Last Updated : 23 Apr, 2025 06:10 AM

1  

Published : 23 Apr 2025 06:10 AM
Last Updated : 23 Apr 2025 06:10 AM

நீட் தேர்வு அறையில் நடந்துகொள்வது எப்படி? | புதியன விரும்பு 2.0 - 02

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வ தற்கு நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்களுக்கு விலக்குப் பெறுவது என்பது இன்னமும் எட்டாக் கனவாகவே இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் நீட் தேர்வு தொடர்கிறது.

தேர்வு முறை: தேசியத் தேர்வு முகமை (நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி) நடத்தும் இந்த நீட் தேர்வு (NEET- UG) கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காகிதத்தில் விடை எழுதும் (OMR Sheet) தேர்வுதான். நீட் தேர்வில் விடையளிக்க மூன்று மணி நேரம் வழங்கப்படும்.

அதாவது 180 நிமிடங்கள் நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் உயிரியல் (தாவரவியல், விலங்கி யல் பாடங்களில் 90 கேள்விகள்), இயற்பியல் (45 கேள்விகள்), வேதியியல் (45 கேள்விகள்) ஆகிய பாடங் களில் இருந்து 180 கேள்விகள் கேட்கப் படும் என்பதும் இதற்கு மொத்த மதிப்பெண்கள் 720 என்பதும் நீட் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.

வினாத்தாள் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, அசாமி, மராத்தி, ஒடியா, பஞ்சாபி ஆகிய 13 மொழிகளில் வழங்கப்படும். ஆங்கில மொழி வினாத்தாள் என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் இருக்கும். தமிழ் மொழியில் வினாத்தாள் கேட்டவர்களுக்குத் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் வினாத்தாள் இருக்கும்.

‘டிஸ்எபிலிட்டி’ சான்றிதழ் பெற்று, உரிய அனுமதி பெற்ற மாற்றுத்திறனாளி களுக்குத் தேவையைப் பொறுத்து, விடை எழுத ‘ஸ்கிரைப்’ வசதி வழங்கப்படும். ஸ்கிரைப் வைத்திருந்தாலும் இல்லாவிட்டா லும்கூட விடையளிக்க அவர்களுக் குக் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்படும்.

மாணவர்களுக்குப் பயன்படும் முக்கியத் தகவல்கள்

* தேர்வு தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையம் திறந்து இருக்கும். தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே தேர்வு மையத்துக்கு மாணவர்கள் வந்து விட வேண்டும். அதனால், கடைசி நேரப்
பதற்றத்தைத் தவிர்க்க முடியும். அதன்பிறகு தாமதமாக வரும் மாணவர்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தேர்வு மையத் திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* மாணவர்கள் கொண்டுவரும் பொருள்களைத் தேர்வு அறைக்கு வெளியே பாதுகாத்து வைக்க ஏற்பாடுகள் எதுவும் இல்லை. எனவே, தேர்வு மையத்துக்குத் தேவையில்லாத பொருள்களை எடுத்து வந்து அதை எங்கு வைப்பது என்று தவிக்கக் கூடாது.

* மாணவ, மாணவியர் ஏதேனும் மறைத்து வைத்துள்ளார்களா என்பதை அறிவதற்காகத் தேர்வு மையத்தில் சோதனை செய்யப்பட்ட (frisking) பிறகே, தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

* எந்தப் பொருளையும் மறைத்துக் கொண்டு வரும்படியான ஆடைகளை அணிந்து வரக்கூடாது. கடினமான ஆடை கள் அல்லது நீண்ட கை வைத்த ஆடைகளை அணிந்துவர அனுமதி இல்லை.

* பாரம்பரியமாக, கலாச்சார ரீதியாக, மத அடிப்படையிலான ஆடைகளையோ, அணிகலன்களையோ அணிந்திருந்தால் அவர்கள் தேர்வு அறைக்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்துதங்களைச் சோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும்.

* ஷு அணியக் கூடாது. குறைந்த உயரமுள்ள செருப்புகளை அணியலாம்.

* பேனா, ஸ்கேல், ரைட்டிங் பேட், அழிப்பான்கள், பேப்பர் பிட்டுகள், ஜியோ மெட்ரி பாக்ஸ், பென்சில் பாக்ஸ், பிளாஸ்டிக் பவுச், கால்குலேட்டர், பென் டிரைவ், கேமரா, லாக் டேபிள், மொபைல் போன், ப்ளுடூத், இயர் போன், மைக்ரோ போன், ஹெல்த் பேண்ட், பர்ஸ், ஹேண்ட் பேக், பெல்ட், தொப்பி, வாட்ச், பிரேஸ்லெட், ஹேர்கிளிப், தோடுகள், மூக்குத்தி, வளையம், மோதிரம், நெக்லஸ் போன்ற அணிகலன்கள், வாட்டர் பாட்டில், டீ, காபி, குளிர் பானங்கள் அல்லது நொறுக்குத் தீனிகள் போன்றவற்றைத் தேர்வு மையத்துக்குள் எடுத்துவர அனுமதியில்லை.

* நீரிழிவு நோயாளிகளாக உள்ள மாணவர்கள் உரிய அனுமதி பெற்று, நீரிழிவு நோய்க்கான மாத்திரைகள், வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, பளிச்சென்று தெரியும் படியான தண்ணீர் பாட்டில்களை எடுத்து வர அனுமதிக்கப்படுவார்கள். எனினும், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சாக்லெட், மிட்டாய்கள், சாண்ட்விச் போன்றவற்றை எடுத்துவர அனுமதி இல்லை.

* தேர்வுக்கு வரும்போது ஆதார் கார்டு போன்ற ஏதாவது அங்கீகரிக்கப்பட்ட அடை யாள அட்டையை எடுத்து வர வேண்டும்.

