Published : 30 Apr 2025 06:46 AM
Last Updated : 30 Apr 2025 06:46 AM
ஒருவருக்கு தனது கைகள் அழுக்காக இருக்கின்றன என்கிற எண்ணம் திரும்பத்திரும்பத் தோன்றுகிறது என வைத்துக்கொள்வோம். அதைச் சரி செய்யும்விதமாக அவர் தன் கைகளைக் கழுவுகிறார். ஆனால், ஒவ்வொரு முறை கைகளைக் கழுவிய பிறகும் கைகள் அசுத்தமாக இருப்பதாகவே அவர் எண்ணுகிறார். இந்த எண்ணம் மீண்டும் தோன்ற அவர் மறுபடியும் கைகளைக் கழுவுகிறார்.
இப்படி ஒரு செயலைத் திரும்பத்திரும்பச் செய்யத் தூண்டினாலோ எண்ணங்கள் அல்லது மனக் காட்சிகள் மீண்டும் மீண்டும் தோன்றினாலோ அவற்றைக் கட்டுப்படுத்த முயன்றும், தவிர்க்க முடியாத தாக இருந்தால் அது அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD - Obsessive Compulsive Disorder) என அழைக்கப்படும் எண்ணச் சுழற்சி மனநலப் பாதிப்பு எனப் புரிந்துகொள்ளலாம்.
இதுபோன்ற செயல்களை ஒருவர் விரும்பவில்லை என்றாலும் அதனைச் செய்யாமல் அவரால் இருக்க முடியாது. இதை இயல்பான நடத்தையிலிருந்து வேறுபடுத்தி கட்டாய நடத்தை (Compulsion) என்று மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்லத் தயங்கிக்கொண்டு அவதிப்படுவார்கள். இதனை எவ்வாறு வெளியே சொல்வது? பகிர்ந்தால் மற்றவர்கள் தவறாகப் புரிந்து கொள்வார்களே என்கிற அச்சத்தில் அவற்றைச் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு உழன்று கொண்டிருப்பார்கள்.
ஓசிடி பாதிப்புள்ள இளைஞர்கள், மாணவர் களால் படிப்பில், வேலையில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இதனால், சக மாணவர்களோடு, நண்பர்களோடு, பணியாளர் களோடு பழகுவதில் சுணக்கம் ஏற்பட்டு மன உளைச்சல் ஏற்படலாம். நாளடைவில் அது மனக்கவலைக்கும் ஒருவரை இட்டுச் செல்லக்கூடிய வாய்ப்பு உண்டு.
இத்தகைய எண்ணச்சுழற்சி மனநலப் பிரச்சினையால் பாதிக்கப் பட்டவர்கள் தயங்காமல் பெற்றோர், நண்பர் களிடம் சொல்ல வேண்டும். அவர்களின் உதவியோடு மனநல மருத்துவரை நாடி ஆலோசனை களைப் பெற வேண்டும். ஓசிடி பிரச்சினைக்கு மனநல மருந்துகளும் உளவியல் சிகிச்சை களும் பயனளிக்கும். உரிய மனநல மருத்துவச் சிகிச்சையின் மூலம் ஒருவர் இப்பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும்.
அறிகுறிகள் என்ன? - ஓசிடி பாதிப்புப் பற்றிய சில எடுத்துக்காட்டு களைப் பார்க்கலாம். கிருமிகள் அல்லது அழுக்குகளைப் பற்றிய அதிகப்படியான எண்ணங்கள், தூய்மையாக இருக்கவேண்டுமென்ற அதீத எண்ணம் ஏற்படலாம். தனக்கு அல்லது தன்னைச் சுற்றி இருப்போருக்குத் தீங்கு ஏற்பட்டுவிடுமோ என்பது பற்றி எப்போதும் யோசனை செய்து கொண்டிருக்கலாம். சிலருக்கு ‘blasphemous’ (தெய்வ நிந்தனை) எண்ணங்கள் தோன்றக்கூடும்.
ஒரு விஷயத்தைச் சீராகச் செய்ய வேண்டும் எனவும் எந்தவொரு செயலையும் நேர்த்தியாக அல்லது ஒரு குறிப்பிட்ட அமைப்பில் மட்டும் செயல்படுத்த வேண்டும் என்பதிலும் கண்டிப்பாக இருக்கக்கூடிய சுபாவம் இது. பொதுவாக ஓசிடி பிரச்சினை இருப்பவருக்கு மனக்கவலையின் அறிகுறிகள் வெளிப்படும்.
இத்தகைய எண்ணங்களிலிருந்து மீள் வதற்காக மீண்டும் அதே செயல்களில் ஒருவர் ஈடுபடுவதைக் கட்டாய நடத்தை என்கிறோம். எண்ணச் சுழற்சிகளைக் குறைப்பதற்காகச் செய்யக்கூடிய இது போன்ற செயல்கள் எண்ணச் சுழற்சிகளை அதிகப்படுத்துமே தவிர அவற்றைக் குறைக்காது.
என்ன செய்யலாம்? - பாதிக்கப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் ஓசிடி பிரச்சினையின் தன்மையைப் புரிந்துகொண்டு அதனைக் கையாளும்போது பாதிப்பிலிருந்து கண்டிப்பாக மீண்டு வரலாம். இதற்கான சிகிச்சையைத் தொடங்கியதற்குப் பின்பு பாதிப்பிலிருந்து மீள குறைந்தபட்சம் சில வாரங்கள் காத்திருக்க வேண்டியது அவசியம்.
பொதுவாக 10 முதல் 12 வாரங்கள் வரை சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே, ஆரம்பநிலை பலன் என்ன என்பது தெரிய வரும். எனவே, பாதிக்கப்பட்டவரும், அவரது உறவினர்களும் நண்பர்களும் இதனைப் புரிந்துகொண்டு சிகிச்சையைப் பாதியிலேயே விட்டுவிடாமல் மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் தொடர்ந்து பெற்றுவர வேண்டும்.
(தொடர்ந்து பேசுவோம்)
- addlifetoyearz@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT