Published : 10 Feb 2025 06:29 PM
Last Updated : 10 Feb 2025 06:29 PM
அமெரிக்க உளவியலாளர் டேனியல் கோல்மென் கருத்துப்படி ஒருவரின் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ என்பது தன்னுடைய உணர்வுகளை அறிந்துகொள்ளும் சுய விழிப்புணர்வு, உணர்வுகளைச் சரியாக நிர்வகிப்பது, தன்னூக்கம், பிறரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடப்பது, பிறருடனான உறவுகளைச் சரியாகக் கையாளும் திறன் ஆகிய 5 பண்புக் கூறுகளைக்கொண்டது என விளக்குகிறார்.
சுய விழிப்புணர்வு (Self-awareness): 'தன்னை அறிதல்' என்பது இங்கே தன்னுடைய உணர்வுகளை அறிவது. உங்களுடைய கோபம், ஏமாற்றம், மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, பயம் போன்ற உணர்வுகளை எவ்வாறு கையாள்கிறீர்கள்? பிறர் வெளிப்படுத்தும் இந்த உணர்வுகளுக்கு எவ்வாறு எதிர்வினை ஆற்றுகிறீர்கள் என்பதை முதலில் அறிந்துகொள்ளுங்கள். வெவ்வேறு சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள், சில விஷயங்கள் உங்களை எப்படி எதிர்வினையாற்ற வைக்கும், அன்றாட நிகழ்வுகள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பவற்றைக் குறித்து உங்களை நீங்களே கண்காணித்து நன்கு தெரிந்துகொள்ளுங்கள். இதனால் பிரச்சினைகளின்போது மோசமான எதிர்வினை ஆற்றாமல் சம மனநிலையில் (Emotional Balance) இருந்து ஆக்கப்பூர்வமாகப் பதிலளிக்கவும், பிரச்சினைகளைக் கையாளவும் முடியும். இது உணர்வுசார் நுண்ணறிவுக்கான முக்கியமான பண்புக்கூறுகளில் அடிப்படையானது.
சுயக்கட்டுப்பாடு (Self-control): நீண்டகால லட்சியங்களை அடைய சுயக்கட்டுப்பாடு அவசியம். ’உங்கள் வேலையில் வெற்றியும் தோல்வியும் திறமையால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதில்லை. மனப்பான்மையாலும் நிர்ணயிக்கப்படுகிறது. மனப்பான்மை என்பது மனக்கட்டுப்பாட்டின் விளைவாக உருவாகிறது’ என்கிறார் உளவியல் நிபுணரான டாக்டர். வால்டர் ஸ்காட். ’மனப்பான்மை வலிமை பெறும்போது அது சூழ்நிலைகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறது. அதற்கு மனக்கட்டுப்பாடுதான் அவசியம்’ என்கிறார் உளவியலாளர் நார்மல் வின்சென்ட் பீலே.
மனிதர்களால் தங்கள் நடத்தையைக் கட்டுப்படுத்த முடியும். சில ஆசைகளை அல்லது தேவைகளைத் தள்ளிப்போடுவதும், தாமதப்படுத்துவதும் சுயக்கட்டுப்பாடுதான். உடனடியாக ஒரு பொருளை வாங்க வேண்டும், நண்பர்களுடன் சேர்ந்து உடனடியாக சினிமா, சுற்றுலா போக வேண்டும், ஆன்லைனில் பொருள்களைப் பார்த்த உடனே 'ஆர்டர்' செய்ய வேண்டும் போன்ற எண்ணங்களைச் செயல்படுத்துவதைத் தள்ளிப்போடுங்கள். இது மனத்திருப்தியை ஒத்தி வைக்கும் நிலை (Delayed Gratification) எனப்படுகிறது. இதைப் போல அவ்வப்போது வாட்ஸ்-அப் அல்லது சமூக வலைதளங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பார்க்கும்படி சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ளுங்கள். மனக்கிளர்ச்சியுற்ற (Impulsive behaviour) நிலையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
தன்னூக்கம் (Self-reliance): தீவிரமான துக்கம், தோல்வி அல்லது ஏமாற்றம் ஆகியவற்றிலிருந்து மீண்டு நேர்மறை எண்ணங்களை உருவாக்கி, அடுத்த கட்டத்துக்குத் தொடர்ந்து பயணப்பட தன்னூக்கம் அவசியம். தோல்வி, ஏமாற்றங்களில் இருந்து என்ன தவறு செய்தோம் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். வில்லியம் எயிஷ்லர் வாட்சன் எழுதிய ‘Lights from many lamps’ என்கிற புத்தகத்தைப் படிக்கலாம். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது வாழ்க்கையை மாற்றிய புத்தகங்களுள் ஒன்றாக இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடுகிறார்.