* தேர்வு அறைக்குள் நுழையும்போது பாஸ்போர்ட் அளவு ஒளிப்படம் ஒட்டிய அட்மிட் கார்டைக் காட்ட வேண்டும். அட்மிட் கார்டு இல்லாவிட்டால் தேர்வு அறைக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* அட்மிட் கார்டுடன் டவுன்லோடு செய்துள்ள புரோபாமாவில் வெள்ளைப் பின்னணியில் போஸ்ட் கார்டு (4” X 6”) அளவுள்ள வண்ண ஒளிப்படத்தை ஒட்டி எடுத்துவர வேண்டும். அத்துடன், வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்கு ஏற்ற வகையில் பாஸ்போர்ட் அளவு ஒளிப்படத்தையும் எடுத்து வர வேண்டும்.

* தேர்வு தொடங்கும்போதும், பின்னர் விடைத்தாளைச் சமர்ப்பிக்கும்போதும் வருகைப் பதிவேட்டில் மாணவர்கள் கையெழுத்திட வேண்டும். அத்துடன், வருகைப் பதிவேட்டில் கைவிரல் ரேகை யையும் பதிக்க வேண்டியதிருக்கும்.

* மாணவர்கள் தேர்வு அறையில் தங்க ளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டும். வேறு அறையிலோ அல்லது வேறு இருக்கையிலோ அமர்ந்து தேர்வு எழுதினால் அவர்களது தேர்வு ரத்து செய்யப்படும்.

* தேர்வு நேரம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னால், தேர்வுக்கூட மேற்பார்வையாளர், மாணவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகளை எடுத்துக்கூறுவார்.

* தேர்வு அறையில் மாணவர்களின் அட்மிட் கார்டைச் சரிபார்க்கும் தேர்வுக்கூட மேற்பார்வையாளர் விடைத்தாளில் உரிய இடத்தில் அவரது கையெழுத்தையும் பதிவு செய்வார்.

* சீலிடப்பட்ட தேர்வு வினாத்தாள் மாண வர்களிடம் வழங்கப்படும். அதையடுத்து, அதன் முன்பக்கத்தில் தேர்வு எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை பால் பாயின்ட் பேனா மூலம் அடித்தல் திருத்தல் இல்லாமல் பூர்த்திசெய்ய வேண்டும். தேர்வுக்கூட மேற்பார்வையாளர் கூறும் வரை டெஸ்ட் புக்லெட்டைத் திறந்து பார்க்கக் கூடாது.

* தேர்வு தொடங்குவதற்கான அறிவிப்பு வந்ததும் மாணவர்கள் டெஸ்ட் புக்லெட்டை கவனமாகத் திறந்து விடைத்தாளைத் தனியே எடுக்க வேண்டும். டெஸ்ட் புக்லெட்டில் உள்ள குறியீடும் விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒன்றாக இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.

* விடைத்தாளில் (OMR Sheet) விடை யளிக்கத் தேர்வு மையத்தில் வழங்கப்படும் பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* டெஸ்ட் புத்தகத்தில் கொடுக்கப் பட்டுள்ள குறிப்பிட்ட இடத்தையே ரஃப் ஒர்க் செய்வதற்குப் பயன்படுத்த வேண்டும்.

* தேர்வில் சரியான விடை எழுதுபவர் களுக்கு (correct answer or appropriate answer) 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடை எழுதுபவர்களுக்கு ஒருமதிப்பெண் குறைக்கப்படும் என்பதை யும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

* விடைத்தாளில் ஒரு கேள்விக்கு ஒரு பதிலை மட்டுமே பேனாவால் நிழலிட்டுக் காட்ட வேண்டும். ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை நிழலிட்டுக் காட்டினால் அதற்கு மதிப்பெண்கள் வழங்கப் படாது.

* அதேபோல, தெரியாத வினாக்க ளுக்கு விடையளிக்க நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்காமல், அடுத்தடுத்த வினாக் களுக்கு விடை அளித்துச் செல்ல வேண்டும்.

* தேர்வு நேரம் முடிவதற்கு முன்பே அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளித்து விட்டாலும்கூட, தேர்வு நேரம் முடிவதற்கு முன்பு மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கூட மேற்பார்வையாளரிடம் விடைத்தாளைக் கொடுத்துவிட்டு, பதிவேட்டில் மாண வர்கள் கையெழுத்திட்ட பிறகே தேர்வு அறையிலிருந்து வெளியேற முடியும்.

* அட்மிட் கார்டில் தவறான விவரங் களைக் குறிப்பிட்டு முறைகேடு செய்தல், தவறான அல்லது மார்பிங் செய்யப்பட்ட ஒளிப்படங்களைப் பயன்படுத்துதல், தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தல், விடை அளிக்க உதவும் ‘பிட்’ காகிதங்களை வைத்திருத்தல், காப்பியடிக்க உதவுதல், விடைத் தாளைக் கிழித்தல், விடைத்தாளைத் தேர்வு அறைக்கு வெளியே எடுத்துச் செல்லுதல், தேர்வு மைய அலுவலர்களை மிரட்டுதல், விடைத்தாளில் தவறான தகவல்களை எழுதுதல், தேர்வு அறையில் எலெக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துதல் போன்று நீட் தேர்வு விதிமுறைகளை மீறி தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் 3 ஆண்டுகள் வரை தேர்வு எழுதுவதற்குத் தடை விதிக்கப்படுவதுடன் குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்.

* நீட் தேர்வில் வெற்றிபெற குறுக்கு வழிகள் இல்லை. முயற்சி திருவினையாக்கும்.

நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி பிற்பகல் 2 மணியிலிருந்து 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு மையத்துக்குள் 1.30 மணிக்குள் மாணவர்கள் இருக்க வேண்டும்.

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x