Published : 14 May 2025 05:12 PM
Last Updated : 14 May 2025 05:12 PM
மருந்தியல் துறையில் (Pharmaceutical Industry) மிகப்பெரிய வளர்ச்சி உள்ளது. ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால், கரிம வேதியியல் (Organic Chemistry) பாடம் பிடிக்காதவர் B.Pharm / D.Pharm படிக்க முடியுமா? அனிமேஷன் துறையில் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பதற்காக ஓவியம் வரைதல், கற்பனையில் கலைப்படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் இல்லாதவர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்க முடியுமா?
ஆர்வமும் எதிர்காலமும்
ஏதாவது ஒரு துறைக்கு நல்ல எதிர்காலமும் அதிக வேலைவாய்ப்பும் இருந்தால் அதன் அடிப்படையில் மட்டும் அந்தத் துறைசார்ந்த படிப்பைத் தேர்ந்தெடுத்து படிப்பது சரியான முடிவு அல்ல. அப்படிப் படித்தவர்களில் எத்தனை பேர் அந்தத் துறையில் சாதனை புரிந்து உள்ளனர்? எத்தனை பேர் அந்தத் துறையிலேயே வேலையில் சேர்ந்து இருப்பார்கள்? வேலையில் சேர்ந்தாலும் தொடர்ந்து நீடித்தார்களா? தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்? மன உளைச்சல், சலிப்பு, விரக்தி இல்லாமல் வேலை செய்பவர் எத்தனை பேர்?
இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் முன்பு, உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறிய கீழே உள்ள வினாக்களுக்குப் பதிலளித்துப் பாருங்கள்.
1. எந்தச் செயலைச் செய்யும்போது நேரம் போவதே தெரிவதில்லை?
2. எந்தச் செயலைச் செய்யும்போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது?
3. உங்கள் மனநிலை எப்படி இருந்தாலும் எந்தச் செயலைத் தயக்கம் இல்லாமல் ஆர்வமாகச் செய்ய முடிகிறது?
4. உங்கள் ஓய்வுநேரத்தை எவ்வாறு செலவழிப்பீர்கள்? புத்தகம் படிப்பது, நண்பர்களுடன் சுற்றுவது, சமூகசேவை செய்வது, பிடித்த விளையாட்டை விளையாடுவது, கணினி அல்லது திறன்பேசியின் வாயிலாக நவீன தொழில்நுட்பங்களைத் தெரிந்துகொள்வது, படம் வரைதல், தோட்ட வேலை போன்றவை...
5. உங்கள் எதிர்காலக் கனவுப்பணி என்ன?
6. அது தொடர்பான தகவல்களை எவ்வாறு தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
உதாரணமாக ஏரோநாட்டிகல் பொறியியல் துறையில் பணியாற்ற வேண்டுமென்பது உங்களது கனவு என வைத்துக்கொள்வோம். கிரையோஜெனிக் இஞ்சின், செவ்வாய்க் கோள் ஆய்வு, ஆளில்லா உளவு விமானம், சாட்டிலைட் லாஞ்சர் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து வைத்து உள்ளீர்களா? இந்தத் துறையில் உங்களைக் கவர்ந்த பிரபலம் யார்? அவரின் சாதனைகள் என்ன? ‘Tactical Missile’, ‘Strategic Missile’ ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? ராக்கெட் ஏவுதளத்தின் எரிபொருள் எதனைக் கொண்டு தயாரிக்கிறார்கள்? இந்தத் துறையின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும் போன்ற கேள்விகளுக்கு இணையதளத்தில் தகவல் தேடியுள்ளீர்களா? நண்பர்கள், உறவினர்களுடன் இது குறித்துப் பேசுவீர்களா? - இது போன்ற வினாக்களுக்கு விடையளித்துப் பாருங்கள். இதை ‘Expressed Interest’ எனலாம். இதன் மூலம் ஓரளவு உங்களது ஆர்வம் குறித்துத் தெளிவு கிடைக்கும்.
கொட்டிக்கிடக்கும் படிப்புகள்
கடந்த நூற்றாண்டைப் போல் அல்லாமல் இப்போது ஏராளமான புதிய படிப்புகள் வந்துவிட்டன. நாள்தோறும் வளரும் தொழில்நுட்பத்துக்கேற்ப தனித்தன்மையான சிறப்புப் படிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. உங்களது பேரார்வம் எதுவாக இருந்தாலும், அதையே வேலையாக மாற்றுவதற்கேற்ற வகையில் தனித்துவமான படிப்புகள் (Specialized Courses) வந்துவிட்டன. ‘சைக்கோ மெட்ரிக்’ தேர்வுகள் மூலம் உங்களது உண்மையான ஆர்வத்தைக் கண்டறிய முடியும். இதற்கெனப் பல உளவியல் தேர்வுகள் உள்ளன. ‘Inventoried Interest’ எனப்படும் உளவியல் தேர்வு மிகவும் பிரபலமானது. இந்தத் தேர்வின் மூலம் உங்களது ஆர்வத்தை மதிப்பீடு செய்து, உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டறியலாம்.
அறிவியல் துறை, தொழில்நுட்ப ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பயன்பாடு, வணிகம் சார்ந்த பணிகள், தகவல் தொடர்பு, கலைத்துறை, சேவைப்பணி போன்றவற்றில் உங்களது ஆர்வம் எதில் உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாகக் கண்டறியலாம். இந்தத் துறைகளில் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது, இந்தப் பிரிவுக்கான படிப்புகள் எவை ஆகியவற்றைக் குறித்து நீங்கள்தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். தேவைப்பட்டால் ‘கரியர் கவுன்சிலர்’ ஒருவரின் உதவியையும் நாடலாம். உங்களுக்கான ஏற்ற துறையைக் கண்டறிந்ததற்குப் பிறகு ஆராய்ந்து படிப்பைத் தேர்வு செய்யுங்கள்.
- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.
(நிறைவு)
முந்தைய அத்தியாயம்: ஆர்வம் vs ஆசை பற்றிய புரிதல் உள்ளதா? | படிப்பும் வேலையும் - 1
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT