Last Updated : 12 Feb, 2025 06:07 AM

 

Published : 12 Feb 2025 06:07 AM
Last Updated : 12 Feb 2025 06:07 AM

கவனம் ஈர்க்கும் வேலைகள் | இதோ வேலை!

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் பணியாற்ற வேண்டுமென்பது பல மாணவர்களின் கனவு. அதற்காகக் கடின உழைப்பைச் செலுத்தினாலும் அனைவருக்கும் அந்தக் கனவு கைக்கூடு வதில்லை. போட்டித் தேர்வுகளில் சோபிக்க முடியாதபோது மாற்று வேலைகளில் சேர ஆர்வம் காட்டுவோம். அது போன்ற சில பணிகளுக்கு மாணவர்கள் முயற்சி செய்யலாம்.

கொள்கைப் பகுப்பாய்வாளர் (Policy analysis) - அரசுத் திட்டங்களை வகுக்கும் குழுவோடு சேர்ந்து பணியாற்றுவது, பகுப்பாய்வு செய்வது போன்றவை கொள்கைப் பகுப்பாய்வாளரின் முக்கியப் பொறுப்புகள். கல்வி, சுகாதாரம், நிதி மேலாண்மை, சுற்றுச்சூழல், விளையாட்டு எனப்பல்வேறு துறைகளிலும் தனித்துவ மான திட்ட வரைவுகளை உருவாக்கி நிர்வகிப்பது அரசின் கடமை. இந்தத் திட்ட வரைவுகளை உருவாக்கும் பொருட்டுத் தெளிவான ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

திட்டத்தின் சாதக - பாதகங்களை ஆய்வுசெய்து இறுதிகட்ட பணிகளுக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இதைத் திறம்படச் செய்வதில் கொள்கைப் பகுப்பாய் வாளரின் பங்கு அளப்பரியது. குடிமைப் பணிகளைப் போல இதிலும் சமூக நலன் காக்கும் முடிவுகளை எடுக்க நேரிடும். நாட்டு நடப்புகள், நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சுவாரசியம் நிறைந்த சவாலான வேலையும்கூட.

சர்வதேச உறவுகள் (International relations) - பொதுவாகக் குடிமைப் பணித் தேர்வுகளுக்காக ஆயத்தப்படுத்திக் கொள்பவர் உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு அரசியல் நிகழ்வுகளையும் பின்தொடர்வது வழக்கம். எனவே, உள்நாட்டு கொள்கை வகுப்புப் பணிகள் இருப்பதுபோலச் சர்வதேச உறவுகள் வலுப்பெற மற்ற நாடுகளோடு நட்புறவில் இருப்பது, பிரச்சினைகளைத் தவிர்ப்பது, பேரிடரின்போது உதவுவதைப் போன்று சில முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

இத்துறையில் பணியாற்ற விருப்பம் இருப்பவர் ஆங்கில மொழியில் புலமை பெற்றிருப்பதோடு பல மொழிகளைத் தெரிந்து வைத்திருப்பதும் நல்லது. வெளிநாடுகளோடு ஒப்பந்தம் கையெழுத்திட, வணிகம் வளர்ச்சி பெற, புதிய தொழில்நுட்பங்கள் உள்நாட்டில் அறிமுகப்படுத்த எனப் பல விஷயங்களை நாட்டு நலனுக்காக இவர்கள் செய்ய வேண்டியிருக்கும்.

இதழியல் துறை (Journalism) - வானொலி, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள், இணையதளங்கள், சமூக ஊடகங்கள் என இதழியல் துறை பரந்து விரிந்தது. அச்சு, டிஜிட்டல் என இரண்டு பெரும் பிரிவுகளின்கீழ் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன. செய்தியாளராக, உதவி ஆசிரியர் களாக, கட்டுரையாளராக இத்துறையில் பணியாற்ற வாய்ப்புகள் உண்டு. சமூக நலனில் அக்கறை கொண்டு மக்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும், ஆக்கப்பூர்வமான திட்டங்களை அரசு வகுக்கவும் உந்துதலாக இருக்க இதழியல் துறையில் பணியாற்றலாம்.

தரவுப் பகுப்பாய்வு, ஆய்வுத் துறை (Data Analysis, Research) - டிஜிட்டல் உலகில் தொலைநோக்குப் பார்வையோடு செயல்படுவது அவசியமாகிறது. எந்தவொரு துறையும் வளர்ச்சி அடைய ஆழமான ஆய்வும், தரவுப் பகுப்பாய்வும் முக்கியம். டிஜிட்டல் மயமாகிவிட்டபோதும் தரவுகளைப் பாதுகாப்பதும் தகவல் சேகரிப்பதும் அவசியம். ஒரு துறையில் ஆராய்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்பதால், ஆராய்ச்சிக் கல்வி சார்ந்து இயங்கும் திட்டங்களில் மாணவர்கள் அதிகம் பங்கெடுக்க வேண்டும். இதற்காக எழுத்துத் திறன், மொழித் திறன்களைப் பட்டப்படிப்பு படிக்கும்போதே வளர்த்துக்கொண்டால் இத்துறையில் ஜொலிக்கலாம்.

வழிகாட்டி (Motivator) - இணையப் புரட்சியின் புது பரிமாணமாகச் சமூக ஊடகம் புது வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. இதில் சாதக, பாதகம் இரண்டும் இருக்கும் என்பதால் மிகுந்த பொறுப்போடு களமாடுவது அவசியம். யூடியூபர், இன்புளூயென்சர் எனப்படும் சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் எழுத்து, ஒலி, ஒளி வடிவங்களில் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்வதன்மூலம் பெரும் கூட்டத்தைச் சென்றடைய முடியும்.

எனவே, அவரவர் தத்தம் துறையில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தால் சமூக வலைதளம் மூலம் அறிவைப் பகிரலாம். போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது, தயார் ஆவது, பாடங்களைப் படிப்பதற்கான வழி முறைகள் போன்றவற்றைப் பற்றிப் பகிரலாம். இதனால் சமூக வலைதளங்களில் மாற்றத்தை உண்டாக்குவது மட்டுமின்றி பிறருக்குப் பயனுள்ள வகையிலும் செயல்பட முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x