Published : 05 Feb 2025 06:06 AM
Last Updated : 05 Feb 2025 06:06 AM
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள வாசிப்பு இயக்க புத்தகங்கள் குழந்தைகளை நிஜமாகவே வாசிக்கத் தூண்டுகின்றன. நான் வகுப்பு எடுக்கும் நான்காம் வகுப்பில் தரப்பட்ட அத்தனை புத்தகங்களையும் வாசித்து முடித்துவிட்ட ஏழெட்டு மாணவர்கள் உள்ளனர். ஒரு நூலக அடுக்கை முழுமையாக அவர்கள் காலி செய்துவிட்ட பெருமிதத்தை, இதற்கு முன் நாங்கள் சந்தித்திருக்கவில்லை.
வாசிப்பும் விளையாட்டும்: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கப் பள்ளிக் கல்வித் துறையால் ‘வாசிப்பு இயக்கம்’ தொடங்கப்பட்டது. திக்கித் திணறி வாசிக்கும் குழந்தைகளுக்கும்கூடப் பிடித்த புத்தகம் என்று சொல்லிக்கொள்ள இந்தத் தொகுப்பில் பல புத்தகங்கள் இருந்தன.
புதுமைத் திறன் கொண்ட ஓர் ஆசிரியர் இந்தப் புத்தகங்களைக் கொண்டு ஒரு குழந்தையின் வாசிப்பைப் படிப்படியாக மேம்படுத்தும் படிக்கற்களாக மாற்றும் வகையில் ஒரு வாசிப்பு வரிசையை உருவாக்க முடியும்.
என் வகுப்பில் வாசிப்புச் சவால் உடைய குழந்தைகளை என்னோடு வட்டமாக உட்காரவைத்து, வாசிப்பு இயக்கப் புத்தகங்களின் தலைப்பை மட்டும் படிக்கும் விளையாட்டை விளையாடினோம். தற்போது என் வகுப்பில் உள்ள அத்தனை குழந்தைகளுக்கும் வாசிப்பு இயக்கப் புத்தகங்களின் தலைப்பைப் படிக்கத் தெரியும் என்கிற நிலை எனக்கே பரவசம் அளிப்பதாக இருந்தது. எல்லாப் புத்தகங்களின் அட்டையையும் வண்ணத்தில் நகல் எடுத்து வகுப்பறை சுவரில் வரிசையாக ஒட்டிவைத்திருக்கிறேன்.
நித்தமும் அது கண்ணில் படுகிறது. விளையாட்டாகக்கூட வாசிக்கிறார்கள். பாடல்களை ஒருமுறை நான் பாடிக்காட்டி விட்டு, மறுமுறை பார்த்துப் படித்துக்கொண்டே இரண்டிரண்டு பேராக பாட அழைத்தபோது வாசிப்பு சவாலைத் தாண்டுவதற்குப் பாட்டின் சந்தம் நன்றாக உதவுவதை உணரமுடிந்தது. சில நேரம் குழுவாகப் பாட முனையும் அவர்களின் தீவிரமும் வெளிப்படுகிறது. வாசிக்கும் திறன் வளர்வதை அறியாமலேயே விளையாட்டாக வாசிப்பில் அவர்கள் லயித்துப்போவதை உணரமுடிகிறது.
வாசிப்பின் சிறப்பு: ஒன்றைப் படிக்கும்போது அது தங்களுக்குப் பரிச்சய மானதாகவும், தாங்கள் விரும்புவதாகவும் அமைந்துள்ள கதைக்கருக்களைக் கொண்டுள்ளது பாராட்டப்பட வேண்டியது. பலரையும் கவர்கின்ற ஓவியமோ உற்ற துணையாக உள்ளது. பதின்பருவச் சிறுவன், பதின்பருவச் சிறுமி, பாலியல் சீண்டல் போன்றவற்றை நாசூக்காகப் புரியவைக்கும் துணிச்சல் போன்ற புத்தகங்கள், புரிய வைக்கவேண்டிய கருத்துகளை வாசிப்பின் மூலமே 'பளிச்' எனப் புரியவைக்கின்றன.
புத்தகங்களின் பக்க அளவும் வடிவமைப்பும் குழந்தைகளை நன்கு புரிந்துகொண்டு செய்த முயற்சியாகத் தெரிகிறது. எந்தப் புத்தகத்தையும் பாதியில் விட்டுவிடாமல் முழுதாகப் படித்து முடித்துவிடும் அளவில் இந்தப் புத்தகங்கள் இருப்பது குழந்தைகளை வெற்றியாளர்களாக உணரவைக்கிறது.
வாசிப்பு இயக்கப் புத்தகங்களில் இலக்கிய அம்சம் முதன்மை அல்ல; குழந்தைகள் வாசிக்க வேண்டும் என்பதே முதன்மை என்று வாசிப்பு இயக்கக் கையேட்டில் அழுத்தமாக கூறப்பட்டிருந்ததன் அர்த்தம் பிடிபட்டது. புத்தகத்தைப் படித்த ஒரு குழந்தை, படிக்க இயலாத மற்றொரு குழந்தைக்கு படம் காட்டிச் சொல்லித் தரும் அதிசயம் வகுப்பில் இயல்பாக நடைபெறுகிறது.
வாசிக்கப் பழக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஒரு காலத்தில் அகராதியின் மூன்றெழுத்துச் சொற்களை ‘ஃபிளாஷ் கார்டு’கள் ஆக்கிக்கொண்டு முரட்டு உழைப்பை கொட்டிய காலத்தை எல்லாம், வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் எளிமையாக சிரித்தபடி கடந்துவிடுகின்றன. வாசிப்பைப் பழகுவதற்கு என்ன செய்ய வேண்டும்? வாசிக்க வைக்க வேண்டும்.
வாசிப்பில் ஈடுபடுத்த வேண்டும். சின்னசின்ன சொற்களின் வழி, குட்டிக்குட்டி வாக்கியங்களின் வழி, மகிழ்ச்சியான கதைகளின் வழி வாசிப்பில் ஈடுபடுத்த வேண்டும். வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் இதை அமைதியாகச் சாதித்து காட்டுகின்றன.
- கட்டுரையாளர் ஆர்.சிவகுமார், மதுரையைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளி ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT