Last Updated : 30 Apr, 2025 06:54 AM

 

Published : 30 Apr 2025 06:54 AM
Last Updated : 30 Apr 2025 06:54 AM

+2 படித்த மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் | புதியன விரும்பு 2.0 - 3

பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழையும் மாற்றுச்சான்றிதழையும் (டி.சி.) பள்ளியி லிருந்து நேரடியாக வழங்கிவிடுவார்கள். இதுதவிர பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை ஆகியவை தேவைப் படும்.

இருப்பிடச் சான்றிதழ் (நேட்டிவிட்டி சர்டிபிகேட்), முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுச் சான்றிதழ், விளையாட்டுச் சான்றிதழ்கள் போன்றவையும் மாணவர் களின் தேவையைப் பொறுத்துத் தேவைப் படலாம்.

இந்தச் சான்றிதழ்களை மாணவர்கள் ஏற்கெனவே வைத்திருந்தால், அவற்றை ஒழுங்குபடுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ்களைப் பெறாத மாணவர்கள், இந்தச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு தற்போதே விண்ணப்பிப்பது நல்லது. அதன் மூலம் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க முடியும்.

ஆதார் அடையாள அட்டை: இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்கும் ஆதார் அடையாள அட்டை, அனைவருக்கும் ஓர் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. அத்துடன், மாணவர்களுக்கும் இது தேவைப்படும் முக்கிய ஆவணமாக உள்ளது.

ஆதார் அடையாள அட்டைப் பெறுவதற்கு ஏதாவது ஓர் அடையாளச் சான்றிதழும், பிறந்த தேதி சான்றிதழும், முகவரிச் சான்றிதழும் தேவைப்படும். ஆதார் மையத்துக்கு நேரில் சென்று ஆதார் கார்டு பெறுவதற்கான விண்ணப் பத்தைப் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பித்த 90 நாள்களுக்குள் விண்ணப்ப தாரரின் முகவரிக்கு ஆதார் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.

சாதிச் சான்றிதழ்: சாதிச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அடையாள அட்டை, தாய் தந்தையரின் சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் ஆகியவற்றுடன் உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அரசு வழங்கும் சாதிச் சான்றிதழை நிரந்தரமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வருமானச் சான்றிதழ்: கல்வி உதவித் தொகை, கல்விக்கடன், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் தேவைப்படும். வருமானச் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், தங்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த ஆதாரங்களுடன் உரிய ஆவணங்களையும் இணைத்து (பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம், ரேஷன் கார்டு, ஆதார் அடையாள அட்டை போன்றவை) இ-சேவை மையங்களின் மூலம் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். வருமானச் சான்றிதழ் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், தேவைக்கேற்ப வருமானச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து வாங்கிக் கொள்ளலாம்.

இருப்பிடச் சான்றிதழ்: தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரிகளில் சேர விரும்பும் மாண வர்கள் தமிழ்நாட்டை இருப்பிடமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது விதி. தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையில் படித்த வராக இருந்தால், அந்த மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவையில்லை.

மற்ற மாணவர்களுக்கு இருப்பிடச் சான்றிதழ் தேவை. பிற மாநிலங் களைச் சேர்ந்த மாண வர்கள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படித்திருந்தால், அந்த மாணவர்கள் பொதுப்பிரிவின்கீழ் கல்லூரிகளில் சேர அனுமதிக்கப் படுவார்கள். பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம், முகவரி ஆதார் ஆவணம், பிறப்புச் சான்றிதழ், சுய உறுதிமொழி ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி இ-சேவை மையங்கள் மூலம் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

பிறப்புச் சான்றிதழ்: பள்ளியில் சேரும்போதே பெரும் பாலான மாணவர்கள் பிறப்புச் சான்றிதழ் பெற்றிருப்பார்கள். ஆனா லும், அந்தச் சான்றிதழ் இல்லாதவர்கள், தமிழக அரசின் இணைய தளம் மூலமாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பிறப்புச் சான்றிதழைப் பெறலாம்.

ஏற்கெனவே பெற்ற பிறப்புச் சான்றிதழில் மாணவரின் பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றில் ஏதேனும் விவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால், சரியான பிறந்த தேதிக்குரிய ஆதாரங்களுடன் அந்தந்தப் பகுதி முன்சீப் நீதிமன்றங்களை அணுகி பிறந்த தேதியில் மாற்றம் செய்ய ஆணை பெற வேண்டும். அதன் பிறகு, அந்தத் தீர்ப்பின் நகலை வைத்துக் கொண்டு, பள்ளிச் சான்றிதழ்களில் மாற்றம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சான்றிதழில் பெயர் மாற்றம்: பள்ளிச் சான்றிதழ்களில் உள்ள பெயரில் திருத்தம் செய்ய வேண்டுமானாலும் சரி, இன்ஷியல் மாற்றம் செய்ய வேண்டுமானாலும் சரி, அது குறித்து முதலில் கெஜட்டில் வெளி யிடுவதற்கு எழுது பொருள் அச்சுத் துறை வழங்கும் விண்ணப்பத்தின்படி விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் பெயர் மாற்றத்துக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்துடன், அதற்குரிய ஆவணங்களை கெஜடட் அதிகாரி கையொப் பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பு அரசிதழில் (கெஜட்) வெளியிடப்படும். அதை வைத்துக்கொண்டு, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தை அணுகி சான்றிதழ்களில் பெயரையோ இன்ஷியலையோ அதிகாரப்பூர்வமாக மாற்றிக்கொள்ளலாம்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x