Published : 03 Mar 2025 07:08 PM
Last Updated : 03 Mar 2025 07:08 PM

காலம் மறந்த அறிவியலாளர் எல்லப்பிரகதா சுப்பாராவ்

அறிவியலில் நோபல் பரிசு கிடைப்பது அரிது. சிறந்த கண்டறிதல்களுக்குச் சில நேரத்தில் கிடைக்காமல் போவதும் உண்டு. ஒருவரின் பல கண்டறிதல்களுக்குப் பலமுறை கிடைக்க வேண்டிய நோபல் பரிசு ஒவ்வொரு முறையும் கிடைக்காமல் போனால்?

ஆங்கிலேயர் ஆட்சியில் மதராஸ் மாகாண கோதாவரி டெல்டாவின் பீமாவரத்தில் பிறந்து, 52 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒருவர், நம்மில் பலர் அவரைவிடவும் நீண்ட காலம் வாழ அடிகோலினார். இருந்தபோதும், இறந்த பின்னும் பலராலும் பல காலம் கண்டுகொள்ளப்படாமல்போன எல்லப்பிரகதா சுப்பாராவ் (Yellapragada Subbarow) பற்றி இன்றைய அறிவியல் உலகில் அறிந்தோர் மிகச் சிலரே. கோதாவரி ஆற்றங்கரையில் பிறந்து, கூவம் ஆற்றங்கரையில் கல்வி பயின்று, அமெரிக்க பாஸ்டன் நகரின் சார்லஸ் ஆற்றங்கரையில் சாதனை மேல் சாதனைகள் நிகழ்த்தியவர் சுப்பாராவ்.

ஆரம்பக் காலம்

19ஆம் நூற்றாண்டின் அந்தியில் 1895இல் பிறந்த சுப்பாராவ், படிப்பில் சூட்டிகையாக இல்லை என்றாலும் கணிதத்தில் புலி. பள்ளிக்காலத்தில் அவரின் தந்தை ஜகன்நாதம் இறந்துவிட, இரண்டு முறை பள்ளி இறுதித் தேர்வைத் தவறவிட்டுப் பின், அப்போதைய மதராஸ் பட்டணத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கு பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்று, அப்போதைய மாநிலக் கல்லூரியில் புகுமுகப் படிப்பில் [intermediate examination] தேறினார். மதிப்பெண்களின் அடிப்படையில் கணிதப் பட்டப்படிப்புக்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஆர்வமின்றி, வேறு வகையில் யோசித்தார். காரணம், பள்ளி, மாநில கல்லூரிக் காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துடன் அவருக்குத் தொடர்பு இருந்த தாக்கத்தால், சன்யாசம் பெற்றுத் துறவு வாழ்க்கையின் மூலம் மக்கள் பணியாற்றுதல் எனும் சிந்தனை இருந்தது. ஆனால், அவரது அன்னை வெங்கம்மா துறவுக்கு அனுமதியளிக்க மறுத்துத் தடுத்துவிட்டார்.

தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயாரே கண்டிப்புடன் தனது பிள்ளைகளைக் கண்காணித்தார். தாயாரின் அனுமதியற்ற நிலையில், மடத்தினரின் ஆலோசனையின் பேரில் மருத்துவத்தின் மூலம் மக்களுக்குச் சேவை செய்யும் முடிவில் மருத்துவக் கல்வியைத் தேர்ந்தெடுத்து, 1915இல் அப்போதையை மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் ஆங்கில மருத்துவம் எனும் அலோபதி, இன்றுடன் ஒப்பிடும்போது பெரிதும் பின்தங்கியிருந்தது. ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் புழக்கத்தில் இல்லை, பல விட்டமின்கள் அறியப்பட்டிருக்கவில்லை, ஹார்மோன்கள் அறியப்பட்டும் முழுமையாக அறியப்பட்டிருக்கவில்லை, புற்றுநோய்க்கெனச் சிறப்பு மருந்துகள் ஏதும் இல்லை, உடலின் பல வளர்சிதை மாற்ற நுண்மைகள் [metabolic pathways], மருத்துவ அறிவியலின் பார்வைக்குள் அகப்பட்டும், அகப்படாமலும் இருந்த நவீனத் தொன்மைக்காலம் அது. ஆயுர்வேத, சித்த மருத்துவத்தினும் மேன்மையானது எனக் கூற அலோபதி மருத்துவம் ஆழமின்றி இருந்த காலம். ஆனால் புதுமைகளை விரும்பியேற்கும் சிறப்புத்தன்மை ஆங்கில மருத்துவ முறைக்கு இருந்ததால், அதற்கென ஒரு கவர்ச்சி இருந்தது, இன்றும் இருக்கிறது.

வறுமையும் திருமணமும்

மருத்துவக் கல்விக்கு இவரின் பொருளாதாரப் பின்னணி சிக்கலாக அமைந்தது. 17ஆம் நூற்றாண்டு கோல்கொண்டா நிஜாமிடம் அமைச்சராக இருந்த எல்லண்ணா வம்சத்தின் வழிவந்தவராக இருந்தாலும், 20ஆம் நூற்றாண்டு சுப்பாராவின் காலத்தில் அவர் குடும்பத்தை ஏழ்மை ஆட்கொண்டிருந்தது. படிப்பிற்கான பொருள்செலவு அவரது குடும்பத் திறனுக்கு மீறியது. சூரியநாராயணமூர்த்தி எனும் ஓர் ஆந்திர நாட்டு செல்வந்தர், சுப்பாராவின் திறமையை மெச்சிக் கல்வி செலவுக்கு உதவ முன்வந்தார். அதற்கு ஈடாக, செல்வந்தரின் சுமார் பத்து வயது மகள் சேஷகிரியை மணம் செய்துகொள்ள வேண்டும் எனும் நிபந்தனையை சுப்பாராவ் ஏற்றார்.

கல்விப் பயிற்சி ஆரம்பித்துச் சில காலம் கழித்துதான் திருமணமென்றும், படிப்பு முடிந்த பின்னர்தான் குடும்ப வாழ்க்கை எனும் எதிர் நிபந்தனையை சுப்பாராவ் முன்வைத்தார். பெண் வீட்டார் ஏற்றுக்கொள்ள, திருமணமும் நடந்தேறியது. கல்வி நன்முறையில் முன்னேறியது.

விடுதலை வேட்கை

மகாத்மா காந்தியின் வருகையால் பாரத விடுதலைப் போராட்டம் சூடுபிடிக்க, ஆங்கிலப் பொருள்கள் புறக்கணிப்புக்குச் செவிமடுக்கிறார் சுப்பாராவ். கல்லூரியில் பிற மாணவர்களைப் போலன்றி, ஆய்வகங்களில், குறிப்பாக அறுவைசிகிச்சை வகுப்புகளில் பயிற்சி அறைக்குரிய ஐரோப்பிய ஆடைகளைத் தவிர்த்து அதற்கு ஈடான கதர் ஆடைகளை அணிந்தார். இதனால் கல்லூரியின் அறுவைசிகிச்சைப் பிரிவின் முதன்மை பேராசிரியர் பிராட்பீல்டின் [M.C.Bradfield] சிறப்புக் கவனத்தில் ‘வீழ்ந்தார்’. கல்விப் பயிற்சி முடிந்தது. அனைத்துப் பாடங்களிலும் சிறப்பாகத் தேர்ச்சிபெற, அறுவைசிகிச்சை பாடத்தில் மட்டும் பிராட்பீல்டின் அருளால் தேர்ச்சி நழுவியது. எனவே, MBBS எனும் பட்டத்திற்குப் பதிலாக சற்றுக் குறைந்த எல்எம்எஸ் [LMS; Licentiate in Medicine and Surgery] பட்டம் 1921இல் சுப்பராவுக்கு வழங்கப்பட்டது.

இடமிருந்து வலம் நான்காவதாக சுப்பாராவ் நண்பர்களுடன்

ஆயுர்வேத மருத்துவர்

அவரின் கவனம் ஆயுர்வேத மருத்துவத்திற்குத் திரும்ப, லட்சுமிபதி எனும் ஆயுர்வேத நிபுணரால் அப்போது சிறப்புப் பெற்றிருந்த மதராஸ் ஆயுர்வேதக் கல்லூரியில் மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியங்கியல் பயிற்றுவித்தார். பல உள்நாட்டு நோய்களை அலோபதி மருத்துவர்களைவிட, ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள் திறம்படக் கையாண்டுகொண்டிருந்த காலம். இந்த நேரத்தில் அவரின் தாயார் வெங்கம்மாவுடன் மனைவி சேஷகிரியும் மதராஸ் நகருக்கு வந்துசேர, குடித்தன வாழ்க்கை ஆரம்பமானது.
சுப்பாராவுக்கு அலோபதி மருத்துவத்தில் எல்எம்எஸ் தகுதி இருந்தும், ஆயுர்வேத மருத்துவத்தில் அனுபவம் இருந்தும், அவரின் கவனம் நோயாளிகளின் சிகிச்சையை விடுத்து மருத்துவ ஆராய்ச்சியின் பக்கம் ஈர்க்கப்பட்டது. அன்றைய மலேரியா மருந்து தென்னமெரிக்க சிங்கோனா [Cinchona] மரங்களில் இருந்து கிடைத்துக்கொண்டிருந்ததைப் போன்று, இந்திய மருத்துவ முறைகள் கூறும் தாவரங்களில் பல நோய்களுக்கு மருந்து இருப்பதாக சுப்பாராவ் கருதினார். இதற்கென முயன்று நூற்றுக்கணக்கான மருத்துவத் தாவரங்களின் பட்டியலையும், மருத்துவ முறைகளையும் கொண்ட 400 பக்கங்களுக்கும் மேற்பட்ட நூலை உருவாக்கினார். கல்லூரியில் வருமானம் நிறைவாக வழங்கப்பட்டுக் கொண்டிருப்பினும், அங்கு ஆய்வக வசதிகள் சிறப்பானதாக அமைந்திருக்கவில்லை.

அந்தக் காலக்கட்டத்தில் இந்திய மாணவர்கள் மருத்துவ மேல்படிப்பும் சேர்த்து, எந்த மேல்படிப்பிற்கும் இங்கிலாந்துக்கே செல்வர். மாறாக, ஆராய்ச்சியின்பால் கொண்ட பிடிப்பினால், அமெரிக்க அறிவியலினால் ஈர்க்கப்பட்டார் சுப்பாராவ். அவர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்து, தனது மாமனாரின் உதவியோடும், அறக்கட்டளைகளின் துணையுடனும் மேல்படிப்பிற்கான செலவுக்குரிய தொகையினை ஏற்பாடு செய்துகொண்டார். மனைவியிடம் மூன்று ஆண்டுகளில் திரும்பி வந்துவிடுவதாகக் கூறிவிட்டு கப்பலேறி, சுமார் ஒரு மாத காலப் பயணத்திற்குப்பின் அக்டோபர் 1923 இறுதியில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரைச் சென்றடைந்தார்.

(பாஸ்டன் நகரின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சுப்பாராவ் பெற்ற முனைவர் படிப்பைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: durainava@gmail.com

(தொடரும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x