Published : 29 Jan 2025 06:17 AM
Last Updated : 29 Jan 2025 06:17 AM
மனிதனைச் ‘சமூக விலங்கு’ என்கிறோம். இதன் முழுமையான அர்த்தம் என்னவென் றால் விரும்பியோ விரும்பாமலோ ஒரு மனிதன் சக மனிதனோடு அல்லது மற்ற மனிதக் குழுக்களோடு உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூல மாகவே மனித இனமாகப் பரிணாம வளர்ச்சி அடைய முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திக்கொள்ளும் உறவு, தனி மனித விருப்பு வெறுப்புகளைத் தாண்டி புறக் காரணிகள், பொருளாதாரச் சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பதின்பருவத்தில் உறவுகள்: பள்ளிக்குச் செல்லும் பதின் பருவத்தினர் புதிய நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் ஆசிரிய ரோடு, நண்பர்களோடு இந்தப் பருவத்தில்தான் சமூக உறவுகளைச் சுயமாக வளர்த்துக்கொள்கின்றனர். ‘Social Relationship’ எனப்படும் இந்தச் சமூக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும்போது சில சிக்கல்கள் எழலாம்.
படிப்பில், விளையாட்டில், கற்றல் திறனில் அவர்களது ஈடுபாடு குறையும்படியான கவனச் சிதறல்கள் ஏற்படும் காலம் இது. ‘Relationship issues’ எனப்படும் உறவு சார்ந்த சிக்கல்கள் இளைய தலை முறையினர் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானதாக இருப்பதால் அவற்றைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொள்வது நல்லது.
இந்தக் குழப்பமான காலக்கட் டத்தில் நல்ல உறவுகளைத் தீர்மானிப்பது எது? எவ்வாறு அதனைப் பாதுகாப்பது? விருப்ப மில்லாத ஓர் உறவு முறையைவிட்டு விலக லாமா? எப்படி விலகினால் சரியானதாக இருக்கும்? தீர்க்கமான இணைப்பு இல்லாமல் உறவு முறைக்குள் குழப்பம் ஏற்படுவது சரியா? அதற்கு நான்தான் காரணமா? என்னால் ஓர் உறவு முறையில் சிக்கல் இல்லாமல் இருக்க முடியாதா போன்று பல கேள்விகள் எழலாம். இது இயல்புதான் என்பதைப் பதின்பருவத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவரின் பிறப்பு நிகழும் இடம், அவர் வளர்க்கப்படும் சூழல், பெற்றோரின் விருப்பு வெறுப்புகள், வாழும் சமூகத்தில் நிலவும் பாலியல் சார்ந்த மதிப்பீடுகள், பொருளாதார நிலை, திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என இவை அனைத்தும் பிறரை ஒருவர் அணுகும் விதத்தில் குறிப்பிட்ட அளவிற்குப் பங்காற்றுகின்றன.
குறிப்பாக ஒரே வயதைச் சேர்ந்தவரிடம் வளர்த்துக்கொள்ளும் உறவுகளில் வித்தியாசம் ஏற்பட இவை முக்கியக் காரணிகளாக விளங்குகின்றன. உறவுகளைப் பேணுவதிலும் அதைத் தொடர்வதிலும் ஏற்படும் பிரச்சினைகள் ஒருவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கலாம். இதைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற மனநிலையே பெரும்பாலானவர்களின் மனநிலையாக உள்ளது. ஆனால், பிரச்சினை யான உறவுகளால் ஒருவரின் படிப்பு பாதிக்கப்படலாம், எந்த ஒரு செயலிலும் முழு ஈடுபாட்டோடு இருக்க முடியாமல் போகலாம்.
புதிரான இந்தப் பதின்பருவத்தில் ஏற்படும் உறவுமுறைச் சிக்கல் களால் ஒருவரின் மனநிலை ஆரோக் கியமில்லாமல் இருப்பதைக் கவனிக்கும்போது பெற்றோரும் ஆசிரியரும் அவரை மனநல மருத்து வரிடம் அழைத்துச் செல்வது நல்லது. வெளிப்படையான கலந்துரையாட லில், தெளிவான வழிகாட்டுதல் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
கட்டாயம் இல்லை: என்னைச் சந்திக்க வருபவரிடம் ‘இந்த உலகில் மிகவும் கடினமான விஷயம் எது?’ என்று கேள்வி கேட்பது உண்டு. பல்வேறு பதில் களைக் கேட்டிருக்கிறேன் என்றாலும் ஒரு மனநல மருத்துவராகச் ‘சக மனிதரின் நம்பிக்கையையும் புரிதலை யும் பெறுவதுதான் இந்த உலகில் கடின மான விஷயம்’ என நினைக்கிறேன். எந்த உறவாயினும் பரஸ்பரம் மரியாதை, புரிதல், நம்பிக்கை இவை மூன்றுமே அந்த உறவை நீடிக்கச் செய்யும்.
பெற்றோர், உடன் பிறந்தவர், ஆசிரியர், நண்பர் என யாரிடமும் உங்களின் உறவு முறை சிக்கலாக இருக்கலாம். அதற்கு நீங்கள் மட்டுமே காரணம் என முன்தீர்மானித்துவிடாதீர்கள். உறவு முறைகளில் ‘ஜனநாயகத்தன்மை’ என்பது அவசியம். ஓர் உறவுமுறை ஆரோக்கியமானதாக நீடிப்பதற்கும், சிக்கல் ஆவதற்கும் சம்பந்தப்பட்ட இருவரின் பங்கும் இருக்கும். இணைந்து இருப்பதற்கு இருவருக் கும் உரிமை இருப்பதுபோல பக்குவத்துடன் பிரிவதற்குமான உரிமை யும் இருக்கிறது என்பதை சம்பந்தப் பட்ட வர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
(தொடர்ந்து பேசுவோம்)
- addlifetoyearz@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT