Published : 01 Apr 2025 04:42 PM
Last Updated : 01 Apr 2025 04:42 PM
மார்ச் 25: இயக்குநர் பாராதிராஜாவின் மகனும் இயக்குநரும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) உடல் நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
மார்ச் 25: ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல கராத்தே மாஸ்டரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி (60) சென்னையில் காலமானார்.
மார்ச் 26: ராமநாதபுரம், பெரம்பலூர் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
மார்ச் 26: டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர்.
மார்ச் 27: கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களை குறி வைத்து ஹனி டிராப் செய்வதாக எழுந்த புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மார்ச் 27: 2026இல் அமெரிக்கா - கனடாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா தகுதி பெற்றது. தகுதிச் சுற்றில் பிரேசிலை தோற்கடித்தது.
மார்ச் 27: உத்தரப் பிரதேச சிறுமியிடன் இரண்டு பேர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பாலியல் வன்கொடுமை முயற்சி அல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
மார்ச் 27: மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியது.
மார்ச் 27: கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பாகப் பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) விதிகள் சிறுபான்மை கல்லூரிகளுக்குப் பொருந்தாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மார்ச் 28: மயன்மாரில் மோனிவா நகருக்கு அருகே ரிக்டர் அளவுகோலில் 7.7ஆகப் பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நில நடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்திலும் எதிரொலித்தது.
மார்ச் 28: போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக நடந்த மோசடி தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை ஒன்றாக விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மார்ச் 29: சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் தண்டேவாடா மாவட்ட எல்லையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மார்ச் 29, 30: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாராஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகாவை வீழ்த்தி பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி செக் குடியரசு வீரர் ஜாகுப் மென்சிக் பட்டம் வென்றார்.
மார்ச் 30: தமிழகத்தில் போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 30: சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பிரேசில் லெஜண்ட்ஸ் அணி இந்திய ஆல் ஸ்டார்ஸ் லெவன் அணியை 2-1 என்கிற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
மார்ச் 31:தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர், பரனூர், நாங்குநேரி, வாணியம்பாடி உள்பட 40 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்ந்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT