Published : 11 Feb 2025 03:44 PM
Last Updated : 11 Feb 2025 03:44 PM
பிப்.5: ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாயின.
பிப்.5: டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 57.70 சதவீத வாக்குகள் பதிவாயின.
பிப்.5: அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க 3 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. இதன்படி ககன்தீப் சிங் (ஊரக வளர்ச்சித் துறை செயலாளர்), கே.ஆர். சண்முகம் (மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகானமிக்ஸ் முன்னாள் இயக்குநர்), பிரத்திக் தயாள் (நிதித் துறை துணை செயலாளர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிப்.5: பழம் பெரும் நடிகையும் நடிகர் ஏவி.எம். ராஜனின் மனைவியுமான புஷ்பலதா (87) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
பிப்.5: அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்களை கை, காலில் விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது சர்ச்சையானது.
பிப்.6: தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் 3 ஆண்டாக நிறுத்தி வைத்தது ஏன் என்பது குறித்து ஆளுநர் ஆதாரப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.6: அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்கள் வெளியேற்றப்படுவது புதிதல என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். கடந்த 16 ஆண்டுகளில் அமெரிக்காவிலிருந்து 15,652 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
பிப்.7: தமிழக அரசின் மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரத்தில் அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
பிப்.7: கடல் ஆமைகள் இறப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமமிழ்நாடு அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
பிப்.7: அமெரிக்காவில் பிறப்பு குடியுரிமையை ரத்து செய்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவுக்கு மேரிலேண்ட், சியாட்டில் நீதிமன்றங்கள் தடை விதித்தன.
பிப்.7: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வங்கிக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% ரிசர்வ் வங்கி குறைத்தது.
பிப்.8: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியது. இதன்மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது.
பிப்.8: ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இத்தேர்தலில் நாதக வேட்பாளர் உள்பட 45 பேர் வைப்புத் தொகையை இழந்தனர்.
பிப்.8: பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்படும் நபர், குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கூடாது என்று சிறப்பு நீதிமன்றங்கள், அமர்வு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிப்.9: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 31 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பிப்.9: மணிப்பூரில் இன கலவரம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் கழித்து மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிப்.10: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதம் லட்டு தயாரிக்க வழங்கப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் திண்டுக்கல் ஏ.ஆர். டயரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் உள்பட 4 பேரை சிபிஐ கைது செய்தது.
பிப்.10: தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT