Published : 22 Jan 2025 06:06 AM
Last Updated : 22 Jan 2025 06:06 AM
சாகச உணர்வு கொண்ட இளம் பருவத்தினர் வருங்காலத்தில் தாங்கள் ஒரு விமானியாக வேண்டும் என்று தீர்மானிப்பதுண்டு. ‘பைலட்’ பணியில் நிறைய சம்பாதிக்கலாம் என்கிற காரணத்துக்காக அல்லது பல நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்பதற்காக விமானி ஆகும் கனவைச் சிலர் வளர்த்துக் கொள்வதுண்டு. ஆனால், விமானி ஆக விரும்புவோர் இந்த வேலை தொடர்பான முழு பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும்.
வேலைக்கான தகுதி: விமானியாகப் பணிபுரிய இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்கள் கொண்ட பிளஸ் 2 படிப்பில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த இரண்டு பாடங்களிலும் தலா ஐம்பது சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வேறு பல தகுதிகளும் தேவை.
ஆங்கிலம் சரளமாக அறிந்திருக்க வேண்டும். ஆணாக இருந்தால் குறைந்தபட்ச உயரம் 163.5 செ.மீ., பெண்ணாக இருந்தால் குறைந்தபட்ச உயரம் 162.5 செ.மீ., இருக்க வேண்டும். கண் பார்வை தெளிவாக இருக்க வேண்டும். முதல் கட்ட பயிற்சி, மாணவ பைலட் உரிமம் (SPL) என்பதற்கானது. இந்தியாவில் உள்ள எந்த ‘ஃபிளையிங் கிளப்’பில் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் இந்த உரிமம் தேவை.
இந்த உரிமத்தைப் பெற குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 16 வயதை எட்டியிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடமிருந்து உடல் தகுதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தச் சான்றிதழ் பெறுவதற்காகச் செய்யவேண்டிய பரிசோதனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த உரிமத்தைப் பெற்றவுடன் இந்திய அரசின் பொதுப் போக்கு வரத்து இயக்குநரகத்தால் (டிஜிசிஏ) அங்கீகரிக்கப்பட்ட விமானம் ஓட்டும் பயிற்சி நிலை யங்களில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து, அந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
பயிற்சி எப்படி? - முதலில் ‘ஏரோடைனமிக்ஸ்’ பாடம் குறித்த புரிதலை ஏற்படுத்துவார்கள். தவிர விமானிக்கான பயிற்சி எளிதானது அல்ல. நவீன விமானங்களை ஓட்டுவதில் பல சவால்கள் உண்டு. புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டியதிருக்கும். எழுத்துப்பூர்வ பாடத்தில் தேர்ச்சி பெற்றதற்குப் பிறகு ‘simulation’ நடைபெறும்.
அதாவது பார்ப்பதற்கு உண்மை போலவே தோற்றமளிக்கும் ஒரு சூழலில் இயங்குவது. நீங்கள் எந்த விமானத்திலும் ஏற மாட்டீர்கள். ஆனால், விமானத்தின் உள்புறம் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு சூழலில் விமானி இருக்கையில் உட்கார்ந்து, கருவிகளை நீங்கள் இயக்க வேண்டும்.
இந்தப் பயிற்சியின்போது உங்களுக்கு அளிக்கப்படும் கட்டளைகளைச் செயல்படுத்த வேண்டும். இதுபோல வேறு சில சூழல்களும் உருவாக்கப்படும். அப்போது கட்டுப்பாட்டு அறையுடன் நீங்கள் எப்படித் தொடர்புகொள்ள வேண்டும் என்பது கற்றுத் தரப்படும். இப்படி மாணவர் உரிமம் பெற்றவர்கள் காவல் துறையிடமிருந்து பாதுகாப்பு அனுமதி (security clearance) பெற வேண்டும்.
அடுத்து என்ன? - இரண்டாவது கட்டமாகத் தனியார் விமானி உரிமம் (PPL). இதைப் பெறுவதற்கு நீங்கள் கணிசமான பணத்தைச் செலவழிக்க வேண்டியதிருக்கும். ஒரு மணி நேர விமானப் பயிற்சிக்குச் சுமார் ரூ.8,000 என்கிற வகையில் இப்பயிற்சியை முடிக்க சுமார் ரூ.5,00,000 செலவாகிவிடும். குறைந்தது 17 வயது நிரம்பி இருந்தால்தான் இந்த உரிமம் வழங்கப்படும்.
மூன்றாவது கட்டம் வணிக பைலட் உரிமம் (CPL). இதைப் பெற 190 மணி நேரம் விமானத்தை இயக்கி இருக்க வேண்டும். 18 வயதைத் தாண்டியிருக்க வேண்டும். ஆரம்பநிலை விமான ஓட்டுநருக்கு மாத ஊதியம் ரூ. 1 லட்சம் இருக்கக்கூடும். வேறு பல படிகளும் வசதிகளும் கிடைக்கும்.
காலப்போக்கில் மூத்த விமானியாகப் பதவி உயர்வு பெற்று பெரிய விமானங்களை ஓட்டும்போது மாத ஊதியம் ரூ.10 லட்சத்தைத் தாண்டக் கூடும். ஆனால், இதற்கெல்லாம் பெரும் ‘முதலீடு’ தேவைப்படும். விமான ஓட்டுநர் பயிற்சிக்காக நீங்கள் நிறைய பணம் செலவு செய்ய வேண்டியதிருக்கும். சுமார் ரூ.40 லட்சம் வரை இதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும்.
- aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT