Published : 21 Jan 2025 12:57 PM
Last Updated : 21 Jan 2025 12:57 PM
ஜன.9: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி. நாராயணன் நியமிக்கப்பட்டார்.
ஜன.9: பிரபல பின்னணி பாடகர் பி. ஜெயச்சந்திரன் (80) உடல்நலக் குறைவால் திருச்சூரில் காலமானார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 16,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.
ஜன.9: இடஒதுக்கீடு பயன்களை ஏற்கெனவே பெற்று முன்னேறிய ‘கிரீமிலேயர்’ பிரிவினரை இடஒதுக்கீடு சலுகையிலிருந்து நீக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள்தான் எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஜன.10: 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்களைத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
ஜன.12: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) புதிய செயலாளராக தேவஜித் சைகியா தேர்வானார்.
ஜன.13: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேள தொடங்கியது.
ஜன.16: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய 8ஆவது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஜன.16: விண்வெளியில் 2 விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பணியைச் செய்து இஸ்ரோ வரலாற்றுச் சாதனை படைத்தது. ரஷ்யா, அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து ‘டாக்கிங்’ தொழில்நுட்பம் கொண்ட 4ஆவது நாடு இந்தியா.
ஜன.16: ஓராண்டுக்கு மேல் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இரு தரப்பும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்துள்ளன.
ஜன.17: தமிழக அரசு - ஆளுநர் மோதலுக்கு நீங்களாகவே சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண நேரிடும் என்று இரண்டு தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஜன.17: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜன.17: உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த டி.குகேஷ், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்ற மனு பாகர் உள்பட 4 பேருக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதும், 32 பேருக்கு அர்ஜூனா விருதையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
ஜன.18: ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 50 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 65 லட்சம் பேருக்கு சொத்துரிமை அட்டைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
ஜன.18: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கில் தொடர்புடைய ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை உத்தரவிட்டது.
ஜன.18: கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சஞ்சய் ராய் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜன.19: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இரு தரப்புக்கும் ஓராண்டுக்கும் மேலாகப் போர் நீடித்தது. இப்போரில் பாலஸ்தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர்.
ஜன.20: கேரளத்தில் ராணுவ அதிகாரியைத் திருமணம் செய்வதற்காக இரண்டு ஆண்டுகளாகக் காதலித்த காதலன் ஷரோன்ராஜூக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஸ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஜன.20: அமெரிக்கவின் 47ஆவது அதிபராகக் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார்.
ஜன.20: பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தராகண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT