Last Updated : 26 Feb, 2025 06:31 AM

 

Published : 26 Feb 2025 06:31 AM
Last Updated : 26 Feb 2025 06:31 AM

வெற்றிக்குக் கைகொடுக்கும் பண்புகள் | போட்டித் தேர்வு

போட்டித் தேர்வில் வெற்றிபெற கவனக் குவிப்போடு பயிற்சி எடுத்துக் கொண்டு தயாராவது தேர்வர்களின் வழக்கம். தேர்வுக்குத் தயாராகும் பயணத்தில் கற்கும் பண்புகள் தனிநபராக ஒருவர் முன்னேற்றம் அடையவும், எந்தத் துறையிலும் சாதிக்கத் தூண்டும் தன்னம்பிக்கையைப் பெறவும் முடியும்.

பகுப்பாய்வு மனப்பான்மை: போட்டித் தேர்வுகளை எதிர்கொள்பவர் எதையும் பகுப்பாய்வு செய்யும் மனப்பான்மையையும், சிக்கலான விஷயங்களை ஆராய்ந்து புரிந்து கொள்ளும் திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் கடினமான சவாலான சூழலையும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க முடியும்.

விடாமுயற்சி: ஒருவர் தனது இலக்கை நோக்கிப் பயணிப்ப தற்கான உறுதியான சிந்தனையையும், தோல்வி களைக் கண்டு பின்வாங்காமல் வெற்றியை நோக்கிப் பயணிப்பதற்குத் தேவையான விடா முயற்சி மனநிலையையும் இப்பயணத்தில் வளர்த்துக்கொள்ளலாம்.

நேர மேலாண்மை: போட்டித் தேர்வுக்குத் தயாராகும்போது நேர மேலாண்மையைக் கட்டுக்கோப்பாகக் கடைப் பிடிப்பது முக்கியம். எதையும் சரியாகத் திட்டமிட்டு, அத்திட்டத்தைப் பின்பற்றி வேலைகளைச் சரியான நேரத்தில் செய்து முடிப்பது போட்டித் தேர்வர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்பு.

நிர்வாகச் செயல்முறை: அரசமைப்பு அடிப்படைகள், பொது நிர்வாகம், கொள்கை நடைமுறைகள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் நிர்வாகச் செயல்முறை குறித்த புரிதல் தேர்வர்களுக்கு எளிதாகக் கிடைக்கும்.

தலைமைப் பண்பு: போட்டித் தேர்வுக்குத் தயாராவது ஒருவருக்குச் சவாலான, நீண்ட பயணமாக இருக்கக்கூடும். இப்பயணத்தில் வெற்றி தோல்விகளை எதிர் கொள்ளல், இலக்கை நோக்கிப் பயணிப்பதில் பின்வாங்காமல் இருத்தல் போன்றவை போட்டி யாளர்களின் தலைமைப் பண்புகளை நிச்சயம் செம்மைப்படுத்தும்.

மொழிப் புலமை: தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருப்பது அவசியம். தவிர பல்வேறு மொழி களைக் கூடுதலாகத் தெரிந்து வைத்திருப்பது தேர்வர்களுக்குப் பலமாக அமையும். வெவ்வேறு சமூகப் பின்னணியிலிருந்து வரும் மக்களைச் சந்திக்கவும் அவர்களது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளவும், உரையாடவும் மொழிப் புலமை அவசியம்.

பேச்சுத் திறன்: சிக்கலான யோசனைகளைத் தெளிவான நடையில் வாய்மொழியாகவோ எழுதுப்பூர்வமாகவோ வெளிப்படுத்துவது முக்கியப் பண்பாகும். ஒரு தகவலைச் சாமானியரும் புரிந்துகொள்ளும் வகையில் தொகுத்து வழங்கும் திறனை இப்பயணத்தின்போது மேம்படுத்திக்கொள்ளலாம். அது மட்டுமன்றி பலதரப்பட்ட பாடங்களைப் படிப்பதன் மூலம், பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் திறனைத் தேர்வர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

சர்வதேசப் புரிதல்: உள்நாடு தொடர்பான தகவல் மட்டுமன்றிப் போர், எல்லைப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்தும் அறிந்து வைத்திருப்பது போட்டித் தேர்வில் வெற்றிபெற உதவியாக இருக்கும்.

தீர்வு காணுதல்: போட்டித் தேர்வுக்கான பயிற்சியின்போது எழுத்துப்பூர்வமாக வெவ்வேறு சூழலில் பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். இதை வாழ்க்கைச் சூழலில் பொருத்திப் பார்த்து எந்தவொரு முடிவையும் அவசர நிலையில் எடுக்காமல், ஆராய்ந்து சரியான முடிவைச்செயல்படுத்தப் பழகிக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x