் உற்பத்தி நிறுவனங்களிலும் பராமரிப்பு நிறுவனங்களிலும் மெக்கானிக்கல் இன்ஜினியர்களின் பங்கு முக்கியமானது. இயந்திரங்களின் வடிவமைப்பு, உருவாக்கம், உற்பத்தி, இயக்கம், பராமரிப்பு போன்ற பல நிலைகளிலும் மெக்கானிக்கல் இன்ஜினி யர்களின் பணி தேவைப்படுகிறது.

இத்துறை யில் படித்தவர்களுக்கு அரசுத் துறையிலும் அரசு பொதுத்துறை நிறுவனங்களிலும், தனியார் துறைகளிலும் வேலைவாய்ப்பு ஏராளமாக உள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் இன்ஜினியரிங் சர்வீஸ் (IES) தேர்வை எழுதி அரசுப் பணிகளில் அதிகாரிகளாகச் சேரலாம்.

ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்: ஒரு காலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்தவர்களே, ஆட்டோமொபைல் துறை பணிகளில் சேர்ந்தார்கள். வாகனங்களும் வாகன உற்பத்தி நிறுவனங்களும் பெருகி வரும் இந்தக் காலத்தில், வாகனங்களை டிசைன் செய்வதற்கும், வாகன உற்பத்தி நிறுவனங்களில் பணி செய்வதற்கும் ஆட்டோமொபைல் துறையில் சிறப்பு வாய்ந்த பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள். 1948ஆம் ஆண்டில் நாட்டிலேயே ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படிப்பு முதல் முறையாக குரோம் பேட்டையில் உள்ள எம்ஐடிஇல் தொடங்கப்பட்டது.

முதலில் பிஎஸ்சி படித்த மாணவர்கள், இந்தப் பாடப்பிரிவில் போஸ்ட் டிப்ளமோ படிப்பில் சேர்க்கப்பட்டார்கள். பின்னர் பிஎஸ்சி பட்டதாரிகள் மட்டுமே சேரும் வகையில் மூன்று ஆண்டு பிடெக். பட்டப் படிப்பு தொடங்கப்பட்டது. அங்கு, 1996ஆம் ஆண்டு முதல் பி.டெக். ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பில் பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

டிசைனிங், உற்பத்தி, குவாலிட்டி கண்ட்ரோல், சர்வீஸிங், மார்க்கெட்டிங் போன்ற பல்வேறு துறைகளில் ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. தனியார் துறை, அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமல்லாமல் பாதுகாப்புத் துறையிலும்கூட வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

சாண்ட்விச் படிப்பு: வழக்கமான பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு நான்கு ஆண்டுகள் படிக்க வேண்டும். அதேவேளை, பொறியியல் சாண்ட்விச் (Sandwich) படிப்புகளுக்கான காலம் 5 ஆண்டுகள். இந்த ஐந்து ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பைப் படிக்கும்போதே நேரடித் தொழிற்பயிற்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப் படுகின்றன. சில பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் நேரடி தொழிற் பயிற்சியுடன் கூடிய மூன்றரை ஆண்டு பொறியியல் டிப்ளமோ சாண்ட்விச் படிப்பு உள்ளது.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x