Published : 19 Feb 2025 06:17 AM
Last Updated : 19 Feb 2025 06:17 AM

சமூக ‘வலை’தளத்திலிருந்து தப்பிப்பது எப்படி? | மனதின் ஓசை 11

‘சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடப்பது மனநலத்துக்கு கேடு’ என்கிற எச்சரிக்கை வாசகங்களைப் பகிர்ந்து அதன் மீதான, விவாதம் சமூக வலைதளங்களிலேயே நடப்பதுதான் நகைமுரண். செய்தி, விளம்பரம், வேலைவாய்ப்பு, தகவல் பரிமாற்றம் எனப் பல துறைகளிலும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம். அந்தத் தாக்கம் ஒருவரது மனநலத்துக்கு நன்மையும் தரலாம், தீங்கும் விளைவிக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

என்ன மாதிரியான தாக்கம்? - வயது வேறுபாடின்றி அனை வரும் தங்களது சமூக ஊடகப் பயன் பாட்டைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது உலக அளவில் விவாதப் பொருளாகி உள்ளது. குறிப்பாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைச் சீர்படுத்துவது முக்கியம்.

ஒருவர் தன்னுடைய தனித் திறன்களை, கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும், தனது படைப்பாக்கத்திறனைப் பகிர்வதற்கும், தன்னுடைய அடையாளத்தை அங்கீகரிக்கும் நபர்களைக் கண்டடை வதற்கும், தன் நண்பர்களோடு தகவல் பரிமாறிக் கொள்வதற்கும், சமூகத்தோடு தொடர்பில் இருக்கவும் எனப் பல விஷயங்களுக்குச் சமூக வலைதளங்கள் உதவியாக இருக்கின்றன. இப்படிச் சில நன்மைகள் இருக்கும்போதும் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து ஒருவர் கவனத்துடன் இருக்க வேண்டும்.

காரணம், இளம் வயதிலேயே மிக அதிக நேரம் சமூக வலைதளத்தில் மூழ்கிக் கிடப்பதால் மூளை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படலாம். இதனால் கற்கும் திறன், ஆரோக்கியமான நடத்தை, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன் போன்றவற்றில் சிக்கல் ஏற்படலாம். சமூக வலைதளங்களின் அமைப்புமுறை (algorithm) நாம் எந்த விஷயத்தை அதிகமாகத் தேடுகிறோமோ அது குறித்த தகவல்களையே தொடர்ந்து வழங்கும் வகையில் இயங்குகிறது.

உதாரணமாக மனக் கவலை, மனச்சோர்வு குறித்து ஒருவர் சில தகவல்களைத் தேடும் பட்சத்தில், அது தொடர்பான தகவல்களே அவரது முகப்பில் அதிகமாகத் தென்படும். இதில் உண்மையான பயனுள்ள தகவல்களோடு தேவையற்ற, போலியான, அச்சம் தரும் தகவல்களும் அதிகம் தென்படும் என்பதால் பயனர் குழம்பிப்போகக்கூடும்.

தப்பிக்கும் வழி: இந்தக் குழப்பத்தால் சமூக வலை தளங்களில் நல்ல செய்திகளைவிடப் போலியான, வன்முறை நிறைந்த, பிறருக்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய செய்திகளே அதிகம் பகிரப்படுகின்றன. பொதுவெளியிலும் குடும்பங்களிலும் சக மனிதர்களுடன் பழகிக் கலந்துரை யாடுவதற்கான வழி தற்போதைய உலக மயமாக்கல் சூழலில் குறைந்துகொண்டே வருகிறது. பெரும்பாலும் சமூக வலை தளங்களில் நேரம் செலவழிப்பதால் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர் வோடு செயல்படுவதைக் கடமையாகப் பின்பற்ற வேண்டும்.

வளரிளம் பருவத்தினரைப் பொறுத்தவரை யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற வற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இத்தளங்களில் அறிவுசார் தகவல்களும் கொட்டிக்கிடக்கின்றன. மாணவர்கள் அவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும்படி பெற்றோர், ஆசிரியர் வழிகாட்ட வேண்டும்.

இவை தவிர பேச்சு, எழுத்து, ஓவியம், ஆடல், பாடல் போன்று ஒருவரது தனித்திறனை வெளிப்படுத்தும்தளமாகவும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தமாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். ஆனால், அதுவே மாணவர்களுக்கு அழுத்தத்தைத் தருவதாகவும் மாறிவிடக்கூடாது. சிலரால் ஆக்கப்பூர்வமாகப் படைப்புகளைப் பகிர முடியும். அப்படிச் சிலரால் பகிர முடியாத போது விளையாட்டு, வாசிப்பு என அவர்களது விருப்பத்துக் கேற்ப வேறு துறைகளில் ஜொலிக்க வழிகாட்ட வேண்டும்.

பெற்றோர் தங்கள் வளரிளம் பருவக் குழந்தைகளிடம் சமூக வலைதளங்களின் சாதக பாதகங்களை எடுத்துக்கூறி வெளிப்படைத்தன்மையுடன் உரையாடல் களை அவ்வப் போது மேற்கொள்ளலாம். தவறுகள் ஏற்படும்போது அவற்றிலிருந்து மீள பெற்றோர் உதவுவார்கள், வழிகாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டும்.

சமூக ஊடகங்களை எந்த வயதில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற தெளிவு பெற்றோ ருக்கு இருக்க வேண்டும். அறிமுகமான பின்பும், நேரக் கட்டுப்பாட்டோடு பயன் படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும். தாங்கள் விதிக்கும் விதிமுறைகளை முதலில் பெற்றோரும் கண்டிப்பாகப் கடைபிடித்து முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

(தொடர்ந்து பேசுவோம்)

- addlifetoyearz@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x