பச்சாதாபம் (Empathy): அடுத்தவர் சூழலில் தன்னைப் பொருத்திப் பார்த்து அனுதாபத்துடனும், ஆறுதலாகவும் நடந்துக்கொள்வது பச்சாதாபம். மற்றவரின் உணர்வுகள், செயல்களை அவர்களின் கோணத்திலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் கூறியதைப் போல துன்புற்றவன் துன்பம் தனக்கே நேர்ந்ததாகக் கருதி, அவரின் வலி உணர்வுகளை உணர்வதாகும். அவர்கள் கூறுவதை உணர்வுபூர்வமாக, முழுமையாக, முழு அனுதாபத்துடன் கேட்டலே போதுமானது. பச்சாதாபத்துடன் நடந்துகொள்வதால் பிறருடன் உறுதியான, நம்பகமான பிணைப்பை உருவாக்க முடியும். பச்சாதாபத்துடன் நடந்துகொள்வது ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய முக்கியப் பண்பாகும்.
சமூகத் திறன்கள் (Social Skills): சமூகத் திறன்கள் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ளவும், திறனை வளர்க்கவும் ஒரு புத்தகத்தைப் படித்தாலே போதுமானது. டேல் கார்னகி எழுதியுள்ள ‘How to win friends and Influence People’ என்கிற புத்தகம்தான் அது. இந்தப் புத்தகத்தை அவசியம் படியுங்கள். பணிபுரியும் இடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவைப் பேணவும், அலுவலக மேலாளர், முதன்மைச் செயல் அலுவலர் (CEO), குழுத்தலைவர் ஆகியோருடனான கருத்து வேறுபாடுகளைச் சமயோசிதமாகத் தீர்க்கவும், மோதல்களைத் தவிர்ப்பதற்கும் தேவையான ஆலோசனைகள் இந்தப் புத்தகத்தில் தெளிவாக உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
ஏன் அவசியம்? - இந்த 5 திறன்களைப் படிக்கும்போதும் ஷேக்ஸ்பியரின் 'ஜூலியஸ் சீசர்' நாடகத்தின் ‘மார்க் ஆன்டெனி’ கதாபாத்திரம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். உணர்வுசார் நுண்ணறிவின் 5 பண்புகளைப் படித்த பின்பு ‘ஜூலியஸ் சீசர்’ நாடகத்தின் ‘Act – III Scene – 1 & 2)’ பகுதியைப் படித்துப் பாருங்கள். யூடியூபிலும் இதன் காணொளியைக் காணலாம்.
உயர்ந்த கல்வித் தகுதியும் அதிக புத்திசாலித்தனமும் பெற்றிருப்பதால் மட்டுமே ஒருவர் வெற்றியாளர் ஆகிவிட முடியாது. உணர்வுசார் நுண்ணறிவுத் திறனை வளர்த்துக்கொள்வதன் மூலம் உங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சூழலுக்கு ஏற்றவாறு சரியாகவும், நேர்மறையாகவும் சிந்திக்கவும், செயலாற்றவும் முடியும். உங்கள் உணர்வுகளை, எண்ணங்களுடன் தொடர்புபடுத்தும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும், பகுத்தறிவுத் திறனுடன் சரியான முடிவுகளை எடுப்பதும் எளிதாகிறது.
'IQ' உங்களுக்கு ஒரு வேலையைப் பெற்றுத்தருகிறது என்றால் ‘EQ’ அந்த வேலையில் உங்களுக்கு வெற்றியைத் தரும் என உளவியலாளர்கள் சொல்கின்றனர். போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்பவர்களுக்கு நம்பிக்கையும், ஆரம்பக்கட்ட தோல்விகளால் துவண்டு போகாத தளராத முயற்சியும் அவசியம் என்பதை இது உணர்த்தும். சில நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், வெறுமை, மனச்சோர்வு ஆகியவற்றைப் பெருமளவு குறைக்கவும், உறவினர்கள் நண்பர்களுடனானத் தனிப்பட்ட உறவுகள் மட்டுமன்றி, சமூகத்துடனும் வலுவான உறவுகளை உருவாக்கவும், உடல், மன ஆரோக்கியத்துக்கும் ஒருவர் ‘உணர்வுசார் நுண்ணறிவு’ அவசியம்.
- கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT