Published : 26 Mar 2025 06:06 AM
Last Updated : 26 Mar 2025 06:06 AM
போட்டித் தேர்வுகளில் நுண்ணறிவு (Rea soning), அறிவுக்கூர்மை (General Intelligence) பகுதிகளில் பொதுவாக ஆங்கில எழுத்துகள் தொடர் வரிசை, எண்கள் தொடர் வரிசை, அகராதிப்படி வரிசையிடல், குறியிடுதல் - மறு குறியிடுதல், திசைகள், தரங்கள், ரத்த உறவுகள், கடிகாரம், காலண்டர் புதிர்கள், ஒத்த தன்மை, கருத்தியல், வெண் படங்கள், பகடை, கனங்கள் போன்ற தலைப்புகளில் வினாக்கள் அமைந்திருக்கும்.
தயாராவது எப்படி? - ஒத்த தன்மை (Analogy) வினாக்களில் இரு வேறுபட்ட வார்த்தை களை ஒன்றோடு மற்றொன்று தொடர்புப்படுத்தி மூன்றாவது வார்த்தை கொடுக்கப்பட்டு, அந்த வார்த்தையுடன் எந்த வார்த்தை தொடர்புடையதாக இருக்கலாம் எனக் கேட்கப் பட்டிருக்கும்.
இந்தப் பகுதியில் ஆண் இனம் - பெண் இனம், நாடு - தேசிய விளையாட்டு, நாணயம் - நாடாளுமன்றம், உயிரி - இளம் உயிரி, விலங்கு - குரல், இருப்பிடம், வேலை செய்பவர் - வேலை நிகழுமிடம், வார்த்தை - பாடம், கருவி - செயல்பாடு என்பது போன்ற பிரிவுகளில் வினாக்கள் தொகுக்கப்பட்டிருக்கும்.
ஆங்கில எழுத்துகளைப் பயன்படுத்தி தொகுதி களின் தொடர் வரிசை, வகைப்படுத்தல், அகராதி வரிசையிடல் போன்ற வினாக்கள் கேட்கப்படும். இந்தக் கேள்விகளுக்கு 26 ஆங்கில எழுத்துகளும் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாக எவ்விடத்தில் உள்ளன என்பதை எளிதில் அறிய ‘E J O T Y’ ஐந்து எழுத்துகள் தொகுதி முறையைப் பயன்படுத்தி குறைந்த நேரத்தில் விடையளிக்கலாம்.
ஆங்கில எழுத்துகளில் இடமிருந்து வலமாக E - 5ஆம் எழுத்து, J - 10ஆம் எழுத்து, O - 15ஆம் எழுத்து, T - 20ஆம் எழுத்து, Y - 25ஆம் எழுத்து என்பதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்துக்கு ‘Q’ என்கிற எழுத்து ‘O’ எழுத்துக்குப் பின்னால் வரும். இடமிருந்து வலமாக ‘O’ 15ஆவது எழுத்து என்பதால் ‘Q’ 17ஆவது எழுத்து என்பதை அறியலாம். ‘Q’ என்கிற ஆங்கில எழுத்து வலமிருந்து இடமாக (27 - 17 = 10) 10ஆவது எழுத்து. இதேபோன்று ‘M’ என்கிற எழுத்து (27 - 13 = 14), வலமிருந்து இடமாக 14ஆவது எழுத்து.
குறியிடுதல் - மறு குறியிடுதல் (Coding - Decoding) பகுதியில் ஒன்று அல்லது பல வார்த்தைகள் ஏதோ ஒரு குறியீட்டு முறை/சங்கேத மொழியில் குறிக்கப்பட்டு, ஒன்று அல்லது பல வார்த்தைகள் அதே குறியீட்டு முறை/சங்கேத மொழியில் எவ்வாறு குறிக்கப்பட வேண்டும் என வினாக்கள் தொகுக்கப்பட்டு இருக்கும்.
கவனிக்க… கடிகாரம், காலண்டர் தொடர்பான பகுதியில் நிமிட முள், மணி முள் தொடர்பான வினாக்களும், சாதாரண ஆண்டு, லீப் ஆண்டு, தேதி, கிழமை தொடர்பான வினாக்களும் கேட்கப்படும். சாதாரண ஆண்டு - 365 நாள்கள்; லீப் ஆண்டு - 366 நாள்கள். பொதுவாக ஓர் ஆண்டின் எண் நான்கால் மீதியின்றி வகுபட்டால் அது லீப் ஆண்டு.
ஆனால், நூற்றாண்டாக (2000, 2100...) இருப்பின் அவ்வருட எண் 400ஆல் மீதியின்றி வகுபட வேண்டும். கடிகாரத்தில் உள்ள மணிமுள் ஒரு முழுச்சுற்று சுற்றிவர 12 மணி நேரம் பிடிக்கும். எனவே மணிமுள் மணிக்கு 30° வீதம் 12 மணி நேரத்தில் 360° சுற்றுகிறது. ஆனால் நிமிடமுள் 1 மணி நேரத்தில் 360° சுற்றுகிறது. ஒரு நிமிடத்துக்கு நிமிடமுள் 6° சுற்றும். ஆனால், மணிமுள் ஒரு நிமிடத்துக்கு (1/2)°தான் சுழலும்.
நண்பகல் 12 மணிக்கும், நள்ளிரவு 12 மணிக்கும் மணிமுள்ளும் நிமிடமுள்ளும் ஒன்றின்மீது மற்றொன்று சரியாகப் பொருந்தி (Coincidence) இரு முள்களுக்கும் இடையே 0° கோணத்தை உருவாக்கும். மேலும் (720/11) நிமிடங்களுக்கு ஒருமுறை மீண்டும் இரு முள்களும் சரியாக ஒன்றின்மீது ஒன்றாகப் பொருந்தியிருக்கும்.
எனவே, ஒரு நாளைக்கு 22 முறை இரு முள்களும் 0°ஐ உருவாக்கும், அதைப் போன்று 22 முறை ஒன்றுக்கொன்று எதிர்திசையில் 180° கோணத்தை உருவாக்கும். ஆனால், மணிமுள்ளும் நிமிடமுள்ளும் ஒரு நாளைக்கு 44 முறை ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருக்கும்.
போட்டித் தேர்வுகளுக்குத் தகுந்தாற்போல் வினாக்களின் எண்ணிக்கையும் கடினத்தன்மையும் வேறுபட்டிருக்கும். மிகக் குறைவான நேரத்தில் அவ்வினாக்களுக்குச் சரியான விடையளிக்க முறையான பயிற்சி தேவை.
தெளிவான சிந்தனையுடன் எளிய முறையைப் பயன்படுத்தி நுண்ணறிவு, அறிவுக்கூர்மை வினாக்களுக்கு விடையளித்தால் அதிக மதிப்பெண்கள் பெற்று போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.
- கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT