Published : 12 Feb 2025 06:13 AM
Last Updated : 12 Feb 2025 06:13 AM

காட்சி ஊடகம் எனும் ஆக்கிரமிப்பாளர் | மனதின் ஓசை 10

வாழ்க்கையின் எதார்த்தம் குறித்த நமது அனுபவங்களைப் பல்வேறு தரப்பிலிருந்து பெறுகிறோம். முதன்மையாகக் குடும்பம், நண்பர்கள். அடுத்தபடியாகப் பள்ளிகள், கல்லூரிகள், மதம் போன்ற சமூக நிறுவனங்களிலிருந்து பெறுகிறோம். இவற்றுக்கு அடுத்தபடியாக நமது அனுபவங்களைத் தீர்மானிக்கும் இடத்தில் காட்சி ஊடகங்கள் இருக்கின்றன.

நன்மையும் தீமையும்: காட்சி ஊடகங்கள் நம் வாழ்க்கையில் ஆக்கிரமிக்கும் இடமும் நேரமும் அதிகரித்துக்கொண்டே வரும் இன்றைய சூழலில், முதல் இரண்டு தரப்பில் இருந்து சரியான வழிகாட்டுதலோ தாக்கமோ குறையும்பட்சத்தில் அந்த இடத்தை ஊடகங்கள் தரும் அனுபவங் கள் நிரப்புகின்றன. சமூக ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் போன்றவை நமக்கு மெய்நிகர் உலகத்தைக் காண்பிக்கின்றன.

வாழ்க்கையின் பல்வேறு எதிர்பார்ப்புகள் குறித்த சிந்தனையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துபவையாக அவை உள்ளன. சமூகத்தைப் பற்றிய தகவல்களை அளிப்பதோடு மட்டும் அவை நிற்பதில்லை. ஒருவரது கருத்துகளை அவை வடிவமைக்கின்றன. இது நன்மை, தீமை என இரண்டு விதமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

பார்ப்பதற்கு உண்மையைப் போன்ற தொரு பிம்பத்தை ஏற்படுத்தும் மெய்நிகர்க் காட்சிகளை, நேரத்தைக் கொல்லும் விளையாட்டுகளை வடிவமைப் பதே தற்போதைய போக்கு. உதாரணத்துக்கு வன்முறைக் காட்சிகளை இளம் வயதிலேயே காண்பதன்மூலம் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

வன்முறையை மேற்கொள்பவர்கள் தங்களது நடத்தைக்காக வருந்து வதும் இல்லை, தண்டனை அனுப விப்பதும் இல்லை. வன்முறையைப் புனிதப்படுத்துவது, வன்முறைக்கு ஆளானவர்கள் அவற்றைச் சாதாரண மாக ஏற்றுக்கொள்வது போன்ற காட்சிகள் இளைஞர்கள், வளரிளம் பருவத்தினர் மனதில் எதிர்மறைவிளைவுகளை ஏற்படுத்து கின்றன. நிஜ உலகில், வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்கள் மீது இயற்கையாக எழக்கூடிய அனுதாபமும் கரிசனமும் காட்சி வன் முறைக்கு ஆளானவர்களிடம் குறைவாகவே காணப்படுகிறது.

இது போன்ற சூழலில் காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செல வழிக்கும் போது, அதில் காட்டப்படும் கண்ணோட் டத்துடனே நிஜ உலகையும் ஒருவர் அணுகும் பேராபத்து இருக்கிறது. ஏதாவது ஒரு பிரச்சினை என்றவுடன் சிலர் வசைச் சொற்களை அள்ளி வீசுவதற்கும் கையை ஓங்குவதற்கும் இதுவும் ஒரு காரணமே.

மாறாக, எந்தவொரு பிரச்சினையையும் சிக்கலையும் முதிர்ச்சியாக அணுக வேண்டும், எதிர்த்தரப்பினரின் வாதத்தை முதலில் கேட்க வேண்டும் என்பது போன்ற காட்சிகள் நிறைந்த நிகழ்ச்சிகளும் திரைப்படங்களும் வெளியாவது குறைவு. இதனால், ஒருவரின் மனதில் நேர்மறையான எண்ணங்களைவிட எதிர்மறையான எண் ணங்களே அதிகம் நிரம்பியிருக்க இது காரணமா கிறது.

தேர்வு செய்யலாம்: காட்சி ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம், விளை யாட்டு, உடற்பயிற்சி, சமூகத்தில் பிறரோடு கலந்து உறவாடுதல், குடும்பத் தினரிடம் நேரம் செலவழிப்பது போன்ற ஆரோக்கியமான வழக்கங்களுக்கான நேரம் கணிசமாகக் குறைகிறது. ஊடகப் பொழுதுபோக்குக்கு அதீத நேரம் செலவழிப்பது, சமூகக் குழுக்களுடன் பழகும் நேரத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் அவர்கள் சமூகத் திடமிருந்து அந்நியமா கின்றனர்.

காட்சி ஊடகங்களை அறவே புறம் தள்ளிவிட முடியாது. ஒரு விஷயத்தை எளிதில் புரிந்துகொள்ளவும், கற்கவும், நினைவில் வைத்திருக்கவும் காட்சிவழி வழங்கப்படும் பாடமும் தகவலும் ஒருவரின் மனதில் ஆழமாகப் பதியும். காட்சி ஊடகம் வழியே ஒருவர் எதைப் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் என்பதைச் சந்தைக் கலாச்சாரம் நிர்ணயித்தாலும், அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது அவரவர் கைகளில்தான் உள்ளது.

சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் இதுதான் நிலைமை என்றபோதும், பள்ளி மாணவர்களின் ‘ஸ்க்ரீன் டைம்’ என்பதில் பெற்றோர் இன்னும் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். மாணவர்கள் காட்சி ஊடகத் தில் எதைப் பார்க்க வேண்டும், அதற்காகச் செலவிடும் நேரம், நன்மை தீமைகளைப் பிரித்து, எடுத்துக்கொள்ள வேண்டிய புறம்தள்ள வேண்டிய விஷயங்கள் எவையெவை என்பதைப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.

தேவை இருப்பின் அவர்கள் காட்சி ஊடங்களுக்குச் செலவிடும் நேரத்தை, அதில் இருந்து உள்வாங்கிக் கொண்டதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் பதிவுசெய்யச் சொல்லலாம். பின்பு, அதைப் பற்றிய ஆரோக்கியமான கலந்துரையாடல் மூலம் நன்மைகளை எடுத்துக்கொண்டும், தீமைகளைத் தவிர்த்தும் பழக்கமாக்கிக் கொள்ள கற்றுத் தரலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

- addlifetoyearz@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x