Published : 16 Apr 2025 06:10 AM
Last Updated : 16 Apr 2025 06:10 AM

கனவு மெய்ப்பட... | புதியன விரும்பு 2.0 - 01

சொந்தக் காலில் நில்; சுறுசுறுப்பாகச் செயல்படு; வேலை செய்; அறிவையும் செல்வத்தையும் திரட்டு; அறிவு இல்லாமல் இருந்தால் நாம் அனைத்தையும் இழந்து நிற்போம். அறிவு இல்லை என்றால் நாம் விலங்குகளாக ஆகி விடுவோம். இனிமேலும் சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். செல்லுங்கள், கல்வி கற்றுக்கொள்ள. - சாவித்திரிபாய் பூலே, (1831-1897)

நம் அனைவரின்: முன்னேற்றத்துக்கும் கல்வியே அடித்தளம். ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கும் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் கல்வியே ஏணிப்படி. இந்த நிலையில், தலை நிறைய கனவுகளுடன் ஒளிமயமான எதிர் காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பிளஸ் டூ படித்த மாணவர்களின் முன் நிற்கும் முக்கியக் கேள்வி அடுத்து என்ன படிக்கலாம், எங்கே படிக்கலாம் என்பதுதான்.

புரிதல் வேண்டும்: அதற்கு முன்னதாக மாணவர்கள் தங்களுடைய பலம் என்ன, பலவீனம் என்ன, வாய்ப்புகள் என்ன, எதிர் கொள்ள வேண்டிய சவால்கள் என்ன என்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் என்னவாக இருக்கிறோம்; என்னவாக இருக்க விரும்பு கிறோம்; என்னவாக இருப்பதாக மற்றவர்கள் நம்புகிறார்கள்; இந்த மூன்றும் சேர்ந்ததுதான் நாம்.

இந்த மூன்றும் பல விஷயங்களில் ஒன்றாக இருந்தால் திட்டமிட்டப்படி இயங்குகிறோம் என்று அர்த்தம். நாம் நினைப்பது ஒன்று, நடந்துகொள்வது அதற்கு எதிர்மாறான வேறு ஒன்று என்று இருப்பது வளர்ச் சிக்கு உதவாது. என்னால் முடியாது, எனக்கு அதெல்லாம் சாத்தியம் இல்லை என்பது போன்ற எதிர்மறை உணர்வுகள் வேண்டாம். விடாமுயற்சியும் தன்னம் பிக்கையும் அவசியம்.

பிளஸ் டூ முடித்த பிறகு சில படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டியிருந்தால் அதற்கும் மாணவர்கள் தயாராக வேண்டிய திருக்கும். படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிற அதே நேரத்தில், உயர்கல்வி படிக்க வரும் மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது என்பதால் கல்லூரிகளில் சேர போட்டியும் அதிகரித்து வருகிறது.

அறிவியலைவிட மருத்துவ, பொறி யியல் படிப்புகள்தான் உயர்ந்தவை என்று பலர் கருதுகிறார்கள். அத்துடன், கலைப்படிப்புகள் அவ்வளவு முக்கியத்துவம் இல்லாதவையாகக் கருதும் போக்கும் உள்ளது. ஆனால், உண்மை யில் படிப்புகளில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் இல்லை.

பொறி யியல் படிப்புகளைப் படித்துவிட்டு அதில் பிரகாசிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். கலை, வணிகவியல், அறிவியல் படிப்புகளைப் படித்துவிட்டுச் சாதனை படைத்த மாணவர்களும் இருக்கிறார்கள். எந்தப் படிப்பைப் படித்தாலும் அதைச் சிறப்பாகப் படிக்கிற மாணவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமாக இருக்கிறது என்பதைப் பெற்றோர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்காலப் படிப்பு: குடும்பச் சூழ்நிலை காரணமாகப் படிப்பை இடையிலேயே நிறுத்தியவர்கள்கூட, தங்களது கடுமையான உழைப்பால் தகுதியையும் திறமையையும் வளர்த்துக்கொண்டு படித்து, வாழ்க்கை யில் உச்சத்தை எட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் எடுத்துச்சொல்லி, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையூட்ட வேண்டியது அவசியம்.

பல நேரம் பெற்றோரின் விருப்பமும் மாணவர்களின் விருப்பமும் ஒன்றாக இருப்பதில்லை. மாணவர்களின் விருப்பத்துக்கு மாறாகப் பெற்றோர் தங்களது விருப்பத்தைத் திணிப்பது சரியல்ல.

விருப்பத்துக்கு மாறான படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது, அந்தப் படிப்புகளைப் படிக்க அவர்களுக்கு ஆர்வமில்லாமல் பின்தங்கிப் போக வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கவ னத்தில் கொள்ள வேண்டும். அதேபோல, ஒரு படிப்பில் சேர மாணவர்களின் விருப்பம் மட் டும் போதாது; அந்தப் படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான தகுதியும் திறமையும் அவர்களுக்கு இருக்க வேண்டியது அவசியம்.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட படிப்பைப் படித்தால் மட்டுமே எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது போன்ற ஆசைகளை மாணவர்களிடம் வளர்த்து விடக் கூடாது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் சேர இடம் கிடைக்காவிட்டால் அந்த மாணவர்களின் மனம் உடைந்து போக நேரிடும்.

மாணவர்களின் ஆர்வம், திறமை, குடும்பச் சூழ்நிலை போன்ற வற்றைக் கருத்தில்கொண்டே எதிர்காலப் படிப்பைத் திட்டமிட வேண்டும். கல்லூரியில் சேர்ந்து குறிப்பிட்ட படிப்பைப் படிப்பதற்கு ஏற்ற பொருளா தார வசதி இருக்கிறதா என்பதையும், படிப்பதற்கு அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, கல்விக் கடனுதவி போன்ற விவரங்களையும் முன்ன தாகவே தெரிந்துகொண்டு அதற்கேற்பத் திட்டமிடுவது நல்லது.

எந்த வேலையில் சேர்வதற்கு எந்த மாதிரியான படிப்புகளைப் படிக்க வேண் டும்; எந்தப் படிப்புகளைப் படித்தால் எந்தெந்த வேலைகளில் சேரலாம் என்ப தையும் தெரிந்துகொண்டு, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை முடிவுசெய்ய வேண்டும்.

உறவினர்களும் நண்பர்களும் சொல்கிறார்கள் என்பதற்காக, தங்களது விருப்பத்துக்கு மாறான படிப்பைத் தேர்வு செய்யக் கூடாது. ஒவ்வொருவருக்குள்ளும் தனித்திறமைகள் இருக்கும். அதற்கேற்ப, யதார்த்த நிலைமைகளைக் கருத்தில்கொண்டு, மாணவர்கள் தங்களது விருப்பத்துக்கும் திறமைக்கும் ஏற்ற படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும். எல்லாரும் கற்போம்! ஒன்றாகக் கற்போம்! நன்றாகக் கற்போம்!

- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x